பள்ளி வாகனத்தில் சிக்கி மாணவர்கள் பலியாவதும், பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியாவதும், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்தபடியே இருக்கிறது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சென்னை- வேளச்சேரி புவனேஸ்வரி நகர் 2-வது தெருவில் இயங்கிவரும் டி.ஏ.வி. பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகாயமடைந்து, பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக காயமடைந்த மாணவன் தர்ஷனின் அப்பா பிரேமிடம் பேசினோம். "டி.ஏ.வி. பள்ளி வாடிகா கேம்பஸில் ப்ரீ.கே.ஜி. முதல், ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் வரை வகுப்புகள் உள்ளன. என் மகன் தர்ஷன் ஃபர்ஸ்ட் ஸ்டாண் டர்ட் படித்துவந்தான். மிகுந்த சிரமத்திற்குப் பின்தான் இந்த பள்ளியில் சீட்டே கிடைத்தது. கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி, வெள்ளிக் கிழமை மதியம் ஒன்றரை மணியளவில் எனக்கு பள்ளியிலிருந்து போன் வந்தது. எங்கள் மகன் தர்ஷன் கீழே விழுந்துவிட்டதாகவும், சிகிச்சைக்காக பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். உடனே சென்று பார்த்தபோது, தர்ஷனுக்கு தலையில் பலத்த காயம் இருந்தது. அவன் பள்ளி யூனிபார்ம் முழுவதும் ரத்தமாக இருந்தது. "மத்தியானம் லஞ்ச் டைம்ல குழந்தைங்க சாப்பிட்டுட்டு இருந்தபோது பள்ளியின் மேற்கூரை சீலிங் இடிந்து விழுந்து காயமானதாக'த் தெரிவித்தனர். இதுல என் மகன் தர்ஷனுக்கு தலையில் மூணு தையல் போட்டிருக்கு. இப்ப தொடர்ந்து மூணு நாளா ட்ரெஸ்ஸிங் பண்றதுக்கு ஹாஸ்பிடல் போயிட்டு வர்றோம். இவ்வளவு மோசமான கட்டிடத்தில்தான் அந்த பள்ளி இயங்கிட்டு வருது. எங்க குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதமே இல்லை'' என்றார்.
படுகாயமடைந்த மாணவி சஹானாவின் அப்பா சந்திரசேகர், "செப்டம்பர் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை மத்தியானம் ஒன்றரை மணியளவில், "உங்க பொண்ணு அடிபட்டு காமாட்சி ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட்ல இருக்காங்க'ன்னு ஸ்கூல்லருந்து போன் வந்தது. பதறியடிச்சுப் போய்ப் பார்த்தப்ப, என் குழந்தை டிரஸ் ஃபுல்லா ரத்தமா இருந்தது. ரத்தம் நிக்காம வந்துட்டே இருந்துச்சு. அங்கிருந்த ஸ்கூல் நிர்வாகத்தினர்கிட்ட கேட்டப்போ, கிளாஸ் ரூம்ல கான்கிரீட் சீலிங் உடைந்து விழுந்து அடிபட்டதா சொன்னாங்க. இதைக்கேட்ட எங்களால துக்கத்த கட்டுப்படுத்த முடியல. எங்க பாப்பா பிறந்ததே இந்த ஹாஸ்பிடல்லதான். இந்த ஹாஸ்பிட லிலேயே முடிவாக இருக்குமோங்கிற மாதிரி நினைச்சிட்டோம். எங்க குழந்தை வலியால் துடித்ததாகவும், வாந்தியெடுத்து, மயக்கம் போட்டு விழுந்ததாகவும் சொன்னாங்க.
உடனே சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எல்லாமே எடுத்தாங்க. வாந்தி, மயக்கமாக இருந் ததால மறுநாள் நைட்டு 11:30 மணிக்கு குழந்தைக்கு தலையில் ஆபரேஷன் பண்ணாங்க. நடுராத்திரி ஒரு மணிக்குதான் ஆபரேஷன் முடிஞ்சது. இப்பவரைக்கும் ஐ.சி.யூ. வில் ட்ரீட்மெண்ட் போகுது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம். இப்ப ரெண்டுநாள் மட்டும் ஸ்கூல் மெயின் டெனன்ஸ்னு லீவு விட்டுட்டு, திரும்ப பள்ளி நடத்த ஆரம்பிச் சுட்டாங்க. வேளச்சேரி போலீஸ் ஏ.சி. வந்தாரு. ரிப்போர்ட் கேட்டாரு. நடந்த விஷயத்தை புகாராக கொடுத்திருக்கோம். நாலு நாளாகியும் இன்னும் எஃப்.ஐ.ஆர். போடல. இதே சம்ப வம் அவங்களோட குழந்தைக்கு நடந்திருந்தா சும்மா இருப்பாங் களா? என்னோட குழந்தை உயிர் பிழைச்சிட்டாலும், இன்னொரு குழந்தைக்கு இதே மாதிரி நடக்கக்கூடாது. அதுக்கு அதிகாரிங்க நேர்மையா நடவடிக்கை எடுக்கணும்'' என்றார்.
இதுகுறித்து விவரம் சேகரிக்க பள்ளியினுள் அனுமதிக்க வில்லை. பள்ளியின் பிரின்சிபால் மீனு அகர்வாலைத் தொடர்புகொண்டபோது போனை எடுக்கவில்லை. பள்ளி நிர்வாகி கல்பனா, "அதெல்லாம் ஒண்ணுமில்லை. குழந்தைகள் சரியாயிட்டாங்க' என்று தொடர்பைத் துண்டித்தார்.
வேளச்சேரி போலீஸ் ஏ.சி. சிவாவிடம் பேசியபோது, "இந்த சம்பவத்தை, விபத்துங்கற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செஞ்சிருக்கோம்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். பள்ளிக் கட்டிடம் இடிந்து விபத்து நடந்திருக்கும்போது, உடனடியாக, வருவாய்த்துறை அதிகாரியான லோக்கல் தாசில்தார் மீண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு ஆய்வுசெய்து சான்று அளிக்க வேண்டும். ஆனால் வேளச்சேரி தாசில்தார் சம்பவத்தன்று மட்டும் வந்து ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளார். முறைப்படி அடுத்தகட்ட ஆய்வுகளை நடத்தவில்லை. உயிர்ப்பலி நடந்தால் மட்டுமே அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்போல் தெரிகிறது. அதுவரை அலட்சியமே தொடர்கிறது.
____________
இறுதிச்சுற்று
அண்ணா பிறந்த நாளான, செப்டம்பர் 15-ஆம் தேதியன்று (வியாழன்), மதுரை ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "நீதிக்கட்சி ஆட்சி மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்த பரிமாணத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. நான் பள்ளிகளில் ஆய்வு நடத்தியபோது, அங்கு பெரும் பாலான மாணவ, மாணவிகளிடம் "ஏன் சோர்வுடன் காணப்படுகிறீர்கள்' எனக் கேட்டதற்கு, "நாங்கள் யாருமே காலை உணவு உண்பதே இல்லை' எனச் சொன்னவுடன் மிகுந்த வருத்தம் அடைந் தேன். உடனடியாக அதிகாரிகளை அழைத்து காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவுக்கு வந்தேன்'' என்று குறிப்பிட்டவர், "எத்தனையோ நிதிச்சுமைகள் இருந்தாலும், இந்தத் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். ஏழைகளின் பசிப்பிணியை போக்கும் வரையில் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்'' என்று அழுத்தமாகக் கூறினார்.
-அண்ணல்