ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமான கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையின் இரு பொதுமேலாளர்களான லண்டன் சுப்பிரமணியன், பால சுப்பிரமணியன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்திய தமிழக அரசு, தற்போது கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் விவகாரங்களை ஒவ்வொன்றாக கையிலெடுக்க ஆரம்பித்துள்ளது. அதிகளவில் கவனம் எடுக்கப்படாமலிருந்த டி.என்.பி.எல். தொழிற்சாலையில் நடந்த 400 கோடி நிலக்கரி ஊழல் குறித்து தற்போது தோண்ட ஆரம்பித்துள்ளது.
கரூர் டி.என்.பி.எல். காகித ஆலை கடந்த 1983-ல் தொடங்கப்பட்டது. 1986 முதல் செயல்பட்டு வரும், இதன் உற்பத்திப் பிரிவில் காகிதக்கூழிலிருந்து தரமான பேப்பர் தயாரிக்கப்பட்டு இந்தியா மற்றும் 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 3,000 கோடி ரூபாய்வரை வர்த்தகம் செய்யும் பிரம்மாண்டமான நிறுவனம்.
இந்நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டு அதன்மூலம் காகித உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி வாங்கப்படும்.
அரசியல்வாதிகளின் வழிகாட்டுதலில் அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல் லீலையால், பத்து நாட்களுக்கு மேல் நிலக்கரி கையிருப்பு இல்லாத தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது டி.என்.பி.எல். நிறுவனம்.
கடந்த ஆட்சியின் கடைசிக் காலகட்டத்தில் (2020) ராஜீவ் ரஞ்சன் தலைமைச் செயலாளராக இருந்தபோது, 1.80 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்ய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் வழக்கமாக கலந்துகொள்ளும் செட்டிநாடு, அதானி, ஸ்மார்ட் ஜென் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட், பாரதயா எனர்ஜி பி.லிட் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.
தலைமைப் பொறுப்பி லிருந்தவர்கள் நிலக்கரி டெண்டரை ஒதுக்க, கனமான கமிஷன் எதிர்பார்த்தனர். அதானி, செட்டிநாடு ஆகிய நிறுவனங்கள் தரமான நிலக்கரிகளை சப்ளை செய்வதால், அவர்கள் கமிஷன் கொடுக்க முன்வரவில்லை. எனவே அவர்களை ஓரம் கட்டியது.
ஸ்மார்ட் ஜென் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட், பாரதயா எனர்ஜி பி.லிட் இந்தோனேசியா இரு நிறுவனங்களும் கமிஷன் கொடுக்க முன்வந்ததாகத் தெரிகிறது. அதனடிப்படையில் அதிகளவில் கமிஷன் கொடுப்ப தாக உறுதியளித்த ஐதராபாத் ஸ்மார்ட் ஜென் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சாதகமாக டெண்டர் விதிமுறைகள் மாற்றியமைக் கப்பட்டன. அப்போதைய தலைமைச் செயலாளரான ராஜீவ் ரஞ்சன், இந்தோ னேசியாவின் பாரதயா எனர்ஜி பி.லிட் நிறுவனத்தை தவிர்ப்பதற்காகவே, வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்துகொள்ளக்கூடாது என்ற புதிய விதிமுறையை வகுத்தார்.
இதற்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய பாரதயா எனர்ஜி பி.லிட் நிறுவனம், இந்த டெண்டருக்கு தடையாணை பெற்றி ருக்கிறது. இதனால் டி.என்.பி.எல்.-க்கு வரவேண்டிய நிலக்கரி வராமல் தடைப்பட்டுள்ளது. கையிருப்பில் இருக்கும் நிலக்கரியைக் கொண்டு பத்து நாட்களுக்கு மட்டுமே சமாளிக்க முடியும் என்பதால் உள்ளூரில் கொள்முதல் செய்து நிலைமையை சமாளிக்க டி.என்.பி.எல் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
இதில் ஒரு விநோதம் என்ன வென்றால்... நீதிமன்றத்தை நாடிய அதே இந்தோனேசிய நிறுவனம்தான், 2016 முதல் டி.என்.பி.எல்.லுக்கு நிலக்கரி விநியோகித்து வருகிறது. இந் நிறுவனத்தின் தரமற்ற நிலக்கரி யால்தான் டி.என்.பி.எல்.லுக்கு 400 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத் நேரடிப் பார்வையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான லண்டன் சுப்பிரமணி என்ற அதிகாரி மூலம் பாரதயா எனர்ஜி பிரைவேட் லிமிடெட்டில் இருந்து இந்த நிலக்கரி கொள்முதல் நடந்ததாகவும், இதில் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மற்றும் அவரது அக்கா மகன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
"சின்ன மீன்கள் சிக்கி யாச்சு...…பெரிய மீன்கள் எப்போது சிக்கும்' என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் டி.என்.பி.எல்.லின் நேர்மையான அதிகாரிகள்.