தி.மு.க. கட்சி நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடக்கிற இடங்களில் போட்டியாக பா.ஜ.க. கொடிகளைக் கட்டி வம்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நாகர்கோவில் மேயர் மகேஷின் பேச்சு, மேலும் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

நாகர்கோவிலில் கடந்த 7-ஆம் தேதி தி.மு.க. சார்பில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கக் கூட்டத்தில் குமரி கி.மா.செ.யும் நாகர்கோவில் மேயருமான மகேஷ், "பா.ஜ.க.வினருக்கு ஒண்ணு சொல்லிக்கொள்கிறேன். நான் மேயர் மற்றும் மாவட்டச் செயலாளராக இருக்கிற இங்கு, நாங்கள் நிகழ்ச்சிகள் நடத்துறபோது அதற்கு ஊறு விளைவிக்க வேண்டுமென்று நினைத்தால்...'' என்றவர், கழுத்தை அறுப்பேனென்று செய்கை காட்டிப் பேசியதாகக் கூறி, மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க. வினர், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

nn

இரு கட்சியினரிடையே நடந்து வரும் கர்...புர்... யுத்தம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க.வினர்... "தி.மு.க.வை சீண்டி பா.ஜ.க. வளரலாம் என நினைக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியின் தெற்கு மண்டலத் தலைவராக மேயர் மகேஷால் நியமிக்கபட்ட பா.ஜ.க. பொருளாளர் முத்துராமன், அவருக்குக் கீழ் வரும் 13 வார்டு களிலும் தி.மு.க. நிகழ்ச்சி நடத்தினால் அங்கு பா.ஜ.க. நிகழ்ச்சி இல்லாமலேயே போட்டியாக பா.ஜ.க. கொடியைக் கட்டுவார்கள். அதுவே மாநகராட்சி நிகழ்ச்சியாக இருந்தால், அது பா.ஜ.க. ஏற்பாட்டில் நடக்கிற நிகழ்ச்சி என மக்களிடம் பரப்பி, அங்கு கொடியும் கட்டி, அரசு நிகழ்ச்சியை பா.ஜ.க. நிகழ்ச்சி போல் காட்டிவிடுவார்கள். இதை பலமுறை தி.மு.க.வினர் கண்டித்துள்ளனர். எனினும் கேட்பதாக இல்லை.

Advertisment

இந்த நிலையில்தான் கடந்த 2-ம் தேதி மேயர் மகேஷின் 4-ம் வார்டில் நடந்த வார்டு சபா கூட்டத்தையொட்டி, அங்கு கட்டப்பட்டிருந்த தி.மு.க. கொடிகளுக்குப் போட்டியாக பா.ஜ.க. கொடியை திடீரென்று கட்டினார்கள். மேலும், தி.மு.க. கொடிகள் எங்கெல்லாம் கட்டப்பட்டி யிருந்ததோ, அங்கெல்லாம் இடையூறாக பா.ஜ.க. கொடியைக் கட்டினார்கள். இதில் பா.ஜ.க. கொடி களில் ஒன்றிரண்டு காற்றில் கீழே விழுந்துள்ளது. அதை தி.மு.க.வினர்தான் பிடுங்கினார்கள் என எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் கொடுத்ததோடு, நடவடிக்கை எடுக்க ஆய்வாளரையும் மிரட்டியுள்ளார்.

இதேபோல்தான் வார்டு, நகரம், மாவட்டம் என தி.மு.க.வினர் நிகழ்ச்சி நடத்தும்போதெல்லாம் சீண்டிக்கொண்டேயிருக்கின்றனர். இதைத்தான் மேயர் மகேஷ் குறிப்பிட்டு எச்சரித்தாரே தவிர, கழுத்தை அறுப்பேன் என எந்த செய்கையிலும் கூறவில்லை. பா.ஜ.க.வினர் தவறுதலாகப் புரிந்துகொண்டு, நடவடிக்கை எடுக்கக் கூறி போலீசாரை மிரட்டுகிறார்கள்'' என்றனர்.

Advertisment

ff

பா.ஜ.க.வினர் கூறும்போது, "4-ம் வார்டு பா.ஜ.க. கிளைக் கூட்டம் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த தால்தான் அங்கு பா.ஜ.க. கொடி கட்டி யிருந்தோம். இதற்கும் தி.மு.க.வினர் நடத்திய நிகழ்ச்சிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே பா.ஜ.க. கொடியை தி.மு.க.வினர் பிடுங்கி எறிந்தது குறித்து புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. "நான்தான் அந்த கொடியைப் பிடுங்கி எறிந்தேன், என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள்' என்ற மேயர் மகேஷ், இப்போது, கழுத்தை அறுப்பேன் என மிரட்டியிருக்கிறார்'' என்றனர்.

இதுகுறித்து மேயர் மகேஷ் கூறும்போது... "நான் 26 ஆண்டுகளாக தி.மு.க.வில் இருந்து வருகிறேன். முதல்வரின் வழிகாட்டுதலில் வந்த எனக்கு அரசியல் நாகரிகம் நன்றாகத் தெரியும். அப்படி ஒரு வார்த்தையை நான் பேசவில்லை. அதை பா.ஜ.க.வினர் தவறாக எடுத்துப் பேசி வருகிறார்கள்'' என்றார்.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கூறும்போது... "அவர் அப்படிப் பேசவில்லை எனக் கூறுவதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? அவர் பேசிய வீடியோ ஆதாரம் எல்லோர் கையிலும் இருக்கிறது. 4-ம் வார்டில் கிளைக் கூட்டத்தில் கட் டப்பட்டிருந்த பா.ஜ.க. கொடி யை நான்தான் பிடுங்கி எறிந்தேன்னு அவரே சொல்லும்போது, அப்போதே நாங்க கொடுத்த புகாருக்கு போலீசார் அவர்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது இப்படி பேசியிருக்கமாட்டார். இன்னைக்கு இவர் பேசினார், நாளைக்கு இன்னொருத்தர் பேசுவார், அடுத்து பா.ஜ.க.வில் இருந்து பேசுவாங்க. அப்படி மாறி, மாறி பேசினால் என்ன நடக்கும்? இது தொடரக்கூடாது என்பதற்காகத்தான் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறோம். இதை நாங்க சும்மா விடப்போறதும் இல்லை'' என்றார்.

இந்த நிலையில், இதைக் கண்டித்து 10-ம் தேதி பா.ஜ.க. நடத்திய கண்டனக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் தர்மராஜ், "மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யவைப்பேன்... இல்லையென் றால் என் காதை அறுத்து வைப்பேன். டெல்லிக்கு ஒரு போன் போட்டால் போதும், உடனே வழக்குப் பதிவு செய்வார்கள். இங்க என்ன போலீஸ், இதவிட பெரிய போலீஸ் டெல்லியில் இருக்கு என போலீசையும், தி.மு.க.வையும் மிரட்டும் தொனியில் பேசி, தி.மு.க.- பா.ஜ.க. மோதலுக்கான வீரியத்தைக் கூட்டியிருக்கிறார்'' என்றனர் போலீசார்.

-மணிகண்டன்