முதல்வர் ஒருவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு விசிட்டடித்து பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்தது வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்கிறார்கள்.

எப்போதுமில்லாதவகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து முன்னதாகவே தண்ணீரைத் திறந்து விட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்’ என அப்போதே கூறியிருந்தார்.

cc

Advertisment

அதேநேரத்தில், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளில் நடப் பாண்டிற்காக 80 கோடி ரூபாய் ஒதுக் கப்பட்டு மே மாத இறுதியில் முடிய வேண்டிய ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவற்றை ஆய்வுசெய்வதற்காக கடந்த மே 31-ஆம் தேதி சென்னையிலி ருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.

காலை 11.45 மணிக்கு விமான நிலையத்திலிருந்து நேராக திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியிலுள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்று சில நிமிடங்கள் ஓய்வெடுத்த அவர், அங்கி ருந்து கிளம்பி உறையூர் குழுமணி சாலையில் அமைந்துள்ள தி.மு.க.வின் கழக வெளியீட்டுச் செயலாளரான திருச்சி செல்வேந்தி ரன் வீட்டிற்கு சென்றார். அங்கு, முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்த படியே சிகிச்சை மேற்கொண்டுவரும் செல்வேந்தி ரனை சந்தித்து அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

திருச்சி செல்வேந்திரன் வீட்டிலிருந்து கிளம்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் வழியில் உறையூர் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, குண்டும் குழியுமாக காட்சியளித்த சாலைகளை உடனடியாகச் செப்பனிட்டு சரிசெய்யு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தார். பின்னர், அங்கிருந்து சுற்றுலா மாளிகைக்குக் கிளம்பிய முதல்வர் வழியில் பாரதிதாசன் சாலை யைக் கடக்கும்போது அவரது பார்வையில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் தென்படவே, யாரும் எதிர்பாராத வகையில் மாநகராட்சி அலுவலகத் திற்குள் தனது வாகனத்தை திருப்பச்செய்தார்.

cc

Advertisment

இதனால், அவரின் காருக்குமுன் பாதுகாப்பிற் காக சென்ற ‘கான்வாய்’ திகைத்து நிற்க, முதல்வரின் திடீர் வருகையால் திணறிப்போயினர் மாநகராட்சி அதிகாரிகள். முதல்வர் வருவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்புதான் அ.தி.மு.க.வினரின் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது 2022 - 23 ஆம் ஆண்டிற்கான திருச்சி மாநகராட்சியின் முதல் பட்ஜெட்.

மாநகராட்சி ஊழியர்களும், மனுக்களோடு குறைதீர் கூட்டத்திற்காக வந்திருந்த பொதுமக்க ளும் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, காரிலிருந்து இறங்கி அமைச்சர் கே.என்.நேருவோடு சேர்ந்து மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தார். இந்த திடீர் வருகையால் அவரை வரவேற்க ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாதிருக்க, மாநகராட்சியின் மாவட்ட சுகாதார அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவர் யாழினிதான் முதல்வரை வரவேற்றார்.

மாநகராட்சிப் பணிகள் உள்ளிட்டு முதல்வர் கேட்ட பல கேள்விகளுக்கும் திருப்தியளிக்கும் படியான பதில்கள் கிடைக்கவில்லை. சில பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்த காரணத்தால் முகச்சுளிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார். இந்த யாழினி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் என்பதுடன், விஜய பாஸ்கரின் கார் ஓட்டுநரைத் திருமணம் செய்து கொண்டவர். முதல்வரின் முகச்சுளிப்புக்குக் காரணமான, நகர்நல அலுவலர் யாழினி காத்திருப்போர் பட்டியலுக்குச் செல்லும் வாய்ப்புள்ளதாக உயரதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின் மாநகராட்சி அலுவலகத்தின் மாடி யிலுள்ள மேயரின் அறைக்குள் நுழைந்த மு.க. ஸ்டாலின், இருக்கையில் அமர்ந்தவாறு பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ஒவ்வொரு பிரச்சனைக்கும் மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, அவற்றைத் தீர்ப்பதற்கு உனடியாக ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்ட அவர், பிறகு, மாநகராட்சியின்

சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து வரச் செய்து ஆய்வுசெய்தார். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேல் ஆய்வுசெய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதன்பிறகே அங்கிருந்து கிளம்பினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு 6 ஆண்டுகளாக எந்த மாநகராட்சியிலும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், தற்போது அனைத்து மாநகராட்சி களிலுமே ஒவ்வொரு வாரமும் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம் சென்னை ஆவடிக்குச் சென்றபோது அம்பத்தூர் காவல் நிலையத்திலும், அதற்கு முன்பு தேனிக்கு ஆய்வுக்குச் செல்லும் வழியில் உசிலம்பட்டி தீயணைப்பு அலுவலகத் திலும், சமீபத்தில் சென்னை கிண்டியை கடக்கும் போது அங்கிருந்த கோட்டாட்சியர் அலுவலகத்தி லும், தற்போது திருச்சி மாநகராட்சியிலும் ‘முதல்வன்’ திரைப்பட பாணியில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “"மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப் படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடிவரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச்செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை''’என கூறியிருப்பதோடு, “அதை உறுதிப் படுத்த "நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்''’எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பையும், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.