புது ஹீரோயின்கள்!
100 கோடி வசூலில் "அரண்மனை 4'’ இணைந்ததால் படுகுஷியில் இருக்கிறார் சுந்தர்.சி. அதே குஷியோடு அடுத்ததாக "கலகலப்பு 3-ஆம் பாகத்தை ஆரம்பித்து ஜூலையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் சுந்தர்.சி, இதுவரை மிர்ச்சி சிவா, விமல் ஆகியோரை புக் செய்துள்ளார். சமீபகாலமாக தனது படங்களில் இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்துவரும் சுந்தர்.சி. அந்த சென்டிமெண்டை இந்தப் படத்திலும் தொடர்கிறார். தற்போது முதல் ஹீரோயினாக வாணி போஜனை புக் செய்துள்ளார். இன்னும் இரண்டு நாயகிகளைத் தீவிரமாக தேடி வருகிறார்.
பொன்ராம் பேச்சுவார்த்தை!
இயக்குநர் பொன்ராம் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்க பேச்சு வார்த்தை நடைத்தினார். DSPபடத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கவும் முயற்சித்து வந்தார். விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை வைத்து படமெடுக்க தயாரானார். ஆனால் எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை. இதனால் தனது வெற்றிப் படமான "வருத்தப்படாத வா-பர் சங்கம்', படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார். அதற்காக சிவகார்த்திகேயனைப் போலவே ஹீரோவைத் தேடிய அவர், கவினை ஓ.கே. செய்து பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்.
38 ஆண்டுகள்...!
ரஜினி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் "கூலி'’படப்பிடிப்பு, ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது. படத்தில் நிறைய ஸ்டார்கள் நடிக்கவுள்ளனர். ராகாவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஷோபனா, ஸ்ருதிஹாசன் என பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில் தற்போது சத்யராஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ளதாம் படக்குழு. 38 வருடங்கள் கழித்து ரஜினிக்கு நண்பனாக சத்யராஜ் நடிக்கவுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
புது ஹேர் ஸ்டைல்!
"கங்குவா' படத்தை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு செல்கிறார் சூர்யா. முதற்கட்ட படப்பிடிப்பு ஜுன் மாதம் அந்தமானில் ஆரம்பமாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மலையாள நடிகர் ஜோஜுஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவிடம் பேசிவருகிறார்கள். இந்நிலையில்... லோகேஷ் கனகராஜ் பட ஸ்டைலைப் போல டைட்டில் டீசரை வெளியிட படக்குழு முடிவுசெய்து அதற்காக மூன்றுநாள் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளது. படத்திற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார் சூர்யா. ரசிகர்களை அது வெகுவாக கவர்ந்துள்ளதாம்.
காஜல் நம்பிக்கை!
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வந்த காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் "சத்யபாமா' என்னும் தெலுங்குப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்காக சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் 7 வெளியாகிறது. மேலும், ஷங்கர் கமல் கூட்டணியில் உருவாகும் "இந்தியன் 2' ஜூலை 12ல் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் தனது மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தும் என்கிற நம்பிக்கையில் உள்ளார் காஜல் அகர்வால்.