பாக்ஸிங் வீரனின் ஷூட்டிங்!

"கீதா கோவிந்தம்', "அர்ஜுன் ரெட்டி' போன்ற படங்களின் மூலம் இளைஞர்களின் ஃபேவரைட்டாக உருவெடுத்தவர் விஜய் தேவரகொண்டா. என்னதான் தெலுங்கு நடிகராக இருந்தாலும், அர்ஜுன் ரெட்டி ஏற்படுத்திய தாக்கம் இவரை ஒரு பான் இந்தியா ஸ்டார் ரேஞ்சுக்கு மாற்றியது. அதன்பின்னர், அனைத்து மொழி ரசிகர்களையும் கவர வேண்டும் என்ற நோக்கில் இவர் நடித்த சில படங்கள், எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாமல் போனது. எனவே, உடனடியாக ஒரு ஹிட் தேவை என்ற கட்டாயத்தில், தெலுங்கு உலகின் மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அடுத்ததாக "லைகர்' என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோரின் தயாரிப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமாக உருவாகும் லைகரில், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது இப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறவைத்துள்ளது. உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களில் தலைகாட்டியிருந்தாலும், இந்தியத் திரையுலகில் இதுவே அவரது முதல் படமாகும். இந்திய சினிமாவில் முதல் முறையாக நடிக்கும் மைக் டைசனுக்கு, இந்தப் படத்தில் கவுரவ வேடம் என்றும், படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரின் கதாபாத்திரம்தான் மிகப்பெரிய ட்விஸ்ட்டை உருவாக்கும் எனவும் பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்காக கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் மைக் டைசன் விரைவில் கலந்துகொள்கிறார்.

cc

Advertisment

இது உண்டு! அது இல்லை!

கடந்த ஆண்டு விஜய்யின் ரசிகர்களை வைத்து "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்கிற கட்சி தொடங்கப்பட உள்ளதாகவும், இதன் தலைவராக பத்மநாபன், பொருளாளராக விஜய்யின் தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ள தாகவும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, "தனக்கும், தனது தந்தையின் இந்த அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என விஜய் தரப்பு விளக்கம் கொடுத்தது. மேலும், தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங் கள் நடத்த தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என நடிகர் விஜய் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு அண் மையில் நீதிமன்ற விசா ரணைக்கு வந்த சூழலில், "விஜய் மக்கள் இயக்கம்' கலைக்கப் பட்டுவிட்டதாக விஜய் யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பதில் மனுத் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் நடை பெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத் தைக் கலைக்க விருப்பதாகத் தீர் மானம் நிறை வேற்றப்பட்டிருப்ப தாகவும், எனவே விஜய் மக்கள் இயக்கம் தற் பொழுது இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது. விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட விஜய் தரப்பு, "எஸ்.ஏ.சி உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை. விஜய் தலைமையிலான மக்கள் இயக்கம் தொடர்ந்து இயங்கும்'' என விளக்கம் அளித்த பிறகே விஜய் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

டாக்டர் நடிகையின் அட்வைஸ்!

சேகர் கம்முலா இயக்கத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான "லவ் ஸ்டோரி' திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் சமீபத்தில் சாய் பல்லவி கலந்துகொண்டார். சாய் பல்லவி மருத்துவம் படித்தவர் என்பதால், மருத்துவ தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, "மருத்துவத் துறை என்பது கடல் போன்றது. அதற்கான தேர்வில் எங்கிருந்து கேள்வி கேட்கப்படும் என்பதை கணிப்பது கடினம். தேர்வு முடிவு வெளியாகும்போது மாணவர்கள் உளவியல்ரீதியாக நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அதுபோன்ற நேரத்தில் எழும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட பெற்றோர்களும் நண்பர்களும் அவர்களுடன் பேசவேண்டும். மோசமான மதிப்பெண் காரணமாக என்னுடைய குடும்பத்திலேயே ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அவர் எடுத்தது அவ்வளவு மோசமான மதிப்பெண்ணும் அல்ல. ஆனால், தன்னுடைய தாழ்வு மனப்பான்மை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். தற்கொலை என்பது நம்முடைய குடும்பத்தினருக்கு நாமே தண்டனையளிக்கும் செயல். நேர்மறையாகப் பேசி தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் என நான் எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், அப்படியான தருணத்தை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அதே நேரத்தில், தன்னுடைய சிந்தனையை மாற்றி எதிர்மறையான எண்ணங்களில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியும் என நான் நம்புகிறேன்'' எனக் கூறினார்.

-எம்.கே.