(96) ராம்நகர் படப்பிடிப்பில் நடந்தது என்ன?
தெலுங்கு மொழியில் நான் இயக்கிய இரண்டாவது படம் "கக்ஷா'... தமிழில் வஞ்சம் தீர்ப்பது என்று அர்த்தம். அந்த நாட்களில் இது மிகப்பெரிய பட்ஜெட் படம். ஷோபன்பாபு, மோகன்பாபு, முரளிமோகன், சத்தியநாராயணா, அல்லு ராமலிங்கய்யா, ஜமுனா, ஸ்ரீதேவி, ஜெய சித்ரா, ஏ.சகுந்தலா என ஏகப்பட்ட நடிக -நடிகையர் நடித்தனர். பாடல்கள், சண் டைக் காட்சிகள் எல்லாமே பெரும் செலவில் எடுக்கப்பட்டது. கேரளா, ஊட்டி, மைசூர் என பல இடங்களில் படப்பிடிப்பு நடத் தப்பட்டது. உச்சகட்ட காட்சி இந்தி "ஷோலே' படம் எடுத்த ராம் நகரிலே எடுத்தேன். இரு மலைகளுக்கு இடையே நூறடி நீளத்துக்கு மரப் பாலம் அமைக்கப்பட்டது. அதில் ஐம்பது குதிரைகளில் வில்லன் கூட்டம் வருவது காட்சி. அதை நாயக னும், நண்பர்களும் தடுத்து நிறுத்தப் போராடுவார்கள். அப்போது வெடி குண்டுகளை மறைத்து வைத்து தகர்ப்பது திட்டம். அதில் ஒரு குண்டு வெடிக்காமல் உருண்டு போகும். அதை வில்லன் பார்த்துவிட்டால் எல்லாமே கெட்டுவிடும். இதை மறைப்பதற்காக பாவாடை அணிந்த ஒரு நாயகி நடந்துபோய் அதை தடுத்து பாவாடையால் மறைத்து நிற்பாள். இதை ஒத்திகை பார்க்கும்போது... நாயகி மறைத்து நின்றதும் ஒரு நடிகர் வேடிக்கையாக ஒரு கமெண்ட் அடித்தார். அது அந்த நாயகி காதில் விழுந்தது. உடனே எரிமலையாக வெடித் தார். நாயகனும் விடவில்லை... இருவரும் கெட்ட வார்த் தைகளை பயன்படுத்தினர். ராமாநாயுடு ஸார் தலையிட் டும் சண்டையை நிறுத்த முடியவில்லை. நாயகன் மன் னிப்பு கேட்டாக வேண்டும் என அடம்பிடித்தார் நாயகி.
நாயகன், "மன்னிப்பா? நானா? இவகிட்டேயே? முடியவே முடியாது' எனச் சொல்லிவிட்டார். உடனே நாயகி காரில் ஏறி எங்கோ போனார். திரும்பி வரவே யில்லை. விசாரித்ததில், அவர் ஒரு கன்னட தயாரிப்பாள ரும், நடிகருமானவர் வீட்டிலிருப்பதாக சேதி. தயாரிப் பாளரோடு நானும் அங்கு போனேன். அந்த நடிகர், பல சங்கங்களிலும் பொறுப்பிலிருப்பவர். அவர் நடிகை பக்கம் பேசினாலும், ஒரு விஷயத்தை தெளிவாகச் சொன்னார். "இங்கே ஷூட்டிங் முடிக்காமல் போனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும். பாலம் போட்டு, குதிரைகள் வரவழைச்சு, பெரும் செலவு. எனவே நான் நாயகியை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் மீண்டும் இவரை அவமதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சென்னை போனதும் நடிகர் சங்கத்தில் பேசி நல்ல முடிவை எடுங்கள்' என்றார். படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி மூன்று நாட்கள் நடத்தி... முடித்துக்கொண்டோம். சென்னை வந்து மறுநாள் நாயகி தனக்கு வேண்டிய ஹீரோவிடம் விஷயத்தைச் சொல்லி, தன்னை கிண்டலடித்த தெலுங்கு நாயகனை அவமதிக்கத் திட்டமிட்டார். அதற்குள் நான் எவரிடம் சொன்னால் இந்தப் பிரச்சினை தீருமோ அவரிடம் சொல்லி... அந்த நாயகன், நாயகியிடம் பேசவைத்து விஷயத்தை முடித்து வைத்தேன்.
எனக்குப் பிடித்த காட்சி...
பல படங்களை நான் எழுதி, இயக்கி, தயாரித் திருந்தாலும் சில காட்சிகள் என் மனதில் நிலைத்து நின்றுவிடும். ஒரு ஸ்கூல் வாத்தியாருக்கு மூன்று பெண் கள். ஜெயசுதா, சித்தாரா, மாலாஸ்ரீ. இதில் சித்தாரா காது கேட்காத ஊமை. இவளைத் திருமணம் செய்த வன் ஒரு அரசியல்வாதி அக்காவின் தம்பி. அந்த வாத்தியாரின் ஆதரவு, தன் தேர்தல் வெற்றிக்குத் தேவை என்பதால் தன் தம்பியை அந்த வாய் பேசாத ஊமைப் பெண்ணுக்கு கட்டிவைக் கிறாள் அக்கா. தம்பிக்கு இரண்டாவது பெண்ணை மனைவியாக்கினாலும், கல்லூரியில் படிக்கும் பேரழகி மாலாஸ்ரீயை எப்படியாவது இரண்டாவது மனைவியாக்குவதே லட்சியம். அவளோ தன் அக்காவின் வாழ்க்கை கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக அக்கா புருஷனின் கொடுமைகளை தாங்கிக்கொள்கிறாள். ஒருநாள் மாலாஸ்ரீ வீட்டில் தனியாக இருக்கி றாள். அந்த சமயம் அவளை கெடுத்துவிட்டால், தனக்கு கட்டி வைத்துவிடுவார்கள் என்ற நோக்கத்தில்... அவளைக் கெடுக்க முயல்கிறான். அவன் மனைவி சித்தாரா தன் கணவனிடமிருந்து தங்கையைக் காப்பாற்ற போராடுகிறாள். அவன், சித்தாராவை பக்கத்து அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிவிடுகிறான். வீட்டுக்குள் நுழைந்த தந்தை, தன் அறைக்குள் போக... இந்தச் சத்தம் கேட்டு உள்ளே வருகிறார். எதிர்அறை கதவு பாதி மூடிய நிலை. உள்ளே மயங்கிய நிலையில் கிடந்த மாலாஸ்ரீயை அவன் கெடுக்க முயல... அவள் அப்பா அவனை இழுத்து மகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார். அவன் மிருகமாக மாறி மாமனாரை... தன் மாஸ்டரை தாக்கி... ரத்தம் வழிய, வழிய அடிக்கிறான். அந்த சமயம் மாலாஸ்ரீக்கு சுயநினைவு வர... அப்பா தாக்கப் படுவதை பார்த்து, கையில் கிடைத்ததை எடுத்து அக்கா புருஷனை தாக்குகிறாள். "அவர் உன் மாமனார்டா... உனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரு.. ஆனா நீ அப்பாவையே அடிக்கிறே?ன்னு அடிபட்ட புலிபோல பாய்ந்து, பாய்ந்து அடிப்பாள். இந்தக் காட்சியில் தியேட் டரில் மக்கள் ஆரவாரத்தைப் பார்க்கணுமே!
தென்காசி குடும்பம்...
திரையுலகில் அப்போதைக்கப்போது அதிசயங்கள் நடப்பதுண்டு. அப்படி ஒரு அதிசயக் குடும்பம்தான் இந்த தென்காசி குடும்பம். குற்றா லிங்கம், சங்கரன், ஆறுமுகம், வசதியான குடும்பம் தான். கலை ஆர்வமுண்டு... முருகன் ஆயில் மில்ஸ் முதலாளிகள், நிறைய நண்பர்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர். மீது மாறா பற்றுடையவர்கள். தென் காசி, குற்றாலம் பகுதிக்கு எம்.ஜி.ஆர். போனால், இவர்கள் வீட்டிலிருந்துதான் சாப்பாடு போகும். தி.மு.க. நடத்திய தென்காசி மாநாட்டுக்கு பெரும் உதவியாக இருந்தது இந்த முதலியார் குடும்பம். அண்ணா, கலைஞர், நாவலர், அன்பழகன் என எல்லோரும் இந்த குடும்பத்தோடு நல்லுறவு பேணி வந்தார்கள். சில எம்.ஜி.ஆர். படங்களை திருநெல் வேலி, கன்னியாகுமரி ஏரியாக்களுக்கு சில நண்பர் களோடு சேர்ந்து வாங்கி விநியோகஸ்தர்கள் ஆக வும் விளங்கியவர்கள். இதில் கடைசித் தம்பியான ஆறுமுகம் படம் எடுக்க ஆசைப்பட்டார். மற்ற இரு சகோதரர்களும் மறுக்கவில்லை. ஆறுமுகம் சீட்டாடுவார், அதில் நிறைய நண்பர்கள். மூத்தவ ருக்கு ஆர்.எம்.வீரப்பனோடு பழக்கம் உண்டு. இவர் களோடு பழகியவர்கள்... பிரிந்துபோய் நான் பார்த்த தில்லை. பிற்காலத்தில் பெரிய, பெரிய பதவிகளுக்கு வந்த பலபேர் இவர்களது நண்பர்களாய் இருந் ததை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் இணைந்து எம்.ஜி.ஆரை இவர்களுக்கு படம் பண்ணும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. மூன்று சகோதரர்களும் சென்னை வந்து அலுவலகம் ஆரம்பித்தனர்.
"உங்களுக்கு இந்த தயாரிப்பு தொழிலில் அனுபவம் இல்லாததுனாலே ஆர்.எம்.வீரப்பனை உங்கள் ஒர்க்கிங் பார்ட்னராக வைத்துக்கொள்ளுங் கள்'' என எம்.ஜி.ஆர். சொல்ல, சத்யா மூவிஸ் உரு வானது. "தெய்வத்தாய்' முதல் படம். இதில் கே.பாலசந்தர் என்ற நாடக ஆசிரியர், எம்.ஜி.ஆரால் திரைப்பட வசனகர்த்தாவாக அறிமுகம் செய்யப் பட்டார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மேனேஜராக இருந்த ஆர்.எம்.வீ. தயாரிப்பாளராக உயர்வுபெற்றார். படம் நூறு நாட்கள் ஓடி சாதனை படைக்கிறது. என்ன லீலாவினோதம் நடந்ததோ தெரியாது. சத்யா மூவிஸ் "பேனர்' வீரப்பன் கைக்கும், லாபப் பணப் பங்கு தென்காசி சகோதரர்களுக்கும் போகிறது. அத்தோடு அவர்கள் ஊர் திரும்பினார்கள்.
சிலகாலம் கழித்தும் அவர்களை மீண்டும் சந்தித்த எம்.ஜி.ஆர். சென்னைக்கு வரவழைத்து ஒரு கம்பெனியை ஆரம்பித்து புதிய படம் தயாரிக்க வைக்கிறார். அதில் என்னை கதா சிரியராகவும், எஸ்.எஸ்.தென்னரசை வசனகர்த்தாவாகவும் அறிமுகம் செய்தார். இதில் மூத்த சகோதரர் குற்றாலிங்கமும், ஆர்.எம்.வீ.யும் கிடையாது. சங்கரன், ஆறுமுகம் சகோதரர்களுக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. தங்களோடு என்னை அலுவலகத்தில் தங்கவைத்து, பல பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தார்கள். முதல் படம் "புதிய பூமி'. இரண்டாவது "எங்க மாமா'. தொடர்ந்து "அனாதை ஆனந்தன்', அடுத்து "ஞான ஒளி'. பின்னர் "கண்ணே பாப்பா'. தொடர்ந்து "மன்னவன் வந்தானடி', மீண்டும் எம்.ஜி.ஆர். படம். அதற்குள் தேர்தல்... அந்தப் படம் பாக்யராஜ் நடிக்க "அவசர போலீஸ்' என்ற பெயரில் முடித்தார். அதன்பின் சகோதரர்கள் படம் எடுக்கவில்லை.
ஆனால் "ஜேயார் மூவிஸ்' என்ற அந்த அலுவலகம் எப்போதும் ஜேஜேன்னு கலகலப்பா இருக்கும். பல பிரபலங்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். எஸ்.எஸ்.தென்னரசு மூலமாக அந்த அலுவலகத்தில் பல பிரபலங்கள் பழக்கமானார்கள். அந்த அலுவலகத்தில் என்னை ஒரு இளைய சகோதரன் போலவே சங்கரன், ஆறுமுகம் இரு வருமே நடத்தினார்கள். அவர்களின் உறவினர்கள் அனைவரும் எனக்கும் நெருக்கமானார்கள். தென் காசி, குற்றாலத்துக்கு என்னை பலமுறை அழைத் துப் போயிருக்கிறார்கள். பெரியவர் பையன் அண்ணாத்துரை, சங்கரன் ஸார் பையன் முருகன், ஆறுமுகம் ஸார் மகன் அழகு எல்லோருமே தங்கள் குடும்பத்தில் ஒருவன் போலவே நடத்து வார்கள். சாப்பாடு தடபுடலாக இருக்கும். ஆறு முகத்தின் மாமனார் திருச்செந்தூர் கோவில் அறங் காவலராக இருந்தபோது என்னையும் அழைத்துப் போய் பல அபிஷேகங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பினைத் தந்தார். அவர் அம்பாசமுத்திரத்துக் காரர். அம்பாசமுத்திரத்தில் இவர்களுக்கு நிறைய உறவினர்கள் உண்டு. மணி முதலியார் பெரிய பேக்டரி நடத்தினார். அவரது சகோதரர்கள் டிரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் என்னிடம் பாசமாகப் பழகுவார்கள். இந்த நல்ல மனிதர்களோடு பழகிய நினைவுகளெல்லாம் தற்போது நினைத்துப் பார்க்க இதயத்துக்கு இதமாக இருக்கிறது. பலமொழிப் படங்கள், பல மாநிலங்கள் ஷூட்டிங் என அலைந்த எனக்கு இதையெல்லாம் நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் போனது. இன்று அந்த நல்ல உள்ளங்களை எண்ணி மகிழ்கிறேன்.
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்