கி.பி.1616-ஆம் ஆண்டிற்கு முந்தைய நாயக்கர் மன்னர்கள், ஆற்காடு நவாப் முதலியோர் காலத்தில் கட்டப்பட்டு, பல போர்களைக் கண்ட திருச்சி மலைக்கோட்டையை, கி.பி.1751-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் அன்வாரு தீன் புதுப்பித்துக் கட்டினார். அவருக்குப்பின், பதவிக்கு வந்த நவாப்பின் மகன் முகமது அலியை வீழ்த்த கோட்டையை முற்றுகை யிட்ட சந்தா சாகிப்பின் படை, ஆங்கிலேயர்களின் உதவியோடு கி.பி.1752-ல் கோட்டையைத் தகர்த்தது.
ராபர்ட் ஓம் என்பவர் எழுதிய குறிப்புகளின்மூலம், இந்த கோட்டை, 6 ஆயிரம் அடி நீளமும், 36 அடி அகலமும், கொண்ட பலம் வாய்ந்த அரணாக இருந்துள்ளது தெரியவருகிறது. வெளிக்கோட்டை வாயில் சுமார் 18 அடி உயரமும், 5 அடி அகலமும், உள்கோட்டை வாயில் 30 அடி உயரமும், 20 அடி அகலமும் கொண்டதாக இருந்திருக் கிறது. அதேபோல் உள்கோட்டைக் கும், வெளிக்கோட்டைக்கும் நடுவில் 25 அடி அகலப்பாதை இருந்திருக் கிறது. வெளிப்புறம் கோட்டையைச் சுற்றி பெரிய அகழி இருந்திருக்கிறது. அந்த அகழியும் 30 அடி அகலமும், 12 அடி ஆழமும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1903-ஆம் ஆண்டு, கோட்டையின் வடக்கு அகழியைத் தூர்த்துவிட்டு சாலை யாக்கி அதற்கு பட்டர்வொர்த் என்ற கலெக்டரின் பெயரை சூட்டினார்கள்.
மொத்தம் 3 மலைகளாக இருந்த மலைக்கோட்டையில் தற்போது மிஞ்சியிருப்பது ஒரு மலைதான். அதைத் தான் நாம் இன்றும் மலைக்கோட்டை என்று அழைக்கிறோம். மற்ற இரண்டு மலைகளையும் அலங்க மதில் என்று அழைப்பார்கள். இதில் உள்ள தாயுமானவர் சுவாமி திருக்கோவில், தர்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
1973-ஆம் ஆண்டு, மணவாளன் என்பவரால் 2 ஆயிரம் சதுர அடியில் தொடங்கப்பட்டது தான் சாரதாஸ் நிறுவனம். தற்போது அவருடைய மகன் ரோஷனால் நிர்வகிக்கப்படும் அந்நிறுவனத்தின் மொத்தப் பரப்பளவு 43 ஆயிரத்து 860 சதுர அடியாக உள்ளது. இதன் விரி வாக்கத்துக்காக, மலைக்கோட்டை யைச் சுற்றியுள்ள இடங்களைக் குறைந்தபட்ச விலைக்கு வாங்கி, அங்கு குடியிருந்தவர்களை வெளி யேற்றிவிட்டு வளைத்துப் போட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து நாம் களத்தில் இறங்கி விசாரித்தபோது… தாயுமான வர் கோவிலுக்குச் சொந்தமான ஒரு நந்தவனம், தர்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. இந்த இடத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 2.5 ஏக்கர். இந்த நந்தவனம் கடந்த 5 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிக் கிடக்கிறது. இந்த இடம்தான் தற்போது சாரதாஸ் நிறுவனத்திற்கு தாரைவார்க்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் உடனடியாகச் செய்து கொடுக்கும் அளவிற்கு அதிகாரிகள் ராஜ விசுவாசமாகப் பணியாற்று கிறார்களாம்.
ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தை விற்க வேண்டுமென்று ஆதீன நிர்வாகம் முடிவு செய் தாலும், டிரஸ்ட்டில் உள்ளவர்கள் ஒருமித்த கருத்தோடு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் மட்டுமே விற்க முடியும் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே சாரதாஸ் நிறுவனம் இந்தப் பகுதியைச் சுற்றிலும் உள்ள இடங்களை அதிகாரிகள் உதவியோடு ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது சாரதாஸ் கடையை ஒட்டியுள்ள ரேமண்ட்ஸ் துணிக்கடையும், சூர்யா என்ற உணவகமும் மட்டும் சாரதாஸ் நிறுவனம் நிர்ணயித்த தொகையை ஏற்க மறுத்ததால், அவற்றைத் தவிர மற்ற வணிக நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, தங்கள் நிறுவனத்தின் பரப்பளவைப் பெரிதாக்கியுள்ளனர். சாரதாஸ் நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி முன்நின்று செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கென பிரத்யேகமாக சுமார் 21 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தால், நந்தவனத்தில் உள்ள குளத்தில் ராட்சத போர் போட்டு தண்ணீர் எடுக்க ராஜஸ்தான் பாலைவனங்களில் போர் போடப் பயன்படுத்தும் ராட்சத இயந்திரங்களுடன் வந்த போது, அப்பகுதி மக்கள் எதிர்த்துப் போராடித் திருப்பி அனுப்பியுள்ளனர்
சாரதாஸ் நிறுவனத்தின் மீதான ஆக்கிரமிப்புக் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரோஷனிடம் கேட்டபோது.. "கோவிலுக்குச் சொந்தமான ஒரு அடி நிலத்தைக்கூட நாங்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இந்து அறநிலையத் துறையிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட 3 ஆயிரம் சதுர அடி நிலத்துக்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறோம். ஆனந்தா சில்க்ஸ் பின்புறமுள்ள கோவிலுக்குச் சொந்தமான இடத்தை நாங்கள் தூய்மைப்படுத்திக் கொடுத் தோம். இதுவரை மலைக்கோட்டைக்கு 3 முறை கும்பாபிஷேகம் செய்துள்ளோம். சமயபுரம் கோவில் உட்பட பல்வேறு கோவில்களுக்கு திருப்பணிகளைச் செய்துவருகிறோம். மலைக்கோட்டையின் பின்புறத்தில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் சுவர்களை அகற்றிவிட்டு வாகனங்கள் செல்ல வழிவகை செய்துள்ளோம். மலைக்கோட்டைக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் எங்களை உபயதாரராகக் கேட்டபோது, ஒட்டுமொத்த மலையையும் கழுவுவதற்கான தண்ணீருக்காக நந்தவனக் குளத்தில் ராட்சத போர் போட முயற்சித்ததை, எங்கள் நிறுவனத்துக்காக போர் போடுவதாகத் தவறாகப் புரிந்துகொண்டு பொதுமக்கள் எதிர்த்ததால் நாங்கள் பின்வாங்கிக்கொண்டோம்" என்று குற்றச்சாட்டுகளை மறுத்தார்.