(70) சொந்த புத்தியிருந்தால் கண்டுபிடி... மந்த புத்தியிருந்தால் காப்பியடி!
மிகச் சிறுவயதிலேயே "புலித்தேவன்' நாடகத்தில் நாயகனாக நடித்தேன். "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை பல தடவைகள் பார்த்து, அதில் சிவாஜி சார் நடிப்பை காப்பியடித்து, யாழ் நகரில் நடித்து நல்ல பெயர் வாங்கினேன். "ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூ சர்க்கரை...', ஆனால் சென்னை வந்த பின்னால் அப்படிச் செய்வது கேவலம் என்று பட்டதனால், நாடகங்களில் இயக்குநர்கள் சொல்வதை அப்படியே நடித்து நல்ல பெயர் வாங்கினேன். கலா ஷேத்ரா, மெட்ராஸ் நாட்டிய சங்கம் ஆகிய இடங்களில் நடிப்புப் பள்ளியில் படித்து ஓரளவு என்னை தேற்றிக்கொண்டேன். அதனால் பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் மேடையில் பேசும் கலை மட்டும் சரியாக வரவில்லை. அதனால் ஒவ்வொரு மேடையிலும் வெவ்வேறு விதமாகப் பேசிப் பழகினேன். அதுவும் காப்பிதான்... அதனால் நான் பட்ட அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சேலத்தில் ஒரு கல்லூரி விழாவில் பேச சுப.வீ. அவர்களையும், என்னையும் அழைத்திருந்தார்கள். நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக பேரறிஞர் அண்ணாவின் பேச்சுக்களைக் கேட்டு, படித்துக் குறிப்பெடுத்துக்கொண்டு போனேன். பேச ஆரம்பித்ததும் நல்ல வரவேற்பிருந்தது. ஓரிடத்தில் சற்று உச்சஸ்தாயியில் குரலை உயர்த்தி... "ஆகவே, என் அருமை மாணவமணிகளே, ஓடிவாருங்கள்... ஓடிவாருங்கள்'' எனப் பேச... மண்டபத்தின் பின் வரிசையிலிருந்த சில மாணவர்கள் "டேய்... கூப்பிடுறாருடா... வாங்க, வாங்க'' என கூச்சல் போட்டபடி மேடையிலிருந்த என்னை நோக்கி ஓடிவந்தனர். எனக்கு சிறிதுநேரம் எதுவுமே புரியவில்லை. எதையோ பேசிவிட்டு அமர்ந்து விட்டேன். இந்த அவமான நிகழ்வுக்குப் பின்னால், பல மாதங்களாக எங்கேயும் பேச அழைத்தால் நான் போவதில்லை. கம்பன் கழக விழாக்கள், பட்டிமன்றங்கள், மாநாடுகள் என்று எல்லா இடங்களுக்கும் பார்வையாளனாகப் போவேன். அதன்பின் குறிப்பெடுத்து, என் சொந்த பாணியில் பேச ஆரம்பித்தேன். என்ன தலைப்புக்காக நான் பேச அழைக்கப்படுகிறேனோ, அதைத் தவிர வேறு எதையுமே பேசுவதில்லை. இது எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்' என்ற பழமொழி என்வரை உண்மை யானது. பலரும் என்னைப் பேச அழைத்தனர். தற்போதெல்லாம் சற்று நகைச்சுவை கலந்து பேசுவேன். அதிலும் ஒரு சிக்கல் அண்மையில் ஏற்பட்டது. பொதுவாக மக்கள் விரும்பும் இசைக்குழுவினர் கச்சேரி நடக்கும்போது இடையிடையே சிறப்பு விருந்தினர்களை பேச அழைப்பார்கள். நல்ல, தங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் போது, இடையில் பேசப்போகிறவர் சீரியஸா எதையாவது பேசினால் மக்கள் பொறுமையிழந்து நெளிவார்கள், கூச்சலும் போடலாம். இவற்றைப் புரியாமல் கருத்துக்களைப் பேசி முகத்தில் கரி பூசிக்கொள்பவர்களும் உண்டு.
அண்மையில் சென்னையில் ஒரு பெரிய ஹாலில் ஒரு இசைக் கச்சேரி. நானும் ஒரு சிறப்பு அழைப்பாளராகச் சென்றேன். நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில்தான் நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன். இதில் இரு ஆபத்துகள் உண்டு. ஒன்று, கச்சேரி நடத்துபவர்கள் இறுதியில் சில நல்ல பாடல்களை பாடித்தான் நிகழ்ச்சியை முடிப்பார்கள். அதற்கான எதிர்பார்ப்போடு மக்கள் இருப்பார்கள். மக்கள் சற்று களைத்துப்போயிருக் கும் நேரம், இந்த மாதிரி நேரத்தில் பேசுவதென்பது ரிஸ்க்கோ ரிஸ்க். அதனால் என் பேச்சை ஆரம் பிக்கும்போதே, சில நகைச்சுவை துணுக்குகளுடன் ஆரம்பித்தேன். இவை ஒரு பிரபல வக்கீல் நண்பர் எழுதிய புத்தகத்தில் படித்தவை என்று சொல்லித்தான் ஆரம்பித்தேன்.
"அன்று தண்ணீரைக் கொண்டு அனைத் தையும் சுத்தம் செய்தோம்... இன்று தண்ணீரையே சுத்தம் செய்துகொண்டிருக்கிறோம்...' நல்ல கைத்தட்டு. அடுத்து'an apple a day keeps the doctor away If the doctor's wife starts taking an apple a day... then what will happen to doctor'.இதற்கும் பலத்த சிரிப்பு. மூன்றாவதாக, "இங்கே பல அரசியல்வாதிகள் இருக்கிறீர்கள். இப்போ நான் சொல்லப்போகும் நகைச்சுவைத் துணுக்கும் அதே வக்கீல் நண்பர் எழுதியதுதான். உங்களில் யாரையும் குறிப்பிடுவது அல்ல... பொதுவானதே' என்று விளக்கிவிட்டுச் சொன்னேன். "திருடர்கள் பொதுவாக அரசியல்வாதிகள் வீடுகளில் திருடப் போகமாட்டார்கள். "ஏன்?' என்று கேட்டுவிட்டு ஒருநிமிடம் நிறுத்தினேன். ஹாலில் பலத்த சிரிப்பு. 'டழ்ர்ச்ங்ள்ள்ண்ர்ய்ஹப் ஸ்ரீர்ன்ழ்ற்ங்ள்ஹ்' இருவரும் செய்வது ஒரே தொழில்தான். அதனால் தொழில் தர்மம் கருதி திருடர்கள், அரசியல்வாதிகள் வீடுகளுக்கு திருடப்போவதில்லை' என முடித்தபோது... அரங்கமே அதிரும் அளவு நெடுநேரம் நீடித்தது கைத்தட்டு. நான் இறங்கி வந்ததும் என் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய அரசியல் தலைவர் மேடையேறி, நான் பேசியது தவறு என்பதுபோல ஆரம்பித்து, எல்லா அரசியல் வாதிகளும் அப்படியல்ல என பேசினார். அவர் பேசியது உண்மை. நான் பேசியது நகைச்சுவைத் துணுக்கு.
இதேபோல் ஒரு பிரபல நடிகரின் படம் நூறு நாள் ஓடியதற்கான விழா. நானும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். நடிகரின் ரசிகர்கள் அரங்கில் நிரம்பிவழிந்தனர். நான் பேசும்போது சொன் னேன்... "இந்த நடிகரின் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். நல்ல திறமைசாலி, ஆனால் அவர் எட்டவேண்டிய உயரத்தை இன்னமும் எட்டாதிருப்பதுதான் எனக்கு வருத்தம்' என்றேன். பலத்த கைத்தட்டு, என் கருத்து அந்த மன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் நடிகர் முகம் மாறியது. அவர் அருகேயிருந்த பட நாயகியும் என் பேச்சை ஆதரித்து கைதட்டியதை நான் கவனித்தேன். நான் யாரிடமும் பணம் வாங்கிக்கொண்டு பேசப்போகிறவன் அல்ல. பெட்ரோலுக்கோ, டிரைவருக்கோ பணம் வாங்கமாட்டேன். ஆனால் பேசப்போகும் கூட்டத்தில் அழைத்தவர்களுக்குப் பயன்படும் விதமாக ஏதாவது ஒரு கருத்தை விதைத்துவிட்டு வருவது என் வழக்கம். சிலருக்கு அது பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. சதா புகழ்ந்து மட்டுமே பேசவேண்டும் என விரும்புவார்கள். அது என்னால் முடிவதில்லை. அதேபோல் என் நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் அதையே செய்தால் எனக்குப் பிடிக்காது.
தமிழ்நாட்டில் பேச்சுக்கலை பெருமளவு வளர்ந்தது திராட இயக்கங்களினால்தான். ஒருதடவை பேரறிஞர் அண்ணா தன் அறிவார்ந்த தம்பிகளோடு பேசிக்கொண்டிருந்தபோது... தம்பிகள், தங்கள் மேடைப் பேச்சுகள் பற்றி அண்ணா என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளார் என தெரிந்துகொள்ள விரும்பினர். ஒவ்வொருவரும் கேட்க, கேட்க அண்ணா தயங்காமல் உதாரணங்களோடு பதிலளித்து வந்தார். ஒரு தம்பி, தன் பேச்சு பற்றி கேட்டபோது... அண்ணா பதிலளிக்க மறுத்துவிட்டார். அந்த தம்பி விடவில்லை... சொல்லச் சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே... "வேண்டாம்பா... நீ கோபப்படுவே... விட்டுடு' என்றார். அந்த தம்பி விடுவதாயில்லை. "சரி... சொல்றேம்பா... ஆனால் வருத்தப்படக்கூடாது' என்ற உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டு, இப்படிச் சொன்னார்.
"அழுகின்ற குழந்தை முன்னாடி ஆட்டிக் காட்டப்படும் கிலுகிலுப்பை போன்றதப்பா உன் பேச்சு'' என்றார்.
புரியாத தம்பி, "கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க'' என கேட்டார்.
"குழந்தை விடாமல் அழுதா, தாயார் கிலுகிலுப்பையை எடுத்து குழந்தை முன் வேகமாக ஆட்டுவார். அந்த வித்தியாசமான ஓசையைக் கேட்டு அழுகையை நிறுத்திவிட்டு கிலுகிலுப் பையை வேடிக்கை பார்க்கும். குழந்தை கையிலே குடுத்திட்டா சுத்திச் சுத்தி ஆட்டிப் பார்த்து எங்கேயிருந்து சத்தம் வருதுன்னு புரியாமல் சிரிக்க ஆரம்பிச்சிடும். அது மாதிரிதான் தம்பி உன் பேச்சு. லட்சம் பேர் கூடியிருக்கிற கூட்டத்திலே நீ பேசினால்... கேட்பவர்கள் வீரியம் பெறுவார்கள். "அதோ நம் எதிரி, வெட்டி வீழ்த்துங் கள்' என நீ சொன்னால், உடனே ஆளுக்கொரு கத்தியை எடுத்துக்கிட்டு நீ சொன்னதை செய்யப் புறப்படுவார்கள். ஆனால் பாதி வழியில் நின்று யோசிப்பார்கள். "நாம ஏன் அவர்களை வெட்டணும்?' அடுத்தவன் கேட்பான், "நம்மளை உசுப்பிவிட்டுட் டானேப்பா... பேச்சைக் கேட்டு தப்பை பண்ண இருந்தமே' மூன்றாமவன் சொல்வான் "வெறித்தனமா பேசி வெறி ஏத்தி விட்டுட்டானே' இப்படி எல்லாரையும் புலம்ப வச்சிடும் உன் பேச்சு. அதனால்தான் பொதுவா எல்லா தம்பிகளுக்கும் "கத்தியை தீட்டாதே புத்தியை ஹ்ட்டு' எனச் சொல்லிவச்சேன்'' என முடித்தார் அண்ணா.
இந்த இடத்தில் நான் படித்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறன். இது கண்ணதாசனின் கருத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் மொழியின் இனிமையையும், சுவையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால்... அண்ணாவையும் ஈ.வி.கே. சம்பத்தையும் உரையாடவிட்டு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்'' என்றார்.
(திரை விரியும்)