"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழல்ல தமிழக அமைச்சரவை கூடப் போகுது.''”

"ஆமாம்பா, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் 17-ஆம் தேதி தொடங்குதே?''”

cm

Advertisment

"ஆமாங்க தலைவரே, சட்டசபைக் கூட்டம் பற்றி சில முக்கிய முடிவெடுப்பது பத்தி ஆலோசிப்பதற்காகத்தான் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் ஆயத்தத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். ஏற்கனவே கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத் தில், பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் எதற்காக மறுபடியும் இந்தக் கூட்டத்தைக் கூட்டறார்னு அமைச்சர்களே திகைச்சிப்போய் இருக்காங்க. இது குறித்துக் கோட்டை வட்டாரங்கள்ல விசாரிச்சப்ப, ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆறுமுகசாமி மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் தலைமையிலான விசாரணை கமிசன்களின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. இவற்றில் ஜெ.வின் மர்ம மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையில், சசிகலா உள்ளிட்ட சிலர் மீது குற்றம்சாட்டியிருக்குது.''”

"ஆமாம்பா, அவங்க மீது அரசு விசாரணை நடத்தணும்னு ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்திருக்குதாமே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, இந்த அறிக்கையின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, அதுகுறித்து சட்ட வல்லுநர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதோடு சேர்த்து அந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்னு தெரிவிச்சிருந் தது. அதன்படி அதற்கு முன்னதாக, சட்டத்துறையினரின் கருத்துக்களோடு, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை இப்போது அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெறுவதற்காகத்தான் முதல்வர் இந்தக் கூட்டத்தைக் கூட்டுகிறார்னு சொல்றாங்க. இந்த ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை, கொஞ்சமும் லீக் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அதை இரண்டே இரண்டு ஜெராக்ஸ் மட்டும் எடுத்து, அதில் ஒன்றை முதல்வரும் இன்னொன்றை கமிஷனரும் மட்டுமே வைத்திருக்கிறார்களாம்.''”

"சபையில் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?''”

"ரியாக்ஷன் பலமாத்தான் இருக்கும். ஏன்னா, இந்த அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வர் தாக்கல் செய்யும்போது, அவரது உரையே ஒரு சூறாவளி யாகச் சுழன்றடிக்கலாம் என் கிறார்கள் கோட்டை வட்டாரத் தினர். காரணம், தி.மு.க. பொதுக் குழுவில் தன் அமைச்சரவை சகாக் களுக்கு எச்சரிக்கை விடுத்ததுபோல், இந்த அறிக்கையின் மீது ஒரு அதிரடி உரையை அவர் நிகழ்த்த இருக்கிறாராம். அது அ.தி.மு.க.வின் இரு தரப்பினரையும் கதிகலங்க வைக்கும் வகையில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இது சிலருக்கு பெரும் சிக்கலை உரு வாக்கப் போகுது என்கிறார்கள்.''”

"கொடநாடு விவகாரத்திலும் முதல்வர் ஒரு சீக்ரெட் அறிக்கையை வைத்திருக்கிறாரே?''”

ops-eps

"ஆமாங்க தலைவரே, கொடநாடு கொலை, கொள்ளை விவகார வழக்கில் 316 பேர் கொடுத்த சாட்சியங்கள், ஊட்டி நீதிமன்ற நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் நகலை, குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு கேட்டபோது, அதை இப்போது வழங்க முடியாது. வழக்கின் முடிவில்தான் தரமுடியும்னு நீதிமன்றம் கைவிரித்துவிட்டது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்துவரும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம், இந்த வழக்கு தொடர்பாக இன்னும் புதிதாக என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறோம் என்று பட்டியலிட்டு, அதை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்திருக்கிறதாம். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான அறிக்கையின் நகல், எடப்பாடிக்கே போனது போல், இந்த ரிப்போர்ட்டும் கசிந்துவிடாதபடி, கவனமாக வைக்கப்பட்டிருக்கிறதாம். இது இந்த வழக்கின் போக்கை, பகீரூட்டும் வகையில் மாற்றப்போகிறது என்கிறார்கள்.''”

"தி.மு.க. மீது தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் வருத்தத்தில் இருக்கிறார்களே?''”

"தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தலில் தங்கள் சமூகத்தினருக்கு உரிய இடங்களை கட்சி ஒதுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்தார்கள் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர். இப்போது, தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலிலும் ஒரு இடத்தைக் கூட தங்கள் சமூகத்திற்கு ஒதுக்கவில்லைன்னும், எங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் என்றும் அதிருப்தியை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.''”

"சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான அ.தி.முக.வின் துணைத் தலைவர் யாருன்னு சபாநாயகர் தீர்மானிச்சிட்டாரா?''”

ee

"சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராக, இருக்கும் ஓ.பி.எஸ்.ஸை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாகத் தன்னால் நியமிக்கப் பட்ட ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கணும்னு, இரண்டாவது முறையா சபாநாயகர் அப்பாவுவுக்கு கடிதம் எழுதி இருந்தார் எடப்பாடி. இதைப்பார்த்த ஓ.பி.எஸ்.ஸும், அப்படி எல்லாம் செய்யக்கூடாதுன்னு தன் பங்கிற்கு அவரும் சபாநாயகருக்கு ஒரு கடிதம் கொடுத்திருக்கார். எதுக்கு இப்படித் திரும்பத் திரும்ப கடிதம் கொடுக்கனும்ன்னு விசாரித்தபோது, சட்டமன்றம் கூடுவ தற்கு முன், அது நடக்கும் நாட்களைத் தீர்மானிக்கும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூடுகிறது என் றும், இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் ஒரு உறுப்பினராக இருப்பார் என்றும் சொல்கிறார்கள், சட்டப்பேரவைத் தரப்பினர்.''”

"சரி''”

"அதனால், அந்த அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டத்தில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே, எடப்பாடி மறுபடியும் சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுத, இதில் திகைத்துப்போனதால் தான், ஓ.பி.எஸ்.ஸும் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார் என்றும் சொல்றாங்க. அதேபோல், இந்த விவகாரத்தில் யாரை ஆதரிப்பது? யாரைப் புறக்கணிப்பது?ங்கிறதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசித்திருக்கிறார் சபாநாயகர். அதோடு, இப்படிப்பட்ட விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவை விதிகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறாராம் சபாநாயகர். நிலவரம் என்னன்னு 17ஆம் தேதி தெரிஞ்சிடும்.''”

"ஒன்றிய அமைச்சர் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்த இணை அமைச்சரை பகிரங்கமாகவே புறக்கணிக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் ஒன்றிய கேபினெட் அமைச்சராக இருக்கும் பர்ச்ஜோத்தம் ரூபாலா, அண்மையில் தமிழகம் வந்தார். ஒன்றிய அரசின் மீன்வளத் திட்டங்கள் மீனவர்களுக்குச் சரிவர போய்ச் சேருகிறதான்னு அவர், இங்கே கடலூர் மாவட் டத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகுறித்து, துறையின் இணை அமைச்சரான தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனுக்கு அவர் தகவல் தெரிவிக்கவே இல்லையாம். இதனால் தான் அவமதிக்கப்பட்டதை உணர்ந்து எல்.முருகன் அப்செட்டாகிவிட்டார். பா.ஜ.க. மாநிலத் தலைவர்

dd

அண்ணாமலைக்கு போட்டியா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் எல்.முருகனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. இதனால் கோபமான அண்ணாமலைதான், எல்.முருகன் புறக் கணிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்காருன்னு சொல்றாங்க.''”

"சரிப்பா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.செ.க்கள் கூட்டத்தை எடப்பாடி நடத்தி னாரே?''”

"நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விடம் இருந்து 20 இடங்களையாவது அ.தி.மு.க. ஜெயித்தால்தான், 2026-ல் நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தல் வரை, நாம் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யமுடியும்ன்னு சொல்லியிருக் கிறார். இது தவிர, இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலை வர் கே.பி. முனுசாமி கலந்து கொள்ளவில்லை. இதுக்குக் காரணம் அவருக்கு வைரஸ் காய்ச்சல்ன்னு சொல்லப்பட்டதாம். ஆனால், முனுசாமிக்கு எந்தக் காய்ச்சலும் இல்லை என்றும், சமீபகாலமாக எடப்பாடிக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றும், சி.வி.சண்முகத்தை எடப்பாடி ஒன்றிய அமைச்சராக்கத் துடிப்பதை அவர் ரசிக்கவில்லை என்றும், அந்தத் தரப்பைச் சேர்ந்த சீனியர்களே சொல்றாங்க.''”

muu

"ஒரு காவல்துறை அதிகாரியால், ஒட்டுமொத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கொதிப்பில் இருக்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, வாகனத்தில் முந்திச் செல்வது தொடர்பான விவகாரத்தில் டாக்டர் விஜயலட்சுமி என்பவருக்கும், தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரியின் பேரன், பேத்திகளுக்கும் இடையே சென்னை வடபழனி பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது பற்றி முன்பே நம்ம நக்கீரனில் எழுதியிருந்தோம். இந்த விவகாரத்தில் டாக்டரின் கணவரும் அறநிலையத் துûயைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கண்ணன், அழகிரியின் பேத்தியை கன்னத்தில் அறைந்தது பூதாகரமான பிரச்சினையானது. இந்த விவகாரம் ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர நாயர் காதுக்குப் போக... அர் முடுக்கிய முடுக்கில், கண்ணன் ஐ.ஏ.எஸ். மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, ஆல்கஹால் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கொதித்துப்போயுள்ளதாம். இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விட மாட்டோமென வரிந்துகட்டுகிறார்களாம்.''”

"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். கடந்தமுறை உரையாடும் போது, தீயணைப்புத்துறை இணை இயக்குநரான பிரியா ரவிச்சந்திரன் ஒரு ஐ.எஃப்.எஸ். அதிகாரி என்று தவறாகக் குறிப்பிட்டுவிட்டோம். அவர், குரூப் 1 அதிகாரியாம்.''”