கொரோனா பரவியதிலிருந்து பள்ளிகள் சரியாக இயங்கவில்லை. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள்தான். தேர்வுகள் பலவும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி முதல் +2 வரை, 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 35 லட்சம் மாணவர்கள் பயில் கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த இரண்டரை லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலும் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கான சம்பளம், மாணவர்களுக்கான கட்டணம் என அனைத்தும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணையக்குழு மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்விக்கட்டணம், கிரேட் அடிப்படையிலும், அந்தந்த பள்ளிகளின் கட்டமைப்பு, வரவு செலவுகளின் அடிப்படையிலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. இது பள்ளிக்குப் பள்ளி மாறுபடும்.
1-5 வகுப்பு மாணவர்களின் கட்டணம் 7,000-25,000, 6-8 வகுப்புகளுக்கு 10,000-30,000, 9-10 வகுப்புகளுக்கு 12,000-32,000, 11-12 வகுப்புகளுக்கு 15,000-35,000 வரை என்று அரசு நிர்ணயித்திருக்க, அதைவிடப் பல மடங்காகக் கட்டணத்தை வசூலிக் கிறார்கள். தற்போது கொரோனா காலத்தில் உயர்நீதிமன்றம், அனைத்து மாணவர்களின் கட்டணத்திலும் 75 சதவிகிதம்தான் வாங்க வேண்டுமென்று ஒரு தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்புக்குப் பிறகும், பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களிடம் முழு கட்டணத்தையும் வசூலித்துள்ளன. பெற்றோர் களும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகத்தைப் பகைத்துக்கொள்ளாமல், யாரிட மாவது கடன்பட்டாவது முழுக் கட்டணத்தையும் செலுத்தி விடுகிறார்கள்.
பள்ளிக்கூட பராமரிப்பு, ஆசியர்களுக்கான ஊதியம், இவற்றை முன்வைத்துதான் மாணவர்களிடம் இந்த கொரோனா காலத்திலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் ஆன்லைனில் பாடம் எடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்களில், பெரும்பாலானவர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லை. இன்னும் பலருக்கு 25%, 50% என்ற அளவில்தான் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் கொடுக்கப்படாததைத் தட்டிக்கேட்கும் ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளார்கள். இப்படியான மன உளைச்சலால் இதுவரை தமிழகத்தில் 4 பேர் இறந்துள்ளனர்.
இதில் தனியார் பள்ளி ஆசிரியை பத்மாவதி, தனது கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாத விரக்தியில் தற் கொலை செய்துகொண்டார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட கல்வி அதிகாரிகளோ, தனியார் பள்ளி நிர்வாகத்தின் சார்பானவர்களாக மாறிவிடுவ தால், நிர்வாகத்தின்மீது எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படுவ தில்லை.
இதுதொடர்பாக தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "நான் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்தில் மிகக்கடுமையாக உழைத்து, மிகவும் எளிய முறையில் புரியும்படியாகப் பாடங்களைத் தயார்செய்து வகுப்புகளை ஆன்லைனில் நடத்தினேன். இருந்தபோதிலும் எனக்கு 9 மாதச் சம்பளத்தை எங்கள் பள்ளி நிர்வாகம் இதுவரையிலும் வழங்கவில்லை. ஆனாலும் வகுப்புகளை எடுத்துக்கொண்டே இருக்கிறேன்.
என்னை நம்பியிருக்கும் என் குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மூலமாகப் போராட்டம் செய்தால், நீ இந்த பணியில் இருந்தால் தானே சங்கத்தில் இருக்க முடியும் என்று பள்ளியை விட்டே நீக்கியுள்ளனர். எனவே இத்தகைய கொடுமைகளை வெளியில் சொல்லமுடியாமல் செத்து மடிகிறோம்" என்றார் விரக்தியாக.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜெயகண்ணன் கூறுகையில், "மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு விதிமுறைக்கு மாறாக பன்மடங்கு வசூலிக்கும் தனியார் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு மட்டும் கொடுக்க மறுப்பதேன்? தற்போதைய லாக்டௌனால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக தெலுங்கானா அரசு, மாதம் 2,000 ரூபாயும், 25 கிலோ அரிசியும் கொடுக்கிறார்கள்.
அதுபோல தமிழக அரசும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கல்வித்தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். பணியிடப் பாதுகாப்புக்கு அரசு ஆவண செய்ய வேண்டும்" என்றார்.
கல்வியாளர் இளமாறன் கூறுகையில், "தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து நிவாரண நிதி வழங்க வேண்டும். மொத்தமுள்ள 15 ஆயிரம் பள்ளிகளில் 5 ஆயிரம் பள்ளிகள் அங்கீகாரமற்ற வையாக உள்ளன. முந்தைய அரசு, 740 பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஒப்புதலின் அடிப்படியில் அங்கீகாரம் கொடுத்துள்ளது. பள்ளி மாறும் மாணவர்களிடம் கட்டணத்தைச் செலுத்தினால்தான் மாற்றுச்சான்றிதழ் தருவோமென்பதுபோல், ஆசிரியர்களையும் அவர்களது சான்றிதழ்களை வைத்துக்கொண்டு மிரட்டுகின்றனர். இத்தகைய இக்கட்டான சூழலிலிருந்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் நந்தகுமாரிடம் கேட்டபோது, "தற்போதுதான் பொறுப் பேற்றுள்ளேன். நிச்சயம் இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரனிடம் கேட்டபோது, "இதுதொடர் பான அனைத்து விஷயங்களும் முதல்வரின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்படும்" என்றார்.
தனியார் பள்ளிகளின் தேவை மிகுந்துள்ள இன்றைய காலகட்டத்தில், இந்த ஆசிரியர்களின் மனக்குமுற லுக்கு உடனடித்தீர்வு காணவேண்டியது புதிய அரசின் கடமைகளில் ஒன்றாகும்.