10/2021. கோவை மாணவியின் தற்கொலை வழக்கில், "தடயங்களை மறைத்தல்' என்கிற பிரிவில், இந்து மத பின்புலம் கொண்ட சின்மயா ஸ்கூலின் பள்ளி முதல்வர் மினி ஜாக்சன் என்கிற மீரா ஜாக்சனை, ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் மேல் போடப்பட்ட போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டபோது கைது செய்துவிடுவார்களோ என்கிற பேரச்சத்தில், பெங்களூருவில் தலைமறைவாகியிருந்த அவரை கோவை தனிப்படை டீம் கைது செய்தது.
பணபலம் மிக்க சின்மயா ஸ்கூலின் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ததுக்கு பின்னால், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் காதலனாய் இருந்த வைஷ்ணவ் சாட்சியாக மாறி... "மிதுன் மாஸ்டர் என் மாணவி நண்பியிடம் தவறிழைத்தே அவளை தற்கொலை செய்யும் மனநிலைக்கு உள்ளாக்கிவிட்டான். நான் என் நண்பியை இழந்துவிட்டேன்' என மீடியாக்களுக்கு அழுது பேட்டி கொடுக்க...
போலீசார், அவன் அழுகைச் செயலில் ஒரு நாடகத் தன்மை இருப்பதைக் கண்டு, அவனைத் தூக்கிப் போய் விசாரித்ததில், "பள்ளி மாணவியை நான் மிரட்டிய தால்தான் தற்கொலை செய்துகொண்டாள்' என ஒப்புக் கொண்டான். அதை நாம் முன்கூட்டியே கண்டறிந்து அட்டைப்பட செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
அதற்குப் பின்னால் மாணவி கைப்பட எழுதியதாய் சொல்லப்பட்ட லெட்டரில் "ரீத்துவோட தாத்தா, எலிசா சாருவோட தந்தை யாரையும் சும்மா விட்ராதீங்க' என எழுதியிருந்தாள்.
"அந்த இரண்டு பேர் யார்?' என இறந்துபோன மாணவியின் அப்பா மகுடீஸ் வரன், அம்மா நிறைமதி ஆகியோரிடம் கேள்வி எழுப்பியபோது, "சார், அது என் மகளுக்கு 8 வயசு இருக்கும் போது நடந்தது. அவங்க இப்ப பேரன், பேத்தி எல்லாம் எடுத்துட்டாங்க. அவுங்க எங்க பக்கத்து வீட்ல இருந்தவங்க. அப்ப இருந்தே இது மாதிரி பேப்பர்ல எல்லாம் எம்பொண்ணு எழுதி வைப்பா. அதெல்லாம் இப்ப பெருசா எடுத்துக்காதீங்க. அந்த ரெண்டு பேரும் இப்ப எங்க இருக்காங்கன்னு எங்களுக்கே தெரியாது'' என ஒரே குரலில் இருவருமே சொல்ல... கடுப்பான போலீசார், "அவங்க பேர்களைச் சொல்லுங்க, நாங்க கண்டு புடிச்சுக்கறோம்' என பெயர்களை வாங்கிகொண்டு, அந்த இருவரையும் கண்டறிந்து தனியிடத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறது.
இதே சமயத்தில், மிதுனின் மனைவி மனீஷாவிடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி பேசும் எக்ஸ்க்ளூசிவ் ஆடியோ ஒன்றை நக்கீரன் வெளியிட்டது. அந்த ஆடியோவில் "நான் குழந்தையா இருக்கும் போதே இது மாதிரி நிறைய நடந்திருக்கு மிஸ். எங்க அப்பாவும், அம்மாவும் சண்டை போட்டுக்குவாங்க. பக்கத்து வீட்லதான் நான் படுத்து தூங்குவேன் மிஸ். அப்ப நிறைய அப்யூஸுக்கு ஆளாகியிருக்கேன் மிஸ்'' என அவள் சொல்லிய போது, மிதுனின் மனைவி "நம்மள நாமதான் பாத்துக்கணும்' என அறிவுரை சொல்லுகிறாள்.
இது ஒருபுறம் இருக்க... போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சின்மயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், 7-வது நாளிலேயே ஜாமீனில் வெளியே வந்துவிட... நீதித் துறையே உலகமே குழம்பிப் போய்விட்டது.
"போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதானவர் கள் 7 நாட்களில் ஜாமீனில் வெளியே வருவது சாத்தியமே இல்லாதது' என்கிறார்கள் அனைத்து வழக்கறிஞர்களும்.
இதுகுறித்து விசாரணை போலீசார் சிலரிடம் பேசினோம். "சார், மாணவியின் தற்கொலைக்கு முக்கியக் காரணமே இந்த மீரா ஜாக்சன்தான். தற்கொலை செய்து கொண்ட மாணவி, மீரா ஜாக்சனிடம் கொடுத்த புகாரில்... "நான் நிம்மதியா இருக்கணும்னா, ஸ்கூலுக்கு வந்து போகணும்னா இந்த வைஷ்ணவையும், மிதுனையும் பள்ளியை விட்டு நீக்குங்க மேம்' என கடிதத்தின் வாயிலாக சொல்லியிருக்கிறாள். ஆனால் அந்தக் கடிதத்தை அசால்ட்டாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த மீரா ஜாக்சன். மீரா ஜாக்சன் மட்டும் அக்கடிதத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு, இருவரையும் பள்ளியை விட்டு நீக்கியிருந்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டாள். அதனால்தான் "அந்த மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும்' என்று பொதுமக்கள் உக்கிரமான போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
அவர்களின் உக்கிரத்தை தணிக்க வேண்டும் என்பதற்காக கரண்ட் எம்.எல்.ஏ. ஒருவர் இன்ஸ்பெக்டர் மசூதாவிடம், "இப்போதைக்கு மீராவை கைது செய்து ஜெயிலில் அடைத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங் கள். ஆனால் மீராவை உடனே ஜாமீனில் விடும் செக்ஷனில் போடுங்கள். அதற்கான பணம் உங்களுக்கு சேர்ந்துவிடும்' என்று ரகசிய உடன்படிக்கை செய்யப்பட்டது.
அதனாலேயே போக்ஸோ சட்டத்தின் நுட்பங்களை படித்து 306 ஒடஈ 10, 21(2) என்கிற பிரிவில் (அது எளிமையாய் ஜாமீன் கிடைக்கும் பிரிவு ) வழக்குப் பதிவு செய்தார் இன்ஸ் மசூதா பேகம். அதன்படியே சிறையில் அடைக்கப் பட்ட மீரா ஜாக்சன், பிரபல வழக்கறிஞர் கே.ஆர். சங்கரன் மூலம் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்'' என்கிறார்கள் போலீசார்.
நாம் வழக்கறிஞர் சங்கரனை தொடர்பு கொண்டு, "எதன் அடிப்படையில் மீரா ஜாக்சன் ஜாமீன் மனு ஏற்றுக்கொள் ளப்பட்டது?'' என்று கேட்டோம்.
"21 (2) என்கிற பிரிவின் வழியேதான் ஜாமீன் கோரினோம். அதன்படிதான் ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும். போக்ஸோ வழக்கு என்பதால் ஜாமீன் தீர்ப்பு நகல் இன்னும் கைக்கு கிடைக்கவில்லை. கிடைத்ததும் உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார்.
நாம், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஆய்வாளருமான மசூதா பேகத்திடம், "நீங்கள் இந்த பிரிவில் ஜாமீன் கிடைக்கும் என்று தெரிந்தே வழக்குப் பதிவு செய்ததாகவும், அதற்கு உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறதே..?'' என கேட்டோம் .
"நான் பணம் பெற்றுக்கொண்டதாக நிரூபணம் ஆனால் என்னை தண்டியுங்கள். ஜெயி லில் தள்ளுங்கள்'' என்று கோபமானவரிடம்...
"சரி மேம் ... இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான வைஷ்ணவ் குறித்து ஏதும் செய்திகள் இல்லையே?'' என்றபோது, மேலும் கோபமானவர், "சார் விசாரணை இன்னும் போயிட்டு இருக்கு சார், என்னையப் புரிஞ்சுக் கோங்க. மனித இயல்புடன் பேசுங்க'' என்றவ ரிடம், மேலும் கேள்விகளை எழுப்ப நாம் முயன்ற போது, "இல்லை... உங்க கூட பேச விருப்பமில்லை'' என போனை துண்டித்துவிட்டார்.
இந்நிலையில்... மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சுக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனு மீதான விசாரணை நடைபெற்றதை அடுத்து, மிதுன் சக்கரவர்த்தியை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். 2 நாட்கள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.