
(37) "எழுதாதே' என்றார் எம்.ஜி.ஆர்!
அன்று "குமரிக் கோட்டம்' கதையை வாங்கிக் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள், "நீங்க வசனம் எழுத வேண்டாம்'' என்றார்.
ஒரு பிரபலம், மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எழுதிவந்த என்னை.... "இனி அவரை எழுதவேண்டாம் என்று சொல்லுங்கள்'' என இன்னொருவரிடம் சொல்லி நிறுத்திவிட்டார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் படிப்பு கெட்டுவிடக்கூடாது... வசனம் எழுதினால் படப்பிடிப்பின்போது தளத்தில் வசனம் எழுதுபவர் இருக்கவேண்டுமே என்பதால் எம்.ஜி.ஆர் வேண்டாம் என்றார்.
அவரின் ரசிகனாக இருந்த இன் றைய பிரபலம், நான் எழுதவேண்டாம் என்று சொன்னதற்கு இன்னமும் கரணம் சொல்லவில்லை.
என் படமான "மைக்கேல்ராஜ்' பல மொழிகளில் படமாகி வெற்றி மேல் வெற்றியைக் குவித்தது. தமிழில் நூறு நாட்கள் ஓடியது. அது என் நூறாவது படம். அந்த விழாவை விமரிசையாக நடத்தினோம். அன்று முதல்வராக இல்லாத நிலையில்... கலைஞரே இந்த விழாவுக்கு தலைமையேற்க வேண்டும் என அவரை அழைத்தேன். அவர் மகிழ்வோடு கலந்துகொண்டது மட்டுமில்லாமல்... படத்தில் வரும் சில வசனங்களை நினைவில் வைத்து அவற்றை சொல்லிக்காட்டி "இவை எனக்குப் பிடித்த வசனங்கள்' என்றார்.
ஈழத் தமிழருக்காக நான் நடத்திய போராட் டங்களைப் பாராட்டியதோடு நிறுத்தாமல், "தம்பி குகநாதனின் தமிழ் சேவையும், கலைச்சேவையும் தொடரவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். ஆகவே என் துரோணரின் விருப்பத்தை என் உயிருள்ளவரை தொடருவேன். அதனால்தான் நக்கீரனில் தொடர் கட்டுரை எழுதுவதோடு, பல மொழிகளில் படங்களும் எழுதி, தயாரித்து வருகிறேன்.

அரசியல் படித்தவன், பொருளாதாரமும் படித்தவன், ஆனால் அரசியலை விரும்பாதவன், பன்னிரெண்டு வயதிலிருந்தே தமிழ் போராளியாகவும், ஈழப் போராட்ட ஆதரவாளனாகவும் அறியப்பட்டவன். என் சொந்த செலவில் மனிதச் சங்கிலி, வீரவணக்கம், எழுச்சிப் பயணம் போன்ற பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். தமிழர் அய்க்கிய முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் இதுபோன்ற எண்ணற்ற போராட்டங் களை நடத்தியுள்ளோம். அன்று என்னிடம் வந்து சேர்ந்த பல இளைஞர்கள் இன்று கட்சித் தலைவர்களாகவும், புது இயக்கங் களை ஆரம்பித்து அதன் நிறுவனர் களாகவும் இருப்பது கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். அதன்பின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நிறுவனமானபோது... அதில் துணை பொருளாளராக இருந்து கடமை யாற்றியுள்ளேன். அய்யா வீரமணி, மருத்துவரய்யா ராமதாஸ், அண்ணன் பழ.நெடுமாறன் ஆகியோர் தமிழ் தேசிய இயக்கப் போராட்டங்களிலும் என்னை வழி நடத்தியிருக்கிறார்கள். சகோதரர்கள் தொல்.திருமா, வேல்முருகன், சீமான், சுப.வீரபாண்டியன் இன்னும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலர் என்றும் பாசத்தோடு பழகிவருகிறார்கள்.
எந்த மேடையை நான் மறந்தாலும் பெரியார் திடல் மேடையை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. நான் நடித்த "எது அன்பு' நாடகம் 1964ல் அங்குதான் நடந்தது. அதற்கு சிறந்த நடிகர் பரிசு அய்யா சி.பா.ஆதித்தனார் எனக்கு வழங்கினார். அதேபோல் அந்த மேடையில் நடந்த பல கூட்டங்களில் பேசுவதற்கான வாய்ப்புகள் பிற்காலங்களில் கிடைத்தன. புதிய பல கருத்துக்களை அங்கு நடந்த கூட்டங்கள் வாயிலாக நான் கற்றுக்கொண்டேன். நான் நடிப்பு போராளியாக மாறிய காலகட்டத்தில் அய்யா வீரமணி அவர்களும், திராவிட கழக ஏனைய தலைவர்களும், தொண்டர்களும் தந்த ஆதரவை என்றுமே மறக்க முடியாது. இன்றும் நான் அங்கு போனால் அதே பாசத்துடன் பழகுவது மனதுக்கு இதமாக இருக்கிறது. மக்கள் மத்தியில் ஒரு மாதிரியும், தனியாக இருக்கும்போது இன்னொரு மாதிரியும் நடக்கத் தெரியாதவர்கள் திராவிட கழகத்தினர். உண்மையில் அது பெரியார் திடல்தான். அங்குள்ள அனைவருமே பலனையோ, பதவிகளையோ, விரும்பாமல் சமூகநீதி காக்க போராடி வருவது.. உலகில் எங்குமே காணமுடியாத வியப்பின் உச்சம். அந்த மேடையில் நான் பெற்ற "இனமான இயக்குநர்' என்ற பட்டம் தனிப்பட்ட முறையில் எனக்கான உச்சம். வாழ்க தந்தை பெரியார்!
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
__________
நிர்ணயிக்கும் சக்தி!
வழி தெரியாது விழி பிதுங்கி நிற்கும் நேரத்தில் என்னை சரியான பாதையில் பயணிக்க வைத்தது என் நிர்ணயிக்கும் சக்திதான். நேற்று கடவுளை நம்பாதவன் நாத்திகன். இன்று தன்னைத்தானே நம்பாதவன் நாத்திகன்.

எம்.ஜி.ஆர். அவர்களால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப் பட்டவன் நான். என் முதல் படம் "புதிய பூமி.' இப்படத்தின் படப் பிடிப்பு நாலே நாட்கள் நடந்து முடித்த நிலையில்... எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். படத்துக்கு பண உதவி செய்வதாகச் சொன்னவர் நழுவிவிட்டார். கலகலப்பாக இருந்த கம்பெனி சலசலப்பற்று காணப்பட்டது. ஏதாவது படத்துக் குப் போவதானால் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியார் என்னை அழைத்துப் போவார். "தில்லானா மோகனாம்பாள்' படம் ஏவி.எம்.மில் விநியோகஸ்தர் களுக்கு போட்டுக் காட்டப்பட்ட போது... என்னையும் அழைத்துப் போயிருந்தார். படத்தைப் பார்த்து விட்டு வரும்போது "நாதஸ்வரம்... நடனம்... அந்த கோஷ்டிகள் கதை. நாவலா படிக்கும்போது சுவையாக இருந்தது. படமா ஓடுமா? மக்கள் விரும்புவார்களா' என சந்தேகப்பட் டார் கனகசபை செட்டியார். சில வினாடிகள் மௌனமாக இருத்த அவர், திடீரென "என்ன குகன்... உங்க அபிப்பிராயம் என்ன?, படத்தை வாங்கலாமா? வேண் டாமா?'' எனக் கேட்டார்.
படம் முடிந்தவுடனேயே என் நிர்ணயிக்கும் சக்தி... என்னிடம் சொன்னது, இந்தப் படம் ஓடும் என்று! அதையே செட்டியாரிடமும் சொன்னேன். அவர் வேறு பலரிட மும் கலந்து பேசி, படத்தை வாங்கி னார்... நல்ல லாபம் சம்பாதித்தார்.
அதேபோல் லிபர்ட்டி தியேட் டரில் இயக்குநர் மாதவன் படம் "முகூர்த்த நாள்' ரிலீஸ். முதல்நாள் முதல் "ஷோ'வுக்கு செட்டியார் என்னையும் அழைத்துப் போனார். இடைவேளையின்போது எழுந்து வெளியே வந்த அவர், "என்ன குகன்... மாதவன் இப்படி சொதப் பிட்டாரு... இந்த இடத்திலேயா இடைவேளை விடுவாங்க?'' என்றார். உடனே நான், "புதிய பூமிக்கு இடைவேளைக்கான இடம் படு சூப்பர்'' என்றேன்.
"என்ன, சொல்லுங்க''ன்னு கேட்டபடி, கூட்டம் குறைவான இடத்துக்கு நகர்ந்தார்.
பின்னால் போன நான் "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' என்ற பாடல் காட்சியையும்... வில்லன் காங்கேயன் ஊருக்குள் வந்து மக்களை மிரட்டி, எம்.ஜி. ஆரை ஊரை விட்டு விரட்டச் சொல்வதையும், அவன் எதிர்ப்பை மீறி எம்.ஜி.ஆர். அவனை அடித்து துரத்தி மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக அங்கேயே தங்கி டாக்டராக பணியாற்றும் காட்சி களைச் சொன்னதும் " "முகூர்த்த நாள்' படம் முடிந்ததும், என் னோட வந்து முழுக் கதையையும் சொல்ல முடியுமா?'' எனக் கேட்டார்.
"கதை பிடிச்சா நீங்க "பைனான்ஸ்' பண்றீங்களா?'' என சட்டெனக் கேட்டேன்.
"படம் முடியுற வரைக்கும் நீங்க இருக்கிறதா இருந்தா பணம் கொடுக்கத் தயார்'' என்றார்.
வீட்டுக்குப் போனதும் கதையைக் கேட்டார்... பிடித்து விட்டது. நெகட்டிவ் ரைட்ஸ் மீது மூன்று லட்சம் கொடுத்தார்.
படம் முடிந்தது. செட்டியார் என் நண்பர் தேவராஜ் குணசேக ரோடு சேர்ந்து மதுரை, திருநெல் வேலி ஏரியாக்களையும் வாங்கி னார். எம்.ஜி.ஆர். படமாச்சே... அனைவருக்கும் லாபமே! அதன் பங்கீட்டின்போது தயாரிப்பாளர் களுக்கிடையே சற்று மனத்தாங் கல், அதனால் ஏற்பட்ட விளைவு... பின்னர் தொடர்கிறேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/cinemakottagai-t_0.jpg)