ck

"நக்கீரன்' வாசகர்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் ஆளாகியிருப்பதால், அளவு கடந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் முக்கியமான கேள்விகள் சிலவற்றிற்கு இடையிடையே பதில் சொல்வது என் கடமை என எண்ணி, அண்மையில் அதிகமாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கிறேன்.

கேள்வி இதுதான்...

"தலைவர்களைப் பற்றி, நடிகர் -நடிகைகள் பற்றி, தயாரிப்பாளர்கள் பற்றி, இயக்குநர்கள் பற்றி எல்லோரைப் பற்றியும் எழுதும் நீங்கள், உங்கள் தந்தையார் பற்றி எழுதவில்லையே ஏன்?'' -என்பதுதான்.

Advertisment

உண்மையாகவே சொல்லவேண்டுமானால்... என் ஹீரோ என் தந்தையார்தான். அவரின் வாழ்க்கையை, சாதனைகளை, வீரத்தை, விவேகத்தை முழுமையாக எழுதினால்... என் கதை சுவையற்றதாகி விடும். யாரோ வாழ்க்கையை தியாகம் செய்து அமைத்த பாதையில், நாம் ஓடி வந்து வெற்றிபெற்றால் அந்த வெற்றி நமது என கொண்டாட முடியாது.

cc

Advertisment

ஏழு மைல் நீளமும், ஐந்து மைல் அகலமும் கொண்ட ஒரு தீவிலிருந்து இரண்டு கடல்களைத் தாண்டிப் போனால்தான் யாழ்ப்பாண மெயின் நிலப்பரப்பை அடைய முடியும். முதல் கடல் வேலணை கடல், இரண்டாவது கடல் பண்ணை கடல். தற்போது இரண்டு கடல்கள் மீதும் பாலங்கள் கட்டப்பட்டுவிட்டது. என் தந்தையார் காலத்தில் இந்த இரண்டு கடலையும் சிறு வள்ளத்தில்... சமயத்தில் தானே தள்ளிவந்து, பின் பெரிய மூங்கில் கம்பின் துணையோடு வலித்து வந்து, படித்திருக்கிறார். பின்னர் தீவிலிருந்து படகு மூலம் தொண்டிக்கு வந்து படித்திருக்கிறார். பத்தொன்பது வயதிலேயே ஒரு "இந்து போர்ட்' பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக இருந்து, பல தடவை இந்தியா வுக்கு அழைக்கப்பட்டு காங்கிரஸ் மாநாடு களுக்கு வந்து பங் கேற்றதை செய்திக் குறிப்புகள் சொல்லு கின்றன. அய்யா முத்துராமலிங்கத் தேவரின் அன்புக்கு பாத்திரமானவராக அவர் இருந்ததையும் அறிய முடிகிறது. மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்தபோது ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில், தேசப்பிதாவை வரவேற்க நாலுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, அதில் என் தந்தையும் ஒருவராக இருந்தார்.

பின்னர் சங்கானை சிவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராக பொறுப்பேற்கிறார். அது பல ஜாதி மக்கள் வாழும் பிரதேசம். ரவுடித்தனம் மிக அதிகம். பள்ளிக்கு வரும் மாணவிகள், ஆசிரியை களை... ரவுடிகள் எந்த பயமுமின்றி உள்ளே நுழைந்து கலாட்டா செய்வார்கள். வகுப்பை நடத்த விடமாட்டார்கள். எவரும் ஏனென்று கேட்க முடியாது. என் தந்தையார் முதலில் அவர்களை அன்போடு கண்டித்தார். கேட்பதாக இல்லை... தொல்லை நிற்பதாக இல்லை. அடுத்த தடவை அப்படியொரு நிகழ்வு நடந்தபோது இறங்கி அடித்து ரவுடிகளை விரட்டியடித்திருக்கிறார் சினிமா பட பாணியில். அதன்பின் ரவுடிகள் பள்ளிக்கூடம் பக்கமே வருவதில்லை. ஆனால் செல்லையா மாஸ்டரை (என் தந்தையை) மறைந்திருந்து தாக்க திட்டமிட்டுள்ளனர்.

cc

இந்த தகவல் தெரியவந்த பின்னால் என் தந்தையார் ஆயுதம் எடுத்துச் செல்ல ஆரம்பித்தார். ஆனால் தந்தையாரிடம் படித்த மாணவர்களும், சில ஆசிரியர்களும் அவருக்கே தெரியாமல், பாதுகாப்புக்காக பின்தொடர்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். பின்னர் தந்தை நேரடியாக, எதிரிகளை தேடிப்போய் கண்டிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் பெயர் யாழ்குடா நாடு பூரா பரவ ஆரம்பித்தது. ஏழைபாளைகள் அவரிடம் பாதுகாப்பு தேடிவர ஆரம்பித்தனர். வறுமை நிலையிலுள் ளோர் பண உதவி கேட்டு வருவார்கள். யாருக்கும் இல்லையென்று சொல்லமாட்டார். அதன்பின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

ன் அப்பா மரணமடைந்தபோது அவரைப் பற்றி கலைஞர் அவர்களும், கவிஞர் வைரமுத்து அவர்களும் நெகிழ்ந்து எழுதியது...

அன்புடையீர், வணக்கம்!

தங்களின் அன்புத் தந்தையாரும், முப்பதாண்டு காலத்திற்கு மேல் தலைமை யாசிரியராக பணியாற்றியவரும், இந்திய காங்கிரஸ் விடுதலை இயக்கத்தில் உறுப்பினராக இருந்து அரும்பணியாற்றியவருமான திரு.விசுவலிங்கம் செல்லையா அவர் கள் திடீரென்று இயற்கையடைந்தார் கள் என்பதனை தங்கள் கடிதம் மூலம் அறிந்து வருந்து கிறேன். அன்புத் தந்தையாரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

மு.கருணாநிதி

அறிவு விளக்கு

அணைந்துவிட்டது!

-கவிஞர் வைரமுத்து

ஈழம்தந்த வேழம்ஒன்று

காலம்முடிந்து சாய்ந்துவிட்டது

முப்பத்தைந்து முழுவருடங்கள்

அறிவுவிளக்கை ஏற்றிய விளக்கு

அழவைத்துவிட்டு அணைந்துவிட்டது

அடிமை விலங்கை உடைப்பதற்காக

விடுதலைக் கோடரி

ஏந்திய வேங்கை

மரணக்காட்டில் மறைந்துவிட்டது

ஜாதியை ஒழித்துச்

சமத்துவம் பேண

நீதியைக்கேட்டு

நிமிர்ந்த தலைவன்

நினைவுகளாலே

சுவடுகள் பதித்து

காலக்காற்றில் கரைந்துபோயினான்

ss

பேச்சுவார்த்தைகள் நடத்துவதாலே

பேதங்கள் இங்கு தீராது என்றான்

பொதுவுடைமைஎனும் புவிச்சித்தாந்தம்

சாதிவேரைச் சாய்த்திடுமென்றான்

உழைத்துக்களைத்த உத்தமன்பெயரை

தெருவும் நெற்றியில் அணிந்துகொண்டது

கல்விச்சாலையை நிறுவிய தந்தை

கள்ளிப்பூக்களுள் முல்லையாய் முகிழ்த்தான்

கலைஇளவரசன் குகநாதனையும்

திரைக்கு வழங்கிய தியாகத்தந்தையை

மரணம் இங்கே மறைத்திட முடியுமா?

மண்ணும் வானும் மாபெருங்கடலும்

இருக்கும் வரைக்கும் அவர்புகழ் இருக்குமே!

அடுத்த இதழில்...

எம்.ஜி.ஆரை வேறு நடிகர்களுடன் ஒப்பிடாதீர்கள்...!

(திரை விரியும்)

dd