ss

(62) ஆன்மிகப் பாதை!

ஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் "தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன். ரஜினியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, நகைச்சுவைக் காட்சிகளில் வெகு இயல்பாக நடித்து கலகலப்பை உண்டாக்குவார். அவர் சீரியஸாக செய்வதுபோல் செய்வார்... ஆனால் மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். "தனிக்காட்டு ராஜா' படத்தில் அவர் ஸ்ரீதேவியுடன் நடித்த பல காட்சிகள் இப்படித்தான் இருக்கும். அவரின் அமோக வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். உதாரணம் "சந்திரமுகி', சிவாஜி- 'THE BOSS' போன்ற பல படங்கள்.

Advertisment

"நான் யாரோட பாதையிலும் போகமாட்டேன். நான் போற இடமெல்லாம் பாதையா மாறணும். நான் யாரோட நிழல்லேயும் இளைப்பாறி சோம்பேறியாக மாட்டேன். என் நிழல்லே சோம்பேறிங்க உருவாகவும் விடமாட்டேன்...'' -இதுதான் அந்த கதாபாத்திரம். மற்றவர்கள்போல் அல்லாமல், தனக்கென்று ஒரு லட்சியம்... அதனால் அவன் "தனிக்காட்டு ராஜா.'

அப்பா கேட்பார் மகனிடம்...

"ஏம்பா, நீ செய்ய நினைக்கிறதை... அடிதடியில்லாமல், அமைதி வழியிலே செய்யலாமே?''

Advertisment

மகனின் பதில்...

"ஆபரேஷன்னாலே குணப்படுத்த வேண்டிய வியாதியை, ஆறுதலான வார்த்தைகளால குணப்படுத்த முடியாதுப்பா.''

"நீ குற்றவாளியாகவோ, கொலைகார னாகவோ ஆயிடுவியோன்னு பயமாயிருக்கு'' என்பார் அப்பா.

"பகத்சிங்கும், வாஞ்சிநாதனும் செய்தது கொலைன்னா... நாடுபூரா ஏம்பா அவங்களுக்குச் சிலை வைக்கிறாங்க... விழா எடுக்குறாங்க?''

ரஜினியின் கதாபாத்திரம் தீவிரவாதிபோல் தோன்றும், ஆனால் இன்றைய சூழலுக்கு எது வேண்டும் என வழிநடத்தும் பாத்திரமே தவிர தீவிரவாதமல்ல.

"ஒருவன் மேடையில் கண்டதைப் பேச, ஒரு லட்சம் பேர் உட்கார்ந்து கை தட்டி விசிலடிச்சு ரசிக்கறது வேண்டாம். ஒரு லட்சம் பேர் களத்திலே இறங்கி வேலை செய்ய, அந்த வேலையை நன்கு தெரிந்த ஒருவன் அவர்களை வழிநடத்துற காலம் வரணும்'' என்பார் ரஜினி... -இப்படி பல வசனங்கள்.

cc

மக்கள் திரையை நோக்கி பணத்தை வீசினார்கள். நானே நேரில் பார்த்தேன். இந்தப் படத்தில் ஒரு பாடலில் நான் வற்புறுத்தி வாலி அவர்களை எழுதவைத்த வரிகள்... "நான் புரட்சித் தலைவருமில்லை, டாக்டர் கலைஞருமில்லை'' என்பது. ஏனோ எனக்கு அரசியல் வேண்டாம் என்று அன்று சொல்லிக்கொண்டிருந்த ரஜினி, பின்னால் அரசியலுக்கு வருவார் என ஒரு நம்பிக்கையிருந்தது. அதனால் இந்த வரிகளை வைக்க வேண்டுமென விரும்பினேன். இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என எண்ணினேனோ அதை ஏற்படுத்தியது. படத்தை ஆர்.எம்.வீரப்பன் பார்க்க விரும்பினார். ரிலீசுக்கு முன்பே போட்டுக் காட்டப்பட்டது. படம் முடிந்ததும் என்னை வெகுவாகப் பாராட்டினார். நான் அவர் கம்பெனிக்கு ரஜினியை வைத்துப் படம் எழுதி, இயக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மகிழ்வோடு சம்மதித்தேன். இறுதியாக என்னை அருகே அழைத்துப் பாடலில் குறிப்பிட்ட இந்த இரு வரிகளையும் நீக்கிவிடும்படி சொன்னார். சரியென்று தலையாட்டினேன். ஆனால் நீக்கவில்லை. அதனால் அவர் கம்பெனி படம் எனக்கு கிடைக்கவில்லை. ராமாவரம் தோட்டத்து வீட்டுக்குப் போய் எம்.ஜி.ஆரை இந்தப் படம் பார்க்க அழைத்தேன். என்னை தன்னோடு சாப்பிட வைத்தவர், என் "மாங்குடி மைனர்' படத்தைப் பார்த்துப் பாராட்டியவர்... இந்தப் படத்தைப் பார்க்க மறுத்ததோடு, அதற்கான காரணத்தை சொன்னதும் நான் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன்.

மூன்று படங்கள் ரஜினியுடன்... மூன்றும் மூன்று ரகம். அண்ணாமலைக்குப் பின்னால் ரஜினியின் வளர்ச்சி அசுர வளர்ச்சி. வெறும் நடிகர் என்றில்லாமல் அனைவருக்கும் வேண்டியவராக அனைவரின் மரியாதைக்கும் உரியவராக மாறினார். ஒரு காலகட்டத்தில் அவர் விரும்பியிருந்தால் தமிழக முதல்வராகும் வாய்ப்பு அவரை வட்டமிட்டது. தந்திரமாகக் கழட்டிவிட்டார். ஆனால் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ஆகிய அவர் அகில இந்திய சூப்பர் ஸ்டார் ஆனார். உலகின் பல நாடுகளில் அவர் படங்கள் வெற்றியைக் குவித்தது உண்மையே! அவர் வயதைப் பற்றி கவலைப் படாமல் மக்கள் அவர் படங்களைப் பார்த்தது பெரிய ஆச்சரியமான விஷயம். தவமாய் தவமிருந்து தன் தொழிலை செய்தார்.

ஒரு தடவை நான் பார்த்தது... ஒரு பெரிய தயாரிப்பாளர், பல படங்கள் பெரிய நடிகர்களை வைத்து தயாரித்தவர். அவர் ரஜினியை வைத்து சில படங்கள் தயாரித்தார். ஒருநாள் நானும் ரஜினியும் பேசிக்கொண்டி ருந்தபோது, இருவருக்கும் பொதுவான நண்பர் அங்கு வந்தார். நான் முன்சொன்ன தயாரிப்பாளர் தயாரித்து ரஜினி நடித்த படம் ஓடிக்கொண்டிருந்தது. ரஜினி, வந்த நண்பரிடம் "படம் எப்படிப் போகுதுன்னு விசாரிச்சீங்களா?' எனக் கேட்டார்.

"படம் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. இரண்டு, மூன்று தியேட்டர்களிலே போய் நேரிலே பார்த்தேன். ஜனங்க நல்லா ரசிக்கிறாங்க. ஆனால் தயாரிப்பாளர்தான் ஒரு மாதிரி பேசுறாரு...''ன்னு சொல்லிட்டு நிறுத்தினார்.

"அப்படி என்ன பேசினாரு'' என ரஜினி கேட்க...

"எல்லாரும் சொல்றாங்கன்னு என் வழக்கமான ஹீரோவை விட்டுட்டு, இவரை வச்சு படம் எடுத்தேன். நஷ்டம்தான் போல இருக்குன்னு பேசுறாரு'' என அந்த நண்பர் சொன்னதும், மறுபேச்சு பேசாமல், போன் போட்டு அந்த தயாரிப்பாளரிடம் "என்ன ஸார்... இப்படிச் சொன்னீங்களாமே? எவ்வளவு நஷ்டம்னு சொல்லுங்க, நான் குடுத்திடறேன். இனிமே நாம படமே செய்யவேண்டாம்'' எனச் சொல்லிவிட்டு, பதிலுக்காகக் காத்திருக்காமல் போனை வைத்துவிட்டார். இதை நான் ஏன் எழுதுறேன்னா தன் படங்கள் தோற்பதையோ, தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதையோ ரஜினி விரும்பமாட்டார்.

ff

முக்கியமான சமயங்களில் அவர் முடிவுகளை வித்தியாசமாக எடுப்பார். திரையுலகிலுள்ள அனைவரும் நெய்வேலி போய் போராட்டம் நடத்தியபோது, அதில் கலந்துகொள்ளாமல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அந்தப் போராட்டத்தில்தான் விஜயகாந்த், தன் ரசிகர்களோடு பங்கேற்று பெரும் மாஸ் காட்டினார். அவரின் அரசியல் பிரவேசத்துக்கு அது பெரிதும் உதவியது.

கன்னட ஹீரோ ராஜ்குமார், நேரடி அரசியலில் இறங்கமாட்டார். கலை, மொழி, கலாச்சார போராட்டங்களில் அவர் ரசிகர் மன்றத்தினர் வெறித்தனமாக பங்கேற்பார்கள். அவர் வீரப்பனால் கடத்தப்பட்டபோது, அவரை விடுவிக்க ரஜினி பெரும் பிரயத்தனம் எடுத்தார். இது மனிதாபிமான அடிப்படையில். ஆனால் ஏறத்தாழ ரஜினியின் பயணம் ராஜ்குமார் பாணியில் இருக்கும்.

நேரு ஸ்டேடியத்தில் தயாரிப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட கலைஞர் பாராட்டு விழாவில்... அஜித், "இந்த மாதிரி விழாக்களில் கலந்துகொள்ள மறுக்கும் நடிகர்களை மிரட்டுகிறார்கள்' என மேடையில் பேசியபோது, கீழே முன்வரிசையில் கலைஞர் அருகே அமர்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று கைதட்டி தன் ஆதரவை அஜித்துக்கு தெரிவித்தார். ஆனால் ஓரிரு நாட்கள் கழித்து அவரே அஜித்தை கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு அழைத்துப் போனார். இவர் வைகோவையும் பாராட்டுவார், திருநாவுக்கரசரையும் பாராட்டுவார், திருமாவளவனையும் பாராட்டுவார், சீமானையும் சந்திப்பார்... நண்பர் கலைஞானத்துக்கு வீடு வாங்கிக் கொடுத்தது இவர் கருணை உள்ளத்தைக் காட்டுகிறது. தமிழருவி மணியனிடம் இவர் காட்டிய மரியாதை காந்தீயத்துக்கும் தன் இதயத்தில் இடமுண்டு என்பதை நிரூபித்தது.

உறுதியாக ஒன்று சொல்வேன்... இவரை இத்தனை ஆண்டுகள் வெற்றிப் பவனி வரவைத்தது... இவரின் சில தீர்க்கமான முடிவுகளும்... இவர் நம்பும் ஆன்மிகமும்தான்!

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்