ட்டட வேலைகளில் ஈடு படும்போது நிகழும் விபத்துக்களுக்கு 90% தொழிலாளர்களுக்கு இழப்பீடுகள் கிடைப்பதில்லை. தன் கணவனுக்கு நேர்ந்த விபத்திற்கு நீதி கேட்டு, கடந்த ஐந்து மாதங்களாக இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு போராடும் ராணி என்ற பெண் நக்கீரனைத் தொடர்பு கொண்டார்.

"என் பெயர் ஆரோக்கிய புஷ்பராணி, கடலூர் மாவட்டம்.

பத்து வருசத்துக்கு முன்னாடி கணவர் ஜேம்ஸ் கிறிஸ்டியோடு சென்னை வந்தேன். அண்ணாநகர், சாந்தி காலனி, 18-வது, மெயின் ரோடு, நியூகாலனில வாடகைக்குக் குடிவந்தோம். என் கணவர் பெயிண்டராக கூலி வேலைசெய்து குடும்பத்தை நடத்திவந்தார். எங்களுக்கு இரு குழந்தைகள்.

Advertisment

cc

சமீபத்தில் விருகம்பாக்கத்தை சேர்ந்த காண்ட்ராக்டர் அண்ணாமலை, குமரேசனிடம் வேலை செய்துவந்தார். கடந்த ஜூன் 27-ஆம் தேதி குமரேசனுடன் தி.நகர், பாண்டிபஜார், ராமன் தெருவில் பெயிண்டர் வேலைக்குப் போனார். பதினொரு மணி இருக்கும். கணவர் தவறி விழுந்ததா போன் வந்துச்சு. ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றார்கள். என் கணவர் ஜேம்ஸ் கிறிஸ்டியை பரிசோதனை செய்த டாக்டர், மாடியில் இருந்து தவறி விழுந்ததால் முதுகுத் தண்டு உடைந்து விட்டதாகவும், தற்காலிகமாகப் பெல்ட் போட வேண்டும் என்றும், பின்னர் ஆப்ரேஷன் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.

விசாரணைக்காக வந்த பாண்டிபஜார் ஆர்.4 காவல் உதவி ஆய்வாளர் சத்திவேல், "என் கணவர் தவறிவிழுந்தாரா? அல்லது தள்ளிவிடப்பட்டாரா..? இல்லை குடிபோதையில் விழுந்தாரா..?' என விசாரித்தார். என் கணவர் குடிபோதையில் இல்லை என்பதும், பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தவறிவிழுந்ததும் தெரியவந்தது. என்னிடம் கையெழுத்து வாங்கிட்டுப் போன அவர் இதுவரைக்கும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இது ஒருபக்கமிருக்க, கணவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்றால், அரசு மருத்துவக் காப்பீடு வேண்டும் என்று டாக்டர் தெரிவித்தார். 12 நாள் அலைந்துதிரிந்து அரசு மருத்துவக் காப்பீடு வாங்கினேன். பின்னர் ஜூலை மாதம் 12ஆம் தேதி ஆபரேஷன் செய்யப்பட்டது.

என் கணவருக்கு நடந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவுசெய்ய பலமுறை பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்தேன், வழக்குப் பதிவு செய்ய பலமுறை சென்றும், என்னை அந்த காவல் நிலையத்தில் விரட்டுவதிலே குறியாய் இருந்தனர். என் கணவரின் முதலாளி களான காண்ட்ராக்டர் அண்ணாமலை, குமரேசன் ஆகியோர் என்னிடம், "உன் கணவர் சரியாகும் வரை நாங்கள் செலவைப் பார்த்துக்கொள்கிறோம். காவல்நிலையத்தில் கேஸ் போட்டால் ஒன்றும் நடக்காது' என தெரிவித்தனர். சென்னையில் என் கணவரைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. ஆகவே என்னால் வழக்கு தொடர்பாக அலையமுடி யாது என்ற காரணத்தாலும், காண்ட்ராக்டர்கள் சிகிச்சைக்கு பணம் தருகிறேன் என்று கூறியதாலும், வழக்கு தொடர முயற்சி செய்யவில்லை.

என் வீட்டுக்காரர் ஒருவரது சம்பாத்தி யத்தில்தான் என் குடும்பம் பிழைத்துவந்தது. தற்போது வேறு வழியில்லாமல் என் இரு சிறிய குழந்தைகளையும் கணவரையும் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவருகிறேன். காண்ட்ராக்டர் குமரேசன், அண்ணா மலை இருவரும், பேசியபடி இதுவரை எந்த இழப் பீடும் தரவில்லை. எங்களால் வாடகைகூட செலுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். மீண்டும் காவல் நிலையம் சென்றும், வழக்குப் பதிவு செய்யாமல் கடந்த ஆறு மாதங்களாக இழுத்துடித்து வருகின்றனர்''’என்றார் கண்ணீர் மல்க.

Advertisment

cc

காண்ட்ராக்டர் குமரேசனை தொடர்புகொண்டோம். "நான் ஒண்ணும் தள்ளிவிடவில்லை. இது ஒரு விபத்து. கொண்டுபோய் ஹாஸ்பிடல்ல சேர்த்தேன், செலவுக்கு காசு கொடுத்தேன். கஷ்டப்பட்டு கலைஞர் காப்பீடு நான்தான் வாங்கிக் கொடுத்தேன். இதைவிட என்ன செய்யணும்?''’ என்றார்.

பாண்டி பஜார் காவல் ஆய்வாளர் கண்ணனை தொடர்புகொண்டோம். “சம்பவம் நடந்த ஜூன் மாதம், நான் இந்த காவல் நிலையத்தில் இல்லை. அவர்கள் நீதிமன்றம் மூலமாக டைரக்ஷன் வாங்கிவந்தால், எஃப்.ஐ.ஆர் போட்டுத் தருகிறேன்''’என்று முடித்துக்கொண்டார்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமாரிடம் பேசினோம். “"இந்த வாரியம் 1994-ல் இருந்து செயல்பட்டு வருகிறது. பதிவுசெய்துள்ள தொழிலாளர்களுக்கு விபத்து அல்லது மரணமோ ஏற்பட்டால் தொழிலாளர் நல வாரியம் சார்பில் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். வாரியத்தில் பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்களுக்கு இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும்போது அதில் ஏற்படும் இழப்புக்கு சட்ட ரீதியில் தொழிலாளர் நல கோர்ட், லேபர் கோர்ட் மூலம் வழக்கு தொடர்ந்து தொழி லாளர்களுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தருவோம். கட்டுமான தொழி லாளர் நல வாரியத்தில், இத்தகைய தொழிலாளர்கள் கட்டாயம் பதிவுசெய்வதுபற்றி தமிழக அரசு ஆலோசித்து வருகிறது''’என்றார்.

நல வாரியம் குறித்த விழிப் புணர்வு இல்லாத தொழிலாளர் களின் குடும்பங்கள் படும் துயரங்களுக்கு விரைவில் தீர்வு வரட்டும்!