(85) உழைக்காமலே உயர்வு?!
எவையெல்லாம் வாழ்க்கையில் நம்மால் பணம் கொடுத்துக்கூட வாங்க முடியாதோ, அவை திரையுலகில் சுலபமாகக் கிடைத்துவிடும். உதாரணமாக நண்பர்கள், மகிழ்ச்சி, கனவு, நேரம், ஆரோக்கியம், அன்பு, நம்பிக்கை... இவற்றை எங்காவது வாங்கிவிட முடியுமா?
திரையுலகில் நான் கேட்ட முதல் வசனமே, ""அண்ணே, நான் பக்கத்திலே இருக்கும்போது நீங்க எதுக்கண்ணே கவலைப்படுறீங்க?'' நான் அவரை உற்றுப் பார்த்தேன்... முதல்லே இவர் யாரு?
எங்கேயோ பார்த்திருக்கேன். ஆனால் எங்கேன்னு தெளிவா புரியலே. தனியா போய் சிந்திச்சுப் பார்த்தேன், புரிந்து விட்டது. படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ணிக்கிட்டிருந்த பிரபலமான செட்டியார் கூட காரிலேயே வருவார். அந்த செட்டியார் நொந்து நொடிச்சு, சொந்த ஊருக்குப்போய் ஒரு மாசத்துக்கு மேலாச்சு. நான் மீண்டும் அவர் அருகே வந்தேன். ""என்னண்ணே... ஏதாவது பிரச்சினையா... எங்கிட்ட சொல்லுங்க.''
அந்த செட்டியார் பெயரைச் சொல்லி.. ""அவங்க சின்ன வீடு, காமெடி வேஷமெல்லாம் பண்ணுவாங்களே...''
உடனே, இவர் அந்தம்மா பேரைச் சொல்லி... ""அவங்க வேணாம்ணே... ராசியே இல்லாதவங்க, அவங்களைப் போட்டா படமே ஓடமாட்டேங்குது...'' என்று சொன்னவர், அத்தோடு நிறுத்தவில்லை. ""நாளைக்கு காலையிலே நான் ஒரு ஃபிகரை அழைச்சுக்கிட்டு வர்றேன்... பாருங்க, பிடிச்சா போட்டுடலாம்''... புரிந்து கொண்டேன்.
எப்படியோ அதை, இதைச் சொல்லி பத்துப் பதினைந்து நாட்களுக்குள்ளே அந்த ஆளை கட்பண்ணி விட்டுட்டேன். ஆனால் சுமார் ஆறு மாசத்திலே அதே நபரை ஒரு சிவப்பு பியட் காரிலே போவதைப் பார்த்தேன். அடுத்தடுத்து பல சினிமா விழாக்களில் புது, புது பெண்களை அழைச்சுக்கிட்டு வருவாரு. அவரை வரவேற்பதில் சினிமாக்காரங்க மட்டுமில்லே.. அரசியல்வாதிகள் கூட ஆர்வம் காட்டுவார்கள். கொஞ்ச நாளைக்குள்ளே அவர் மிகப் பிரபலமாயிட்டாரு. எல்லா வி.ஐ.பி.க்களும் அவருக்கு வேண்டியவராயிட்டாங்க. பல சினிமா பிரபலங்கள் அவரைத் தேடிப்போய் காத்திருந்து... தங்கள் காரியங்களை அவர்மூலம் சாதித்துக்கொள்ள ஆரம்பித்தனர். இது என் ஆரம்ப காலங்களில் நான் பார்த்த ஒரு மனிதரின் உழைப்பில்லா வளர்ச்சி.
இன்னுமோர் நிகழ்வு... சில வருடங்களுக்கு முன்னால் நடந்தது. நான் வேலை செய்த ஒரு கம்பெனிக்குப் போனேன். வழக்கமாக நான் எந்த கம்பெனிக்குப் போனாலும் நேராக முதலாளி அறைக்குப் போய்விடுவேன். யாரும் தடுப்பதில்லை. ஆனால் அன்று மேனேஜர் என்னை "பத்து நிமிஷம் உக்கா ருங்க, ஒரு வி.ஐ.பி. உள்ளே பேசிக்கொண்டி ருக்கிறார்' எனச் சொல்லி பக்கத்து அறையில் அமரவைத்தார். கொஞ்சநேரம் கழித்து, முதலாளி நான் அமர்ந்திருந்த அறைக்குள் வந்து ""ஸாரி குகநாதன்... கொஞ்சநேரம் உங்களை காக்க வச்சிட்டேன்... வாங்க'' என என்னை தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். நான் அமர்ந்ததும் அவரே பேச ஆரம்பித்தார். ""ஒரு பிரபல தெலுங்கு தொழில்நுட்பக் கலைஞருக்கு வருமான வரித்துறையால் ஏதோ பிரச்சினை. அதை டெல்லியில் பேசித் தீர்க்கணும். அவர் என்னை நாடி வந்தார். எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை... ஆனால் நம்ம கம்பெனியில் நடிச்ச ஒரு நடிகை இதை முடிக்கக் கூடியவர்' எனச் சொன்னார்கள். அவரை வரவழைச்சுப் பேசினேன். முடிக்கலாம்னு சொன்னாரு'' என்றார்.
சில வாரங்கள் கழித்து அந்த முதலாளியை சந்தித்தபோது... ""என்ன ஸார்... அந்த டெல்லி விஷயம் முடிஞ்சுதா?'' எனக் கேட்டேன்.
""நல்லபடியா முடிச்சுக் குடுத்துட்டாங்க அந்தம்மா'' என்றார். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை. தலை சுற்றியது. இதுவும் பழைய வரலாறு.
சுமார் ஆறேழு வருஷத்துக்கு முன்னால் எனக்குத் தெரிந்த தம்பி ஒருவர் ஒரு பெரிய படம் எடுத்தார். அந்த சமயத்தில் ஒரு பெரிய ஓட்டலுக்கு அடிக்கடி போய்வருவார். ""அங்கே எதுக்கு அடிக்கடி போறீங்க? அங்கேதான் சாப்பிடுவீங்களா?'' எனக் கேட்டேன்.
""இல்லே ஸார், இங்கேதான் அவர் தங்கியிருக்காரு. காலையிலே, மாலையிலே அவரை சந்திச்சு விவரங்களை கேட்டு அதுக்கான ஏற்பாடுகளைச் செய்வேன்.''
""யார் அவரு? உங்க ஃபைனான்ஸியரா?''
""இல்லே... ஹீரோ, ஹீரோயின்கிட்ட பேசுறது, வியாபாரம் பேசுவது, பெரிய பிரஸ்மீட் அரேஞ்ச் பண்றது, சாட்டிலைட் ஓவர்சீஸ் விலை பேசுறது... அவர் பெரிய புரமோட்டர்.''
""அவர் உங்க ஆபீசுக்கு வந்து பேசலாம்லே?''
""அப்படியெல்லாம் வரமாட்டாரு. ரொம்ப பெரிய ஆளு. இந்த ஓட்டல்லே கூட தங்கமாட்டாரு. இதைவிட பெரிய ஓட்டல்லேதான் தங்குவாரு. நான் கேட்டுக்கிட்டதுனால இங்கே வந்தாரு.''
""அப்ப ரூம், சாப்பாடெல்லாம் உங்க கணக்கா? இதில்லாம பணமும் குடுக்கணுமா?''
""ஆமா ஸார்... பின்னே சும்மா செய்வாங்களா?''
""அது எவ்வளவு?''
""அஞ்சு ஸார்...''
""ஐந்து லட்சமா?'' ஆச்சரியமா நான் கேட்டேன்.
""இல்லே ஸார்...''
""ஐம்பது லட்சமா...?'' நான் கேட்டேன்.
""அதுக்கு மேலே''
""படம் முடிஞ்ச பின்னாடி குடுக்கணுமா?''
""முன்னாடியே குடுத்துட்டேன்... இல்லேன்னா வரமாட்டாரு.''
இது பொய்யல்ல... நடந்தது, நடப்பது. நாயக னோ, பெரிய நாயகியோ, பெரிய இயக்குநர்களோ நேரடியாகப் பேசுவது கிடையாது. அப்படிப் பேசும் வாய்ப்பு வந்தால் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தான். "தேதியை இவர்கிட்டப் பேசுங்க' எனச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். இதையெல்லாம் கேட்டா உங்களுக்குத் தலை சுத்தும். அதனாலேதான் தயாரிப்பு கம்பெனிகள்... அதாவது தொடர்ந்து பெரிய, நல்ல படங்களை தயாரித்து வந்த கம்பெனிகள் குறைந்துவிட் டன. பெரிய படத் தயாரிப்பு, ஃபைனான்ஸியர்ஸ், கார்ப்பரேட்ஸ், தியேட்டர் அதிபர்கள், நாயகன், நாயகி... புரமோட்டர்ஸ் கைக்குள் போய்விட்டது. ஓ.டி.டி. தளங்கள், மீடியேட்டர்ஸ்... சி.இ.ஓ.க்கள் கைக்குள் போய்விட்டது.
அண்மையில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். மாலை நேரம் ஒரு கோயிலுக் குப் போயிருந்தேன். என் பூஜையை முடித்துக்கொண்டு கிளம்பும் சமயம் ஒரு அய்யர் என்னோடு இனிமையாகப் பேசுபவர், அருகில் வந்து... ""ஸார்... கே.ஆர்.விஜயாம்மா வந்திருக்காங்க'' என்றார்.
""எங்கே'' எனக் கேட்ட படி சுற்றிப் பார்த்தேன். என் கண்ணில் படவில்லை.
""என்ன குகநாதன் ஸார்... உங்க குரலைக் கேட்டே நான் புரிஞ்சுக்கிட்டேன்...'' -குரல் வந்த திசையில் பார்த்தேன். அர்ச்சனை சாமான்கள் வாங்கும் கடையில் அந்தப்பக்கம் பார்த்தபடி அவர்கள். நான் அருகில் போனேன்... திரும்பினார் கள். அதே கண்கள், அதே சிரிப்பு... முதுமைத் தாக்கம் மட்டும் சற்றுத் தெரிந்தது.
""எப்படிம்மா... நான் உங்களைப் பார்த்து பல வரு ஷங்களாச்சு... என் குரல்...''
""அதை விடுங்க... ஜெயா எப்படி இருக்கா?''
""நல்லா இருக்கா!''
""கேட்டேன்னு சொல் லுங்க.''
""பக்கத்திலேதான் வீடு, வாங்க வந்து ஒரு காப்பி சாப்பிட்டுப் போகலாம்...''
""இனிதான் அர்ச்சனை பண்ணணும்... லேட்டாயிடும். கண்டிப்பா இன்னொரு நாள் வர்றேன்'' எனச் சொல்லிவிட்டு பல விஷயங்களை மனம்விட்டுப் பேசினார்கள்.
இன்றைய நாயகி களைச் சுற்றி பவுன்ஸர்ஸ். நூற்றுக்கணக்கான படங் களில் நடித்து, சாதனைகள் புரிந்த கே.ஆர்.விஜயா கோயிலில் தனியாக. அந்த நாட்களில் சொந்த விமானம் வைத்திருந்த நடிகை. வீட்டுக்குள்ளேயே ஸ்விம் மிங்ஃபூல். அவர் அன்றும், இன்றும் மாறவில்லை.
சூரியன் மாலையில் அஸ்தமித்து, மறுநாள் காலையில் உதயமாவான். சந்திரன் பதினைந்து நாட்கள் தேய்ந்துகொண்டே போய் மறைவான். மறுபடி பதினைந்து நாட்கள் வளர்ந்து பூரண நிலவாய் மிளிர்வான். இரண்டையுமே கண்ணுற்றேன். கலை உலகமும் இதுபோலத் தான்...!
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்