பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழூரில், தனது சோழர் கால பாசன மீட்புக்கான நடைபயணத்தை அரங்கேற்றி, தங்கள் கட்சியினருக்குப் புத்துணர்ச்சியையும், பொதுமக்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த நடை பயணத்தில் வழக்கறிஞர் பாலு, மா.செ. காடுவெட்டி ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.எம்.டி. திருமாவளவன் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.
கீழப்பழூரில் தொடங்கிய இந்தப் பயணம், கரைவெட்டி, திருமழப்பாடி, திருமானூர், காமராசவல்லி, குருவாடி, தூத்தூர், விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, கோவிந்த புத்தூர், ஸ்ரீபுரந்தான், காசாங்கோட்டை, கோட்டியால், தா.பழூர், அரியலூர், வீணாக் கைகாட்டி, தத்தனூர், உடையார்பாளையம், சூரியமணல், ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், மீன்சுருட்டி, காட்டுமன்னார்கோவில் வரை சென்று நிறைவுபெற்றது.
இடையில் அரியலூர், தா.பழூர், மீன்சுருட்டி, காட்டுமன்னார்கோயில் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் தமது விழிப்புணர்வு நடைபயணம் குறித்து அன்புமணி பேசினார். செல்லும் வழிநெடுகிலும், எதிர்பட்ட மக்களிடம் அவர் விழிப்புணர்வு நோட்டீஸ்களை கொடுத்து, ஏரிகள் மீட்பு குறித்து விளக்கிக் கூறினார். இந்தப் பயணத்துக்கு அரியலூர் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பார்க்க முடிந்தது. பல்வேறு சமூக ஆர்வலர்கள், அரியலூர் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. சின்னப்பா உட்பட பலர் அன்புமணியை நடைபயணத்தின் போது சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஏரி மீட்பு குறித்து அன்புமணி அறிவிக்கும் புள்ளிவிவரங்கள் தெறிக்க விடுகின்றன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் பிரிப்பது கொள்ளிடம் ஆறு. தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம். அதேபோல் அரியலூர் மாவட்டப் பகுதிகளும் சோழர் காலத்தில் நெற் களஞ்சியமாகத் திகழ்ந்திருக் கின்றன. ஆனால் அப்படிப்பட்ட அரியலூர் மாவட்டம் இப்போது வறண்ட மாவட்டமாக உள்ளது. காரணம், சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 97 ஏரிகள், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் 482 ஏரிகள், நகர்ப்புறப் பகுதிகளில் 4 ஏரிகள், உட்பட மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. இவற்றுக்கு கொள்ளிடம் மருதையாறு போன்றவை மூலம் நீர் நிரம்ப வேண்டும். அப்படி நிரம்பும் வகையில், கி.பி. 11-ஆம் நூற்றாண்டில், கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, ஆட்சி செய்த ராஜேந்திர சோழன், பாசனக் கால்வாய்களை உருவாக்கி, மேற்படி ஏரிகளை உருவாக்கினார். அதோடு சோழகங்கம் ஏரி என்று அழைக்கப்படும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அருகே உள்ள பொன்னேரியை உருவாக்கி னார். இப்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரிகளுக்குத் தண்ணீர் வரவேண்டிய கால்வாய்கள் இப்போது தூர்ந்துபோய்க் கிடக்கின்றன. சோழர் காலத்தில் இந்த ஏரிகள் நிறைந்து, உபரி நீர் வீரநாராயணன் எனப்படும் வீராணம் ஏரிக்கு சென்று நிரம்பும்.
இந்த ஏரியில் இருந்து நிலங்கள் பாசனம் பெறுவதோடு, சென்னைக்குக் குடிதண்ணீரும் கொண்டு செல்லப்படுகிறது. சோழ மன்னனின் சகோதரி செம்பிய மாதேவி, தனது கணவரின் பெயரால் 415 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை உருவாக்கினார். அதன் பெயர் கண்டராதித்தன் ஏரி. அதற்கு நந்தியாறு, கூழையாறு ஆகியவற்றின் மூலம் நீர் நிரம்பி, அதன் உபரிநீர் வேட்டக்குடி, காமராசவல்லி, சுத்தமல்லி, பவித்திர மாணிக்கம் ஆகிய பகுதிகளுக்குச் செல்கிறது. எனவேதான் சோழர்களின் பாசனத் திட்டத்தைப் புனரமைத்தால், கூடுதலாக சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த புள்ளிவிபரங்களை எல்லாம் தனது பேச்சில் அன்புமணி விளக்கினார்.
மேலும், “சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியும் அதன் பிறகு 55 ஆண்டுகள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் நடந்துள்ளன. இருந்தும் பெரிய அளவிற்கு நீர்ப்பாசனத் திட்டங்களை யாரும் உருவாக்கவில்லை. மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள் ஆங்கிலேயர் ஆட்சி வரை பராமரிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த பிறகு, ஏரிகளும் கால்வாய்களும் காணாமல் போய்விட்டன. எனவே அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசனத் திட்டத்தை நிறைவேற்ற சுமார் 3000 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து, போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளைச் சீர்படுத்தி, அரியலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்’ என்று அரியலூர் மாவட்டத்தின் பாசனத்துக்காகவும் குரல் கொடுத்தார்.
நடை பயணத்தின்போது ராஜேந்திரசோழனால் வெட்டப்பட்ட பொன்னேரியில், கங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு குடம் தண்ணீரை ஊற்றினார். பாசனத் திட்டங்கள் நிறைவேறும்வரை, அடுத்த போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார். சோழர்கால பாசனத்தைப் புதுப்பிக்கவேண்டும் என்று பா.ம.க. குரல் கொடுப்பதை, அப்பக்குதி விவசாயிகளும் பொதுமக்களும் வரவேற்கிறார்கள்.