ck

(94) ஆதங்கம் மட்டும் போதாது...!

"இன்றுபோல் சினிமாவுக்குள் நுழைவது, அன்று சுலபமான காரியமல்ல. அண்ணா, கலைஞர், கண்ணதாசன், ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், ஸ்ரீதர் போன்ற வலிமையான பேனாக்காரர்கள் ஆக்கிரமித்திருந்த திரையுலகில் நானும் கடினமான உழைப்பின் பின்னால் நுழைய முடிந்தது. ஒரு வித்தியாசமான கொள்கை, கோட் பாட்டை கடைபிடிப்பது என்ற முடிவோடு எழுத் தாளனாக எம்.ஜி.ஆர். ஆசியுடன் அரங்கேற்ற மானேன். ஒரு கதையை எழுதி அது படமாகி வெளிவந்துவிட்டால், அதேபோல் இன்னொரு கதையை எழுதுவதில்லை. புதிது, புதிதாக தேடி வித்தியாசமான கதையாக ஒவ்வொரு கதையும் அமைய வேண்டும் என முடிவெடுத்தேன். "புதிய பூமி' போல் "குமரிக்கோட்டம்' இல்லை. "எங்க மாமா' போல் "தங்கைக்காக' இல்லை. "ராஜபார்ட் ரங்கதுரை' போல் "முதல் குரல் இல்லை. "மனிதன்' போல் "தனிக்காட்டு ராஜா' இல்லை. "அட்ரா சக்கை... அட்ரா சக்கை' போல் "மனைவிக்கு மரி யாதை' இல்லை. "சங்கர் குரு' போல் "மின்சாரக் கனவு' இல்லை. "மைனர் மாப்பிள்ளை' போல் "பத்ரி' இல்லை. இந்த கோட்பாடுதான் என்னை இன்னமும் திரையுலகில் நிலைநிறுத்தி... வேகத்தடை இல்லாத மென்மையான வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது.

Advertisment

பொருத்தமே இல்லாத ஒரு யுவதியும், வாலிபனும் "சூப்பர் ஜோடி' என்ற நிகழ் வில் கலந்து ஒரு கோடி ரூபாயை ஜெயிக்க, திரு மணமான புத்தம் புது ஜோடியாக நடிக்க முடி வெடுத்து களம் இறங்கு கின்றனர். போட்டியில் சுலபமாக இந்த ஜோடி முன்னேறினாலும் ஒரே அறையில் தங்குவது, வெவ்வேறு பழக்க வழக்கங்கள், உணவு முறையில் வேறுபாடு, தூங்கும்போது ஏற்படும் அசௌகரியங் கள், நட்பு வட்டம்... இப்படி பல்வேறு விஷயங் களில் ஒத்துப்போக முடியவில்லை. தூங்கும்போது நாயகி குறட்டை விடுவாள். நாயகன் இரவுபூரா குசு விடுவான். இதைப் படிக்கும்போது வாசகர் களுக்கு அசௌகரியப்படலாம்... ஆனால் சில உண் மைகளைச் சொல்வது அவசியமாகிறது. இப்படி நடிக்கவந்த ஜோடியின் இரு ஆசைகள்... ஒன்று அந்தப் பெண் கோடியை ஜெயிப்பது. அவன் இந்த ஓட்டல் முதலாளியின் மகளை காதலிப்பது. இரண்டு பாதையிலும் முன்னேற்றம் இருவருக்கும் நடந்துகொண்டிருக்கும்போது திடீரென ஒரு திருப்பம். நடிக்க வந்த நாயகி காணாமல் போக... நாயகன் அவளைக் கொன்றுவிட்டானோ என போலீசுக்கு சந்தேகம் எழ, நாயகன் தலைமறை வாகிறான்... இது இடைவேளை! என் "தேனிலவில் மனைவி எங்கே?' என்ற என் அடுத்த படத்தின் கதை. இதில் பல புதிய காட்சிகள், இப்படித்தான் தேடலில் கதைக்கருவை கண்டுபிடிப்பேன். நிச்சயமாக இது காமெடி கலந்து வரும் போது வெற்றிப்படமாக அமையும்.

இதேமாதிரி நடிக, நடிகையர் தேர்வுக்கு நான் கையாளும் முறையும் வேறு மாதிரிதான் இருக்கும். என் அலுவலகத் துக்கு "கூன்'மேனன் சைக்கிள் ரிக்ஷாவில் ஒரு புதுப்பெண்ணை அழைத்து வந்தார். அந்தப் பெண் உயரமான, அமைதியான, குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களுக்கு சிறப்பாக இருப்பார் என என் மனதுக்குப் பட்டது. அந்த நேரத்தில் "ராஜபார்ட் ரங்கதுரை' பட ஆரம்ப வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்க இவர் சரியா இருப்பார் எனச் சொல்லி இயக்குநர் மாதவனிடம் அனுப்பி வைத்தேன். அவர் பார்த்துவிட்டு என்ன சொல்லி அனுப்பினாரோ எனக்குத் தெரியாது. அந்த கதாபாத்திரத்துக்கு குமாரி பத்மினி ஒப்பந்தமானார். என்னைத் தேடி "கூன்'மேனனுடன் வந்த பெண் வேறு படங்களில் நடித்து பிரபல நாயகியாக வலம்வந்தார். எனக்கொரு திருப்தி... அவர் பேர் சுஜாதா. அவர் கொழும்பில் வளர்ந்த பெண், நல்ல தரமான நடிகை.

ck

Advertisment

அன்றொரு நாள் மேதகு பிரபாகரனிடம் சொன்னேன்... அது இன்று நடக்கிறது. இந்திராகாந்தி அம்மையாரால் அழைக்கப்பட்டு, எம்.ஜி.ஆரின் முழு ஆதரவுடன் மேதகு பிரபாகரன், பேபி அண்ணா, யோகி, ரகு போன்றவர்கள் பெசன்ட் நகரில் தங்கியிருந்த காலகட்டத்தில் போராட்டத்தைப் பற்றியும், அதில் மக்கள் பங்களிப்பு பற்றியும் பல தடவைகள் விவரித்ததுண்டு. அப்படி ஒருநாள் விவாதத்தின் போது... "முன்பு தமிழகத்து மக்களோடு ஈழத் தமிழர்கள் தொப்புள்கொடி உறவு இருந்தது. தற்போது சில காலமாக அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் வளர்த்தெடுக்க வேண்டும். அடுத்து சினிமா என்ற மாபெரும் சாதனத்தை ஈழத்தமிழர்கள் கையில் எடுத்து, அதில் ஈழத்தமிழர்கள் முன்னிலை பெற்றால்... அதன்மூலம் உலக மக்களின் ஆதரவைப் பெறமுடியும். தமிழ் ஈழம் உருவாக அந்தக் கலையுலகம் பெரும் உதவியாக இருக்கும் என்று அன்று சொன் னேன். அது வரவேற்கப்பட்டது. இன்று கேரளாவில் "வேடன்' என்ற பெயரில் ஒரு ஈழத்தாயின் மகன் உலகைக் கலக்க ஆரம்பித்திருக்கிறான் தன் ராப் பாடல் கள் மூலம். பல பாட்டுப் போட்டிகளில் பல ஈழத்து இளைஞர்களும் யுவதிகளும் பங்குபெற்று முதலிடம் வகிக்கிறார்கள். நிரோஜன் போன்ற பல இளைஞர்கள் பல நல்ல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்கள். "டூரிஸ்ட் பேமிலி' என்ற படம்... ஈழத்து இயக்குநரால் இயக்கப்பட்டது. பெரு வெற்றி கண்டுள்ளது. ஈழத்தில் தயாராகும் தமிழ் படத்தில் நடிக்க எம்.எஸ்.பாஸ்கர் அங்கு சென்றுள்ளார். தயாரிப்புத் துறையில் ஈழத்தமிழரான சுபாஷ்கரன் தன் லைக்கா நிறுவனத் தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து இந்திய மொழிகளிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துவருகிறார். இப்படி ஈழத் தமிழர்களின் கலையுலக வெற்றியும்... அந்த மாவீரன் மேதகு பிரபாகரனின் தொலைநோக்குப் பார்வையின் வெற்றிதான். என்றோ ஒருநாள் உலகத் தமிழர்களை ஒன்றுதிரட்டி, தமிழர்களுக்கான தன்னாட்சியை உருவாக்கவும், ஈழத்தமிழ் இளைஞனே காரணமாக இருப்பான் என்பது திண்ணமே!

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக நான் அடிக்கடி போய் வந்த இடம் ஏவி.எம். ஸ்டுடியோ. பல வருடங்களாக தங்களின் சொந்தப் படங்களைத் தவிர, வெளியார் அங்கே படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்படுவ தில்லை. வெகு சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்த காலம் அது. அதன்பின் மற்ற தயாரிப் பாளர்களுக்கும் படப்பிடிப்புத் தளங்கள், ஒலிப் பதிவுக் கூடங்கள், எடிட்டிங் அறைகள் லேப் எல்லாம் வாடகைக்கு விடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் எனக்கு இருபது வயதிருக்க லாம். நடுவில் போய் நின்று சுற்றிச் சுழன்று பார்த்து பிரமிப்படை வேன். இத்தனையும் அப்பச்சி என்ற ஒற்றை மனிதரின் சாதனையா? எனக்கு வியப்பாக இருக்கும். அதன்பின் அவர் பிள்ளைகள் "முருகன் பிரதர்ஸ்' என்ற கம்பெனியை ஆரம்பித்து "வீரத்திருமகன்' போன்ற பல படங்களை எடுத்தனர். முருகன், குமரன், சரவணன், பாலசுப்பிர மணியம் நால்வரும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஒரே தங்கை, அவரின் கணவர் வீரப்பன், விநியோகத்துறையை கவனித்துவந்தார். தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே என்னிடமும் பழகிவந்தனர்.

பாலு ஸார் கல்யாணத்துக்காக ஒரு பெரிய படப்பிடிப்புத் தளம் பிரமாண்டமாக கட்டப்பட்டது. அந்த வரவேற்புக் குழுவில் என்னையும் ஒருவனாகப் போட்டிருந்தனர். ஒரு மாதத்துக்கு மேலாக திருமண வேலைகள் நடந்தன. அகில இந்திய திரைப்பட பிரபலங்கள் அனைவரும் வந்தனர். அத்தனை அரசியல் தலைவர்களும் வந்தனர். எனக்கு எல்லாமே பிரமிப்பாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சென்னையில் நீங்கள் போக விரும்பும் இடம் எது என்று கேட்டால் ஏவி.எம். ஸ்டுடியோதான் என்று சொல்வேன். அங்கே போனால் எனக்குப் பெரும் மனநிம்மதி ஏற்படும். பலபேர் என்னை ஏவி.எம்.மின் செல்லப்பிள்ளை என்றே அழைப்பார்கள். சினிமாவி லுள்ள அத்தனை தொழில்நுட் பங்களையும் நான் அங்குதான் கற்றேன். என் முதல் திரையுலக நண்பர் எஸ்.பி. முத்துராமனை அங்குதான் சந்தித்தேன். இன்றுவரை நான் அவர்களோடு கோபமாக நடந்திருப்பனே தவிர, அவர்கள் யாரும் என்னை கடிந்து கொண்டது கூட கிடையாது. ஏவி.எம். அவர்களை நானும் "அப்பச்சி' என்றே அழைப்பேன்.

ஒருதடவை மொத்தக் குடும்பமும் தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்குப் போனபோது என்னையும் அழைத்துப் போ னார்கள். நான் சுலபமாக யாரிட மும் பணம் கேட்கமாட்டேன். அப்பச்சியிடம் நான் கேட்ட போதெல்லாம் மறுக்காமல் தரு வார். என்னை தயாரிப்பாளராக்கி விட்டது அப்பச்சிதான். அந்தக் காலத்தில் சவுத் இந்தியன் ஃபிலிம் சேம்பரில் அமைக்கப்பட்ட செல்ப் ரெகுலேஷன் கமிட்டியில்... பத்துப் பேரில் என்னையும் ஒருவனாகப் போடவைத்தது அப்பச்சி தான். எனக்கென்று தனியாக ஒரு அலுவலகம், அதில் பணியாற்ற சுப்பையா என்றொரு பையன்... ஸ்டுடியோவுக்குள் ஏற்பாடு செய்து தந்தது அப்பச்சிதான். அவர் மறைவுக்குப் பின், நான் அனாதை ஆகிவிடுவேனோ என நினைத்தேன். மாறாக, அவர் பிள்ளைகளும்... என்னை விரும்பி அழைத்து வேலைகள் கொடுத்தனர்... அன்போடு பழகினார்கள்.

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

_____________

தொழிலாளியிடம் பங்கு கேட்கும் முதலாளித்துவம்!

ck

னது தீவிர முயற்சியால் கலைஞரின் உதவியால் அமைந்ததுதான் பையனூர் ஃபெப்சி தொழிலாளர் ஸ்டுடியோ. இங்க ரஜினி, விஜய் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்று பல கோடி மதிப்பில் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் தொழிலாளர் ஸ்டுடியோவில் சில முதலாளி அமைப்பு ஆதரவாளர்கள் "எங்களுக்கும் இந்த ஸ்டுடியோ சொத்தில் உரிமை உள்ளது' என பிரச்சினையை கிளப்பிவருகின்றனர். தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் விஷயத்தை கொண்டு சென்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளுக்கு தொழிலாளர் ஸ்டுடியோ குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஸ்டுடியோ பற்றிய விதிகள் அமைப்பு எனக்கு அத்துப்படி. அதனால் என்னை அழைத்தனர். அதன்படி "தொழிலாளர்களுக்கு மட்டுமே ஸ்டுடியோ சொந்தம்' என விளக்கமளித்தேன்.

-வி.செ.குகநாதன்