சங்க இலக்கிய காலத்திலிருந்தே பெயர் பெற்றது, மதுரை திருப்பாலை. அங்கே வசிக்கும் கோனார் தலித் மற்றும் இஸ்லாமிய சமூகங்கள் சேர்ந்தே திருப்பாலை தெப்பத் திருவிழாவையும் பொங்கல் விழாவையும் நடத்துவது வழக்கம். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்விழாக்கள் அமைந்திருக்கும்.
இந்த ஆண்டு, தாமரைப் பொங்கல் என பா.ஜ.கவினர் திருவிளக்குப் பூஜையுடன் உள்ளே நுழைந்தனர். கடந்த 9ம் தேதி இரவு பா.ஜ.க. வினர் கொடி கட்டிய போது, ஊரின் முகப்பில் விடுதலை சிறுத்தைகள் அதிகம் இருக்கும் பகுதியில் எதிர்ப்புக் கிளம்ப கொஞ்சம் தள்ளிப்போய் ஊரின் மையப்பகுதி யில் கட்டத்தொடங்கினர். அங்குள்ள மக்களோ, ""நாமதான் இங்கே வருசா வருசம் சமத்துவமா பொங்கல் கொண் டாடுறோமே, இது என்ன புதுசா தாமரைப் பொங்கல் எனக் கேட்டனர். எதிர்ப்பு வந்ததும், போலீசு வந்தது. பொங்கல்தானே வைக்கிறாங்க'' என சமாதானப்படுத்தியது.
அடுத்த நாள் காலை 11 மணிக்கு மாட்டுவண்டியில் அழைத்துவரப்பட்டார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன். அவருக்காக ஒரு பானையில் மட்டும் ஒரிஜினல் பொங்கலுக்கான அயிட்டங்களும் மற்ற பானைகளில் பஞ்சை வைத்து பொங்குவது போல செட்டப்பும் செய்திருந்தனர். முருகன் வந்த மாட்டுவண்டி அங்குள்ள பள்ளிவாசல் அருகில் மேளதாளங்களை ஓங்கி அடிக்க அங்கிருந்த முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு பா.ஜ.க.வினர் எதிர்கோஷம் போட்டனர். பதட்டம் அதிகமானதும், போலீஸார் அங்கிருந்து முருகனை விழா நடக்கும் திடலுக்கு அழைத்து சென்று பொங்கல் வைக்கச் செய்தனர்.
""தை பொங்கல்... இது தாமரை பொங்கல். பாரத் மாத்தாக்கி ஜெய்!...'' என்று வேக வேகமாக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பினார் முருகன். ஆனால், விடுதலை சிறுத்தையினரும் இஸ்லாமியர்களும் ரோட்டை மறித்து நிற்க வேறு வழியின்றி ஊரின் பின்புறமாக முருகனை அழைத்து சென்றனர். வேடிக்கை பார்த்த மக்கள் யாரும் தாமரைப் பொங்கலில் பங்கேற்க வில்லை.
ஊர்ப் பெரியவர் ஒருவர் நம்மிடம், ""முஸ்லிம் களான நாங்கள் காலம் காலமாக பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் வேலை செய்து அறுவடை பண்ணுகிறோம். தை ஒன்று அன்று அனைத்து சமுதாயங்களும் சேர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிவரும் வேளையில் தீடீரென வெளியில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து இப்படி கலவரத்தில் முடித்து, நல்லா இருந்த ஊரை இப்படி நாசமாக்கிவிட்டார்கள்'' என்றார் வேதனையுடன்.
இன்னொருவரோ, ""பழைமை வாய்ந்த தமிழ் பண்பாட்டு ஊரில் தாயா பிள்ளையாக ஒற்றுமையாக இருந்த இடத்தில், நம்ம பண்பாட்டுக்கு சம்பந்த மில்லாதவங்க வந்து கலவரம் செய்தது வேதனையா இருக்கு. நாங்கள் களை எடுக்க, நாத்து நட சாகுலும் அப்துல்லாவும் தேவை. அவங்க கருப்பண்ணனையும் வடிவேலனையும்தான் கூப்பிடுவாங்க. எல்லாத்தையும் இப்படி கெடுத்துட்டு போயிட்டாய்ங்க. இனி எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிராம சபையை கூட்டிதான் எந்த விழாவும் நடத்தவேண்டும் வெளி ஆட்கள் யாரும் வந்தால் அனுமதி இல்லை என்று தீர்க்கமான முடிவை எடுக்கபோறோம்'' என்றார்.
விடுதலை சிறுத்தையை சேர்ந்த செல்ல பாண்டியோ, ""இவர்கள் வேண்டுமென்றே இரவோடு இரவாக பா.ஜ.க. கொடியை பள்ளிவாசல் முன்பு கட்டினார்கள். அடுத்த நாள் முருகன் வருகிற போது பள்ளிவாசல் வாயிலில் நின்று கொண்டு கொட்டு அடித்து தகாத வார்த்தைகளை எழுப்பி கோஷம் போட, மக்கள் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட, அவர்கள் மந்தையில் காவி பொங்கல் வைத்து கோஷமிட்டனர். எதிர்ப்பு அதிகம் கிளம்ப பின்புறமாக போலீஸார் பா.ஜ.க.வினரை அழைத்து சென்றனர் தாயா பிள்ளையாக மாமன் மச்சானாக இருந்துவந்த மக்களை தமிழர் திருநாளான பொங்கலை ’"காவி பொங்கலாக' மாற்றி கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். உலகில் சாதி மதம் தாண்டி ஒரே இனத்திற்கான பண்டிகை பொங்கல் திருநாள் மட்டுமே. அதையும் எப்படியாவது கெடுக்கவேண்டும் என்று களத்தில் இறங்கி உள்ளது பா.ஜ.க. சங்பரிவார் கூட்டம். இதை கட்டாயம் தமிழக மக்கள் முறியடிப்பார்கள்'' என்றார்.
இதற்கிடையே அதேநாள் மாலையில் மதுரை பா.ஜ.க. அலுவலகத்தில் கத்தியுடன் நுழைந்த ஆட்கள், கற்களை வீசிச் சென்ற வீடியோ சமூகவலைத் தளங்களில் பரவ, பா.ஜ.க. சார்பில் காவல்துறையில் புகார் கொடுத்ததுடன் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்..
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் முயற்சியில தோற்றுப் போன பா.ஜ.கவினர், தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் திருநாளில் தங்கள் கலாச்சாரத்தை ஊடுருவச் செய்து, மதநல்லிணக்கத்தைத் தகர்த்து, மதவெறி அரசியலைக் கிண்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தமிழ்ப் பண்பாட்டைத் தகர்க்க, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மேற் கொண்ட காவிக் கலவர முயற்சிகளை கிராம மக்கள் விழிப்புடன் இருந்து அம்பலப்படுத்தியுள்ளனர்.