"பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக் கல்லா கட்டத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இப்போது மாநிலங்கள்தோறும் உள்ள வானொலி நிலையங்களை எல்லாம் இழுத்து மூடும் முயற்சியில் இருக்கிறது'’என்று ஆவேசம் பொங்க குற்றம்சாட்டுகிறார்கள், வானொலி நிலைய ஊழியர்களும் வானொலி நேயர்களும்.
அங்கே என்னதான் நடக்கிறது? என விசாரணையில் இறங்கினோம்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டுமல்லாது, தர்மபுரி, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர் கோவில், கொடைக்கானல் ஆகிய இடங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில், புதுவை, காரைக்கால் ஆகிய இரு இடங்களில் வானொலி நிலையங்கள், இயங்கி நேயர்களுக்கு இனிமை தரும் நிகழ்ச்சிகளைத் தந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு தனி மவுசு உண்டு.
வானொலி நிலைய பணியாளர்கள் நம்மிடம், "ஆரம்பத்திலிருந்தே வானொலி மீது ஒன்றிய அரசுகள் அக்கறை காட்டவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று. ஏனென்றால், புதிதாக பண்பலைகள் (F.M.) தொடங்கப்பட்டபோதுகூட வானொலிக்கென தனியாக ஆட்கள் எவரையும் மத்திய அரசு நியமிக்கவில்லை. அதனால் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களே இரு மடங்கு உழைப்பைத் தரவேண்டியிருந்தது.
இந்நிலையில், 2004 முதல் நாடெங்கும் உள்ள வானொலி நிலையங்கள், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின்கீழ் ’"பிரசார் பாரதி'’ என்ற பெயரில் தன்னாட்சி அமைப்பாக செயல் படத் தொடங்கின. தன்னாட்சி என்றவுடன் ஒன்றிய அரசு, தனது நிதிப் பங்களிப்பை சிறிது சிறிதாக குறைக்கத் தொடங்கிவிட்டது. அதனால், வானொலி நிலை யங்கள், விளம்பரங்கள் மூலமாகவும், ஸ்டூடியோக் களை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும், ரேடியோ டவர்களை மற்ற தனியார் நிறுவனங் களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலமாகவும் வருமானம் ஈட்டத் தொடங்கின. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால்... நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் ஊழியர்களே விளம்பரங்களைக் கேட்டு, வியாபாரிகளிடம் கெஞ்சவேண்டிய நிலையையும் ஏற்படுத்தினார்கள். இந்த லட்சணத்தில் வானொலி நிலையங்களுக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி விட்டதால், வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிப் பிரிவுகளில்கூட 30 சதவீதத்துக்கும் குறைவான ஊழியர்களே உள்ளனர். அவர்களும் கிட்டத்தட்ட 50 வயதைக் கடந்தவர்கள்தான். எனவே, அவர்களும் ஓய்வு பெற்றுவிட்டால், வானொலி நிலையங்களில் வேலைசெய்ய ஒருவரும் இருக்கமாட்டார்கள். பிறகு அஞ்சல் நிலை யங்களின் கதிதான் வானொலிக்கும்''’என்றார்கள் வருத்தமாய்.
நம்மிடம் வருத்தத்தோடு பேசிய அந்த நிலைய நிகழ்ச்சித் தயாரிப்பாளர்... "இதில் கொரோனா நெருக்கடி, மற்ற துறைகளைப் போலவே வானொலி நிலையங்களின் கழுத்தையும் நெரித்தது. இருந்தும் அதனைப் போராடி கடந்துகொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில், வானொலி நிலையங்களின் தலையில் இடியை இறக்குவதுபோல, ’பிரசார் பாரதி நிர்வாகம்’ இந்த ஆண்டுக்கான செலவுத் தொலையை முழுதாகக் கொடுக்காமல், கால்பங்கு மட்டுமே கொடுத்து, வானொலி நிலையங்களைத் திணற வைத்திருக் கிறது. அதோடு நிறுத்தாமல் தமிழகம், புதுச்சேரியில் உள்ள ஏனைய அகில இந்திய வானொலி நிலையங்கள், இனி எல்லாநாளும் மத்திய அலைவரிசையில் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டாம் எனவும், வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே தயாரித்தால் போதும் என்றும், மற்ற நாட்களில் சென்னை வானொலியின் நிகழ்ச்சி களையே அப்படியே ஒளிபரப்பினால் போதுமானது எனவும் கூறி, வானொலி நிலையங்களின் செயலை விரைவில் முடக்கி, அவற்றைக் கோமா நிலைக்குத் தள்ளப் பார்க்கிறார்கள்.
இதனால், இனி வட்டார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளும், மண் சார்ந்த விவசாயம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நின்றுபோக நேரிடும். அதோடு, வானொலி நிலையங்களில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தொகுப்பூதிய தற்காலிக ஊழியர்கள், வேலை இழந்து தெருவிற்கு வரவேண்டிய நிலையும் ஏற்படும். அவர்களின் நோக்கம், மாநில மொழிபேசும் வானொலி நிலையங்களை ஊமையாக்கிவிட்டு, இந்தியா முழுக்க ஒரே இந்தி ஒலிபரப்பைச் செய்யவேண்டும் என்பதுதான். அதை நோக்கித்தான் அவர்கள் நகருகிறார்கள்''’என்கிறார் வருத்தமாய்.
"இப்போதும் வானொலி நிலையங்கள் தான் பலரது இரவைத் தாலாட்டித் தூங்க வைக்கின்றன. அதையும் கெடுக்கப் பார்க்க றாங்களா? இருப்பதைக்கூட சரியாக நிர்வாகம் செய்ய வக்கில்லாதவர்களிடம், நாடு சிக்கினால் இப்படிதான் ஆகும். இன்னும் என்னென்ன செய்யப்போறாங்களோ?'’என்கிறார் சென்னைப் பல்கலைக் கழக மாணவரான கார்த்திகேயன் எரிச்சலாய்.
இணையவழி தமிழாசிரியரான உமா ராணியோ, "அரசியல் செய்தி முதல் இயற்கை இடர்ப்பாடுகள் வரை அனைத்து வகை தகவல்களையும் நாட்டின் கடைக்கோடி சாமானியர்கள் வரை கொண்டுபோய்ச் சேர்க்கும் புரட்சியை, வானொலிகள்தான் செய்தன. தொலை தொடர்பு சேவை இல்லாத காலத்தில் வானொலி மட்டுமே பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதையெல்லாம் மறந்துவிட்டு, வானொலி நிலையங்களை மூடிவிட்டு அவற்றை ரிலே ஸ்பாட்டுகளாக ஆக்கநினைக்கும் ஒன்றிய அரசின் செயல், ஒருவகையில் ஊடக சுதந்திரத்தையும் நசுக்கும் செயல்தான்'' என்கிறார் காட்டமாய்.
ஒன்றிய அரசு தனது தந்திரத் திட்டங்களை நிறைவேற்ற, மாநில மொழிகளில் இயங்கும் வானொலி நிலை யங்களின் குரல் வளையை நெறிக்க நினைக்கலாமா?