கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூர் என 2 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. சிதம்பரம் பாராளு மன்றம் தனித்தொகுதி. இது சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் அரியலூர், ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டத்திலும், குன்னம், பெரம்பலூர் மாவட்டத்திலும் உள்ளது. சிதம்பரம் பாராளு மன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ந்து போட்டியிட்டு வருவதால் நட்சத்திரத் தொகுதியாக பார்க்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் 2 முறை அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உயரதிகாரிகளுக்கு அழுத்தம்கொடுத்து பரங்கிப்பேட்டை ரயில் நிலைய நடைமேடை உள்ளிட்ட பல பணிகளைச் செய்துள்ளார் திருமாவளவன். இதனை மக்கள் மத்தியில் சேர்ப்பதற்குக்கூட கட்சியினர் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் சராசரியாக 13 லட்சம் வாக்குகள் உள்ளன. இதில் தலித் மக்களின் வாக்குகள் 3.5 லட்சத்திற்கு மேல். இவரின் சொந்த ஊர் அங்கனூர் இந்த தொகுதியில்தான் வருகிறது.
இந்த நிலையில் இவர் கடந்த 10 ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதி மக்களுக்கு பல்வேறு பணிகளைச் செய்துள்ளதாகவும், கடந்த கொரோனா காலத்தில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று டன் கணக்கில் அரிசி வழங்கியது, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ 25 லட்சத்தில் இரத்தப் பரிசோதனை கருவி வாங்கிக்கொடுத்தது, பள்ளிகளுக்கு கட்டடம் உள்ளிட்ட பணிகள் செய்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடப் போவதாகவும் வி.சி.க.வினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 1996-க்கு பிறகு சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. போட்டியிடாததால் இத்தொகுதியில் தி.மு.க. போட்டியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. தொண்டர்களிடம் உள்ளது. இந்த பகுதியில் தலித் சமூகத்தில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மருதூர் ராமலிங்கத்திற்கு பிறகு சிறுவயதிலேயே கட்சிக்கு வந்து தி.மு.க.வின் பல்வேறுகட்ட பொறுப்புகள் வகித்து தற்போது கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக பணியாற்றுபவர் கிள்ளை ரவீந்திரன். கட்சியில் வாய்ப்பு கொடுத்தால் களத்தில் நிற்க தயாராக உள்ளார். இதற்கு மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.வின் கடைக்கண் பார்வை தேவை.
அதேநேரத்தில், வி.சி.க.வுக்கு தொகுதி இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியைப் பெற அழுத்தம் கொடுக்கத் தயாராக உள்ளது. காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம் வரிந்துகட்டுகிறார்.
"தி.மு.க. கூட்டணிக்கு சரியான சவாலைத் தர தயாராக உள்ளோம்'' என அ.தி.மு.க.வினரும் தயாராக உள்ளனர். அ.தி.மு.க. மேடையில் கடந்த 2 வருடங்களாக சிறப்பு அழைப்பாளராகத் தோன்றிவருபவர், மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜோதிடத் தொழில் செய்துவரும் ஈஸ்வர் ராஜலிங்கம். இவருக்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாண்டியன் ஆதரவு அதிகமுள்ளதால் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கட்சியினரே கூறிவருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 2 முறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று தற்போது கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராக உள்ள முருகுமாறனை கட்சி பரிசீலனையில் வைத்துள்ளது. அதேபோல் சிதம்பரம் தொகுதியில் 2014-ஆம் ஆண்டு அ.தி.மு.க. எம்.பி.யாக தேர்வுபெற்ற சந்திரகாசி களத்தில் தயாராக உள்ளார். அவர் காலத்தில் சிதம்பரம் ரயில் நிலையத்தை நவீனமாக்க முயற்சியெடுத்தது, அரியலூர், சிதம்பரம் ரயில் நிலையத்தில் 4 ரயில்களுக்கு நிறுத்தம் வாங்கிக்கொடுத்தது, மேம்பாலம் அமைக்க ஏற்பாடு செய்தது என நற்பெயர் இருக் கிறது. கடந்த முறை அ.தி.மு.க.வில் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற கொறடா தாமரை ராஜேந்திரன் ஆதரவாளர் சந்திரசேகர் மீண்டும் போட்டியிட தலைவர்களைப் பார்த்துவருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி 3 முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த தொகுதியை விடக்கூடாது என்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சியினரை அழைத்து கட்டளையிட்டுள்ளார். காட்டு மன்னார்கோயில் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்ட மருத் துவர் அன்புசோழன் போட்டி யிடத் தயாராக உள்ளார்.
தே.மு.தி.க.வுக்கும் இத்தொகுதி யில் கணிசமாக ஓட்டுக்கள் உள் ளன. சிதம்பரம் தொகுதியில் கட்சி யின் தெற்கு மாவட்டச் செயலாள ரான உமாநாத் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளார். பா.ஜ.க.வில் தடா.பெரியசாமி, துணைத்தலை வர் சரவணக்குமார் களமிறங்க தயாராக உள்ளனர். தி.மு.க.வின் துணைச்செயலாளர் ஆ.ராசா சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்ற தகவலும் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.
சிதம்பரம் தொகுதியைக் கைப்பற்ற அனைத்துக் கட்சிகளும் முட்டி மோதத் தயாராக உள்ளதால் யாருக்கு சீட் என்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
-ஏ.காளிதாஸ்