விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து, தி.மு.க.வுக்கு நெருக்கடியைக் கொடுக்கத் தயாராகிவருகிறது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி. சத்தியமூர்த்தி பவனில் நடந்த அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து காரசார விவாதங்கள் எதிரொலித்திருக் கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் செல்வப்பெருந்தகை தலைமையில் கடந்த 19-ந்தேதி சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சூரஜ்ஹெக்டே, முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகி கள், மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப் பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செயற்குழுக் கூட்டத்தில், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க மாநில தலைவர் (செல்வப்பெருந்தகை) எடுக்கும் முடிவுகளுக்கு துணையாக இருப்போம் என்பது உட்பட 10 தீர்மானங்களை நிறைவேற்றியிருக் கிறார்கள். இதனைத் தொடர்ந்து, கட்சியின் வளர்ச்சி, எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் எதிரொ லித்த குரல்கள், தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைப்பதாக இருந்தன.
சட்டமன்ற காங்கிரஸின் முன்னாள் தலைவரும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவரும் கட்சியின் சீனியர்களில் ஒருவருமான கே.ஆர்.ராமசாமி ஆவேசமாகப் பேசினார். அவர் பேசும் போது, "விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் வலியுறுத்தும் கூட்டணி ஆட்சிக்குரல் நியாயமானதுதான். நான்கு எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டிருக்கும் சிறுத்தைகள் கட்சி, கூட்டணியில் இருந்து கொண்டே, கூட்டணி ஆட்சி பற்றி தைரிய மாகப் பேசுகிறது. பேசமுடிகிறது. ஆனால், காங் கிரஸில் 9 எம்.பி.க்களும், 18 எம்.எல்.ஏ.க்களும் இருந்தும் கூட்டணி ஆட்சி கோரிக்கையை வலியுறுத்த முடியவில்லை. இனியும் அப்படி இருக்கக்கூடாது. திருமாவளவனைவிட உரத்து நாம் பேச வேண்டும். ஆட்சியில் பங்கு கேட்பது நமது உரிமை. அதனை கேட்கத் தயங்கக் கூடாது''”என்றதும் அரங்கம் முழுக்க கைத்தட்டல். தொடர்ந்து பேசிய கே.ஆர். ராமசாமி, "காங்கிரசின் மாவட்ட தலைவர் (ஜெயக்குமார்) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி களை இந்த அரசு (தி.மு.க.) கண்டு பிடிக்கத் தவறுகிறது. அக்கறை காட்ட வில்லை. அந்த கொலையில் நம் கட்சியை சார்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக செய்திகள் வருகிறது. கிரிமினல்களை யெல்லாம் கட்சியில் வைத்திருந்தால் அப்படித்தான்.
எம்.எல்.ஏ.வாக 6 முறை நானும், 2 முறை என் மகனும் இருந்துள்ளோம். சுதர்சன நாச்சியப்பன் 3 முறை எம்.பி.யாக இருந்தவர். எங்களையெல்லாம் புறக் கணித்துவிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகின்றனர் (ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்). இதுதான் கட்சியை வளர்ப்பதா? காங் கிரஸ் கட்சி என்ன அவர்கள் சொத்தா? ஒவ்வொரு தொண்டனின் வியர்வையிலும் வளர்ந்தது. ஒன்றரை லட்சம் கோடி சொத்து வைத்திருப்பரிடம் (ப.சிதம்பரம்) காங்கிரஸ் அடகு வைக்கப்பட்டுள்ளது'' என்றெல்லாம் கடுமையாக அவர் பேசியபோது, நாங்குநேரி எம்.எல்.ஏ.வும் கட்சியின் பொருளாளருமான ரூபி மனோகரன் எழுந்து, "தனி நபர்கள் மீது குற்றம் சொல்லாதீர்கள். யாரையும் தாக்கிப் பேசாதீர்கள்'' என்றபோது, "எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க. யாரை பற்றி பேசவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் உங்க வேலையைப் பாருங்கள்''’என்று கே.ஆர்.ராமசாமி ஆவேசப்பட, அதற்கு ரூபி மனோகரன் பேச... இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. அப்போது இருவரையும் சமாதானப்படுத்தி அமரவைத்தார் பீட்டர் அல்ஃபோன்ஸ்.
முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் பேசும்போது, "தி.மு.க. கூட்டணியில் நாம் இருந்தாலும் தேர்தல் வரும்போது, நமக்கான இடங்களை கறாராகப் பேசி வாங்க மாட்டேன்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. தி.மு.க.விடம் காங்கிரசுக்கு 20 சதவீத இடங்களை விடாப்பிடியாக பேசி வாங்கவேண்டும். ஆனா, நாம் அதில் கவனம் செலுத்துவதில்லை. 20 சதவீத இடங்களுக்கு தி.மு.க. ஒத்துழைக்கலைன்னா, தனித்துப் போட்டியிடுவோம். தைரியமாக இந்த முடிவை எடுக்க வேண்டும்'' என்றார் மிக அழுத்தமாக.
மாவட்ட தலைவர் முத்தழகன் பேசும்போது, "நம்மளை தி.மு.க. ஒரு பொருட்டாகவே மதிப்ப தில்லை. எந்த அளவுக்கு காலில் போட்டு மிதிக்கணுமோ அந்த அளவுக்கு மிதிக்கிறார்கள். நமது ஓட்டுகள் இல்லைன்னா தி.மு.க. ஜெயித்திருக்குமா? நமக்கு மரியாதை கொடுக்காத கட்சியுடன் நமக்கு எதற்கு கூட்டணி? தனித்து போட்டியிடலாம்''’என்று ஆவேசப்பட்டார். இதனையடுத்துப் பேசிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு, தனித்துப் போட்டி என்கிற கருத்துக்களையே வெளிப்படுத்தினர்.
இதுதவிர, 60 வயதைக் கடந்தவர்களுக்கு தேர் தலில் சீட் தரக்கூடாது; ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கருத்துக்களும் கூட்டத்தில் எதி ரொலித்தன. அதாவது, இளைஞர்களுக்கு வழிவிட்டு முதியவர்கள் கட்சிப் பணியாற்ற செல்லவேண்டும் என்பதே இதன் பொருள். அதைத்தான் செயற்குழு வில் வலியுறுத்தினர். அப்போது பேசிய முன்னாள் எம்.பி.யும் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசு, ’"கட்சியை வளர்க்க நிர்வாகிகளுக்கு வயதை காரணமாகக் கொள்ளக்கூடாது. வயதை நிர்ணயித்தால் 60 வயதுக்கு மேலானவர்களை குப்பைத் தொட்டியில் வீசி விடலாமா? அப்படியெல்லாம் நாம் யோசிக்கக் கூடாது. ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு 50 சத வீதம் மூத்தவர் களும், 50 சதவீதம் இளைஞர்களும் அவ சியம். மூத்தவர்கள்தான் அனுபவசாலிகள். அவர்களது அனுபவம் காங்கிரசுக்கு அவ சியம்” என்றார்.
முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும் போது, "கூட்டணி ஆட்சி, பங்கு என் றெல்லாம் பேசினீர்கள். சரிதான். கூட்டணி ஆட்சி வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால், இதற்கு அது நேரமில்லை. நேரம் வரும்வரை பொறுமை யாகக் காத்திருக்க வேண்டும்''” என்று அட்வைஸ் செய்யும் தொனியில் பேசினார்.
முன்னாள் தலைவர் தங்கபாலு பேசும்போது, "ஆட்சியில் பங்கு கேட்பது நியாயமானதுதான். தவறுன்னு யாரும் சொல்லிடமுடியாது. காங்கிரஸ் தலைவராக நான் இருந்த போது, கலைஞரிடம் இந்த கோரிக்கையை வைத்தேன். அவரோ, உங்க கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. இதனை சோனியாகாந்தி என்னிடம் சொன்னால் அது குறித்து விவாதிக்கலாம் என சொன்னார். ஆட்சியில் பங்கு விசயத்தில் தி.மு.க.வின் இப்போதைய தலைவர் ஸ்டாலினின் மூட் எப்படி இருக்குன்னு நமக்குத் தெரியாது. அதனால் பொதுவெளியில் இதனைப் பேசி தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது''’என்று இவரும் செயற் குழுவுக்கு அறிவுறுத்தினார்.
அனைவரின் கருத்துக்களையும் கேட்ட காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சூரஜ் ஹெக்டே ஆகியோர் அடுத்தடுத்து பேசும்போது, "காங்கிரசில் இருக்கும் கோஷ்டி பிரச்சனைதான் கட்சி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. முதலில் கோஷ்டிகள் இல்லாத நிலையை கொண்டுவர வேண்டும். இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு நிர்வாகிகள் நியமனத்தில் போதிய முக்கியத்துவம் தரப்படும். அதற்கான சீர்த்திருத்தத் திட்டம் கொண்டுவர ஆலோ சிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அந்தத் திட்டம் அறிவிக்கப்படும். கூட்டணி ஆட்சி பற்றியெல்லாம் நாம் வலியுறுத்தக் கூடாது. மேலிடம் அதனைப் பார்த்துக் கொள்ளும்'' என்றனர்.
கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தை உதயநிதியின் பொறுப்பில் கொடுத்து எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை அவரின் தலை மையில் எதிர்கொள்ள தி.மு.க. திட்டமிட்டிருக் கும் நிலையில், சிறுத்தைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் கொடுக்கத் துவங்கும் நெருக்கடியை உற்றுக் கவனித்திருக்கிறது அறிவாலயம்!
_____________________
ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகை?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பிருப்பதாக ராகுல்காந்திக்கு, பகுஜன் சமாஜ் கட்சி எழுதியுள்ள கடிதம் காங்கிரஸில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து காங்கிரசில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த கடிதத்தைச் சுட்டிக்காட்டி, செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து தூக்குங்கள் என மேலிட பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தியுள்ளனர் கதர்ச்சட்டை தலைவர்கள். அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனகார்கேவுக்கும் மெயில் அனுப்பி வருகின்றனர். இது குறித்து பேசும் கதர்ச்சட்டை தலைவர்கள், "ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்மந்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்த அஸ்வத்தாமனை கடந்த மாதம் கைதுசெய்தது போலீஸ். அஸ்வத்தாமன் பெரிய கிரிமினல். அவரை கட்சிக்கு கொண்டுவந்தது செல்வப் பெருந்தகை. அதேபோல, இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் விச்சு என்கிற லெனின்பிரசாத் மீதும் பல கிரிமினல் புகார்கள் இருக்கிறது. இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் அவரை ஜெயிக்க வைத்தது செல்வப்பெருந்தகைதான். இப்படி நிறைய கிரிமினல் பின்னணி கொண்டவர்களை கட்சிக்குள் கொண்டு வந்திருக்கிறார்' என்று செல்வப்பெருந்தகைக்கு எதிராக மேலிடத்தில் புகார் வாசித்து வருகின்றனர்.