அ.தி.மு.க.வின் 50-ஆவது ஆண்டு பொன்விழா அக்டோபர் 17 அன்று சென்னையில் திரண்ட அ.தி.மு.க.வினர், தலைவர் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி திருவிழா போன்று கொண்டாடினர். மறுபுறம் ’ஜெ.’ சமாதியை வணங்கிவிட்டு ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா என்ற கல்வெட்டைத் திறந்துவைத்து கட்சியின் பொதுச்செயலாளர் நான்தான் என தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டார். கட்சியின் 50-ஆம் ஆண்டு பொன் விழாவின்போது நடந்த இந்தச் சம்பவம் காட்டுத்தீயாய்ப் பரவி அ.தி.மு.க.விற் குள்ளே கடும் கொந்தளிப்பைக் கிளப்பியது.
"கல்வெட்டில் பெயர் இருந்தால் கட்சிக்குப் பொதுச்செயலாளரா?'
"மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனா?'
என்று ஒரு ஸ்டெப் முன்னே சென்று குரலை உயர்த்திய மாஜி அமைச்சரும், அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமார், கட்சியினரின் கொதிப்பை வெளிப்படுத்தினார்.
இந்தச் சூழலில்தான் சைலண்ட்டாக கட்சிக்குள் சசிகலாவை கொண்டு வரும் ஓ.பி.எஸ்.சின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக ர.ர.க்கள் மத்தியில் பரவலாக அடிபட்ட தகவல் பற்றி அவர்களின் வட்டாரத்தி லேயே விசாரித்தபோது விரிவாகவே சொன்னார்கள்.
ஜெ. மறைவிற்குப் பின் னர் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்ட போது "தர்ம யுத்தம்' என்று கிளம்பிய ஓ.பி. எஸ்.சின் பக்கம் அவைத் தலைவர் மதுசூதனன், பி.எச்.பாண்டி யன், கே.பி. முனுசாமி. மனோஜ் பாண்டியன், சண்முகநாதன் எக்ஸ் எம்.எல்.ஏ. மனோகரன் உள்ளிட்ட 9 எம்.எல். ஏ.க்கள் உடனிருந்தனர். தர்ம யுத்தம் விவகாரமாகக் கிளம்பியபோது கட்சியின் நலன்பொருட்டு எடுத்த அவதாரம் என்றெண்ணியே கட்சியின் இந்த ஜாம்பவான்கள் ஓ.பி.எஸ். பக்கம் நின்றனர்.
பின்னர் ஓ.பி.எஸ். துணை முதல்வர் என்றானதும் யுத்தம் கைவிடப்பட்டது. உதவிய தன்னுடனிருந்தவர்களைக் கவனிக்காமல், தர்மம் பதவிக்குப் பின்பு ஒதுங்கிக்கொண்டதை அந்தப் பெருந்தலைகளே ரசிக்கவில்லை. இதுதான் யுத்தத்தின் பாலிஸி. தன்னோடிருக்கும் கட்சி யினரையாவது அவர் கவனித்தாரா?. அப்படிக் கவனித்திருந்தால் தலைவர்களை விடுத்து தொண் டர்களின் பலமாவது அவரிடமிருந்திருக்கும். அவர்களைக் கவனிக்காததின் விளைவு எந்த ஒரு மாவட்டத்திலும் அவருக்கென தொண்டர்கள் பலமில்லை. துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி இருப்பதால்தான் அவர் போகிற இடத்தில் பொறுப்பாளர்கள், கட்சியினர் கூடுகின்றனர். அவரைப் பொறுத்தளவு தன்னைச் சார்ந்த சொந்தபந்தங்கள் வளமானால் சரி என்ற திருப்தியில் இருப்பவர்.
அவரின் இந்த மைனஸ் பாயிண்ட்தான் எடப்பாடியின் பக்கம், கட்சியின் மூத்த நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. முக்கியப் புள்ளியான கே.பி.முனுசாமி, இரண்டு சைடிலும் ஒட்டிக் கொண்டிருந்த ஜெயக்குமார் செங்கோட்டையன், ஓ.பி.எஸ். பக்கமிருந்த கடம்பூர் ராஜு, ஸ்ட்ராங்க்காக நின்ற அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட கட்சியின் பெருந்தலைகளை ஆட்சியின்போதே பேசவேண்டிய வகையில் பேசி, தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார் எடப்பாடி. தற்போது கட்சியின் முக்கிய பொறுப்பு தவிர, அவர் வசம் எந்த பலமும் இல்லை. கட்சியில் தனித்து விடப்பட்ட நிலையிலிருக்கிறார் யுத்தம்.
ஒருவேளை கட்சி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் பதவி எடப்பாடி வசம் போகலாம். தனக்கு அந்த வாய்ப்பில்லை. சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவந்தால் சமூகரீதியாக வாக்கு பெரும்பான்மை கிடைக்கும். அவர் நம்மைக் கை காட்டலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்திருக் கிறார். அதனாலேயே சசிகலா விஷயத்தில் அவர் மட்டும் விமர்சிக்காமல் மௌனமாகவே இருந்திருக்கிறார். அதன் பிறகே, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்பு, கட்சித் தலைமையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டப்பட்ட கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகளின் கூட்டத்தில் சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானமாகவே பேசவிருந்தாராம், யுத்தம்.
இது எடப்பாடி மற்றும் நிர்வாகிகள், திரண்டு வந்திருந்த கட்சியினரிடையே கடும் சர்ச்சை களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அப்படி அவர் அந்த நோக்கத்தோடு பேசினால், மற்ற அனைவரும் வெளிநடப்பு செய்வோம், என்று வெளிப்படுத்திய கட்சியினரின் கடும் அதிருப்தி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உளவுத்துறை மூலம், உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்லப் பட்டதால், உளவுத்துறையால் உற்றுக் கவனிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முன்பே இதையறிந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளான மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட சிலர், ஓ.பி.எஸ்.சிடம் போய், அப்படி ஒரு தீர்மானத் திட்டமிருந்தால் கொண்டு வந்து பேச வேண்டாம். கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், கட்சியினர் வெளிநடப்பு செய்கிற நிலையிலிருக்கின்றனர்... பிரச்சினையாகும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னவர்கள், வேறு சில நடப்புகளையும் முன் வைத்தார்கள். அவரின் சசிகலா பற்றிய திட்டத்தைக் கைவிட வலியுறுத்திய பின்பே கட்சித் தலைமையில் நிர்வாகி களின் கூட்டம் கூடியதாகச் சொல்கிறவர்கள், அவரின் மனம் மாறியதையும் குறிப்பிடுகின்றனர்.
கடையநல்லூர் அ.தி.மு.க. வென்ற தொகுதி. உள்ளாட்சித் தேர்தலில் அதன் 12 வார்டுகளைக் கொண்ட யூனியனில் 10-ம் வார்டில் மட்டும் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயிக்க, மீதமுள்ள 11 வார்டுகளும் தி.மு.க.வின் பக்கமல்லவா போனது. அது மட்டுமா, அந்தத் தொகுதியின் 16 ஊராட்சிகளையும் ஒரு இடம் விடாமல் தி.மு.க.வே அள்ளியிருக்கிறதே. அங்கே மட்டுமல்ல... நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தின் உள்ளாட்சிப் பொறுப்புக்களில் தி.மு.க.தானே கோல் அடித்திருக்கிறது. சசிகலா ஆதரவுள்ள அ.ம.மு.க. வேட்பாளர்கள் கரையேறவில்லையே ஏன்? இவையனைத்தும் ஓ.பி.எஸ்.சு.க்கும் சொல்லப்பட்டிருக்கு என்று குரலை உயர்த்துகிறார்கள் ர.ர.க்கள்.
இந்த நடப்புகள் அனைத்தையும் அ.திமு.க. புரிந்துகொண்டதை அடுத்தே கட்சியின் தற்போதைய 50-ஆம் ஆண்டு பொன்விழாவில் சசிகலா பற்றிய விமர்சனங்கள் எழுந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.