போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சின்மயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், அரெஸ்ட் செய்யப்பட்ட 7-வது நாளிலேயே ஜாமீனில் வெளியே வந்து பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவையின் கரண்ட் எம்.எல்.ஏ. ஒருவர் இன்ஸ்பெக்டர் மசூதாபேகத்திடம் நடத்திய பேரத்தின் விளைவுதான் இந்த ஜாமீன் மர்மம் என்ற தகவலும் கசிந்தது. போக்ஸோ சட்டத்தின் நுட்பங்களை படித்து 306 IPC 10, 21(2) என்கிற எளிமையாய் ஜாமீனில் வெளியே வரும் பிரிவில் வழக்குப் பதிவு செய்தார் இன்ஸ். மசூதாபேகம் என நாம் எழுதியிருந்தோம். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் இப்போது ஆர்.எஸ்.புரம் ஸ்டேஷன் இன்ஸ். பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்துப் பேசும் போலீஸார், "பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அரசியல் தலையீடு மறைமுகமாக ஓடிக்கொண்டிருக்கிறது... என்று கமிஷனர் அலுவலகம்வரை புகார் பரவிக் கொண்டுதான் இருந்தது. அதை நக்கீரன் கட்டுரை உறுதி செய்தது. அதன்பின்னரே இன்ஸ் பெக்டர் மசூதாபேகம் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். புறநகர் ஸ்டேஷன் ஒன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்'' என்கிறார்கள் கண்ணியமாய்.
இதற்கிடையே மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர் மிதுனையும், வைஷ்ணவையும் விசாரித்த போலீசாரோ, "பொதுவாக இது மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடம் சில நேரங்களில் மிருக குணம் தெரிவதைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்த இருவரும் மிருகங்களைவிடவும் கொடியவர்களாய் இருக்கிறார்கள். மனிதத் தன்மை என்பதே இருவரிடமும் இல்லை. ஆனால், மிதுனோ... "என் மேல் எந்தத் தவறும் இல்லை என் மீது வீணாய்ப் பழி சுமத்து கிறார்கள்' எனச் சொல்கிறான்'' என்கிறார்கள்.
இந்நிலையில்... வைஷ்ணவ் உறவினர் பெண் ஒருவர் பேசிய தகவல் கிடைத்தது. அதில் அந்த பெண், "வைஷ்ணவிற்கு பி.ஜே.பி. யின் அரசியல் பின்புலமும், பணபலமும் உண்டு. வைஷ்ணவின் சித்தப்பாவும், மாமாவும் பி.ஜே.பி.யின் பெரும் ஆட்களோடு சம்பந்தப் பட்டவர்கள். வைஷ்ணவ்வின் அப்பா, செட்டி வீதியில் பெரிய அளவில் ஃபைனான்ஸ் செய்துவருகிறார். அதனால பணமோ, அரசியலோ வைஷ்ணவ்வை ஒண்ணும் பண்ணமுடியாது.. எழுதி வச்சுக்கோங்க. ஒருவேளை மாணவியோட டி.என்.ஏ. ரிப்போர்ட்ல, வைஷ்ணவ்வோட பேர் வந்தாக்கூட, நாங்க அதை மறைச்சுருவோம். அதனால்தான் வைஷ்ணவ்வை இன்னும் பிக்ஸருக்குள் கொண்டுவராம லிருக்கிறார்கள்'' என இறு மாப்பாய் பேசியிருக்கிறார் அந்தப் பெண்.
இந்தப் பிரச்சினைகளைத் தொடர்ந்து மீண்டும் மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பு முயன்றுவருகிறது.