ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 85 சதவிகித இடங்களில் வெற்றிபெற்று சாதனை செய்துள்ளது. 2021, அக்டோபர் 23-26 நக்கீரன் இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததுபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் சேர்மன் பதவிக்காக பெரிய அடிதடியே நடந்தது.
வெற்றி பெற்றதும் கட்டம்!
சேர்மன் பதவியை தனது மருமகளான காயத்ரி பிரபாகரனுக்கு பெற களமிறங்கினார் தி.மு.க. திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரான தேவராஜ் எம்.எல்.ஏ. மற்றொருபுறம் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் ஆதரவாளரான பாரி களமிறங்கினார். தி.மு.க., பா.ம.க., சுயேட்சை என 12 கவுன்சிலர்களை தன் கட்டுப்பாட் டில் வைத்துக் கொண்டு டூர் கிளம்பிவிட்டார் பாரி.
கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது பாரியிட முள்ள கவுன்சிலர்களை கடத்த தேவராஜ் மச்சானும் ஆலங்காயம் கிழக்கு ஒ.செ.வுமான அசோகன் தலைமையிலான டீம் களமிறங்க, பி.டி.ஓ அலுவலகம் முன்பு பெரிய அடிதடி யானது. போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியது. இதற்கிடையே கவுன்சிலர், கணவரைக் கடத்திவிட்டதாக புகார் தர, கவுன்சிலரான என் மனைவியை கடத்திவிட்டதாக, அவரது கணவர் புகார் தரும் கூத்துக்களை இரு தரப்பும் அரங்கேற் றியது. போலீஸ் குவிக்கப்பட்டது. மறைமுகத் தேர்தலில் பாரியின் மனைவி சங்கீதா 12 வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட தேவராஜ் மருமகள் தோல்வியைத் தழுவினார்.
தலைமையிடம் நடந்த சம்பவங்கள் குறித்த புகார் வந்ததையடுத்து, ஆலங்காயம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் ஞான வேலன், தலைவராக வெற்றிபெற்ற சங்கீதாவின் கணவரும் ஒன்றிய பொதுக்குழு உறுப்பினருமான பாரி ஆகியோர் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர்.
நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் தி.மு.க. வெண்மதி தரப்பினர் தங்களது ஆதரவு கவுன்சிலர்களை 30 பவுன்ஸர்கள் துணையோடு மிகமிக பாதுகாப்பாக அழைத்துவந்து ஓட்டுப் போடவைத்து வெற்றிபெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.
அமைச்சர் பிடிவாதம்!
மாவட்ட சேர்மனுக்கு பாபு என முடிவான நிலையில் கட்சிக்குள் போட்டியே இல்லாமல் வெற்றிபெற்று சேர்மனானார். வைஸ் சேர்மன் பதவியை மாவட்ட தகவல்தொழில்நுட்ப அமைப்பாளரான கே.வி.குப்பத்தை சேர்ந்த ஆனந்தி முருகானந்தம் எதிர்பார்த்தார். அ.தி.மு.க. செல்வாக்காக உள்ள கே.வி.குப்பத்தில் தி.மு.க.வை வளர்க்க வைஸ் சேர்மன் பதவியை அந்தப் பகுதிக்கு தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு வைஸ் சேர்மன் தரலாம் என அமைச்சர் எ.வ.வேலு பிடிவாதத்துடன், காங்கிரஸுக்கு ஒதுக்கவைத்து விட்டார். வைஸ் சேர்மனாக போட்டியின்றி கிருஷ்ணவேணி ஜலந்தர் தேர்வு செய்யப்பட்டார்.
குற்றால குதூகலம்!
17 கவுன்சிலர்களைக் கொண்ட சங்கரன்கோவில் யூனியனில் ஒ.செ. லாலா சங்கரபாண்டியன் களமிறங்க, அவரது எதிர் வேட்பாளர் கவுன்சிலர்களை விலை பேச, 14 கவுன்சிலர்கள் தி.மு.க. என்றாலும் 12 பேர்களை வளைத்த லாலா, அவர்களைக் குற்றாலத்தில் வைத்து சகல கவனிப்புகளையும் நடத்தினார். தேர்தல் செலவு கவுன்சிலர் வளைப்பு கவனிப்பு என ஒன்றரை ’சி’ வரை காலிசெய்த மா.செ.வின் ஆதரவு வேட்பாளரைப் பின்தள்ளி சேர்மனாகி யிருக்கிறார்.
ஒரு ஓட்டு 10 எல்!
ஆலங்குளம் யூனியனில் மெஜா ரிட்டியாக தி.மு.க.வினரே வென்றாலும், சேர்மன் பதவிக்கு ஆலடி அருணாவின் மகனான எழில்வாணன் களமிறங்க, எதிர்த்தரப்பில் அ.தி.மு.க.வின் ஒ.செ.வான பாண்டியராஜன், தன் தம்பி மனைவியை (அ.தி.மு.க.விலிருந்து விலகி அண்மையில்தான் தி.மு.க.வில் சேர்ந்தவர்.) சேர்மனாக்கும் பொருட்டு தி.மு.க.வின் கவுன்சிலர் ஒருவருக்கு 10 ’எல்’ ரேட்டில் கடத்திச்சென்று யூனியன் சேர்மனாகி விட்டார்.
தி.மு.க.வுக்கு அல்வா தந்த ம.தி.மு.க!
குருவிகுளம் யூனியனில் கூட் டணியான தி.மு.க.வின் ம.தி.மு.க., காங்கிரஸ் உட்பட 15 கவுன்சிலர்கள் வெற்றி. சேர்மன் பதவி ம.தி.மு.க., துணைத் தலைவர் பதவி தி.மு.க. என்பது ஒப்பந்தம். ம.தி.மு.க.வின் சேர்மன் வேட்பாளர் விஜயலட்சுமி, 15 கவுன்சிலர்களையும் அள்ளிக் கொண்டுபோய் குற்றாலம் ரிசார்ட்டில் வைத்துக் கவனித்து சேர்மனாக, உள்ளடி வேலைகளால் தி.மு.க.விற்கு அல்வா தரப்பட்டு ம.தி.மு.க.வின் முருகேஸ்வரி துணைத் தலைவராக்கப்பட்டார். இதற்கு தி.மு.க.வின் மா.செ.வே உடந்தையாம்.
ஜெயித்தும் ராஜினாமா!
ஆறு வார்டுகளைக் கொண்ட திருச்செந்தூர் பக்கமுள்ள பிச்சிவிளை ஊராட்சியின் தலைவர் பதவி, பட்டியலினத்தைச் சார்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டு, அந்தப் பிரிவைச் சார்ந்தவர் ஊராட்சித் தலைவராகியிருக்கிறார். அவர் தலைவரானதை ஏற்றுக்கொள்ளாத ஊராட்சியின் ஆறு கவுன்சிலர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த ஊராட்சிக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. ஊராட்சியில் மெஜாரிட்டியான ஜனத் தொகையைக் கொண்ட எங்களுக்கு ஒதுக்காமல் மைனாரிட்டியான பட்டியலினப் பிரிவினருக்கு ஒதுக்குவதா? தலைவர் பதவியை "பொது' என்றாக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தும் மாற்றப்படாத நிலையில், நடந்த இடைத் தேர்தலில் 4 பேர் தேர்தலில் வெற்றி பெற் றுள்ளனர். அதன்பிறகும் தற்போது தேர்ந்தடுக்கப் பட்ட உறுப்பினர்கள் ஊராட்சித் தலைவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில், 2 பெண் உறுப் பினர்கள் உட்பட 5 உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனராம்.
து.ராஜா
மோதலில் இந்நாள் - முன்னாள் சபாநாயகர்கள்!
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில், தி.மு.க.வின் நெல்லை கிழக்கு மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதிக்கான ஒ.செ.வான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ்தான் வேட்பாளர் என சபாநாயகர் அப்பாவுவும், எம்.பி. ஞானதிரவியமும் அதற்கான வேலைகளைப் பார்த்தனர். ஆனால், நெல்லை கிழக்கு மாவட்டத்தின் மா.செ.வான ஆவுடையப்பனோ, நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரும், பாளை எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப்பை துணைக்குச் சேர்த்துக் கொண்டு, 1-வது வார்டு உறுப்பினரான செல்வலட்சுமி அமிதாப்பை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வேட்பாள ராக நிறுத்தி, கவுன்சிலர்களைத் திரட்ட ஆரம்பித்தனர்.
"மொத்தமுள்ள 12 கவுன்சிலர்களில், இரு தரப்பும் சரிவிகிதமான கவுன்சிலர்களை இழுத்து வைத்தனர். இதில் 2-வது வார்டு கவுன்சிலரான மகேஷ்குமாரும், 3-வது வார்டு கவுன்சிலரான கனகராஜூம் கடத்தப்பட்டதாக காவல்துறை வரை புகார் சென்றது. அதற்கு விடை தெரியாமலேயே தலைவருக்கான மறைமுகத் தேர்தல் வந்தது.
இரு தரப்பையும் போன் மூலமாகத் தொடர்புகொண்ட கட்சித்தலைமை, மானா வாரியாக கேள்வி கேட்டு, தலையில் குட்டி வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைவராகவும், துணைத் தலைவராக செல்வலட்சுமி அமிதாப்பும் இருக்க வேண்டுமென ஆர்டர் போட்டது. அதன்படியே சமாதானமாகி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-நாகேந்திரன்
அமைச்சர்கள் முன்னிலையில் மோதல்!
மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவிக்காக மரக்காணம் ஒன்றியச் செயலாளர்கள், மேற்கு பழனி, கிழக்கு தயாளன், மத்திய பகுதி கண்ணன் ஆகிய மூன்று தி.மு.க. ஒன்றியச் செயலாளர்களும் மோதினார்கள்.
மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் தலையிட்டு, ஒ.செ. தயாளனை ஒன்றியச் சேர்மனாக முன்னிலைப்படுத்தினார். ஆனால் மத்திய பகுதி கண்ணன், தனக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறதென்று கோதாவில் இறங்கினார். சேர்மன் பதவியேற்பதற்காகத் தனது ஆதரவாளர்களுடன் ஒன்றிய அலுவலகத்தினுள் தயாளன் தயாராக இருந்தார். அலுவலகத்துக்கு வெளியே கட்சியினருடன் அமைச்சர் மஸ்தான் அமர்ந்திருந்தார். கண்ணன் ஆதரவாளர்கள், அமைச்சரைச் சந்திக்காமல் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். தயாளன் ஆதரவாளர்கள் தடுப்புகளைப் போட்டு அவர்களை உள்ளே விட மறுத்தனர். கண்ணன் தன் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்
சேர்மனைத் தேர்வு செய் வதற்கான புதிய குழு உறுப்பினர் கள் ஆஜராகாததால், தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் அலுவலர் சரவணன் அறிவித்தார். கண்ணன், தயாளன் ஆகிய இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால், 500க்கும் மேற்பட்ட போலீசார் மரக் காணத்தில் குவிக்கப்பட்டனர்.
பாண்டிச்சேரியில் "கவனிப்பு!
வானூர் ஒன்றியத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 27. இதில், தி.மு.க. 10, அ.தி.மு.க. 11, பா.ம.க. 2, வி.சி.க. 2, சுயேச்சை 2 பேர் வெற்றிபெற்றனர். இதில் 14 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்தான் சேர்மனாக முடியும் என்ற நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த உஷா, அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜமுனா ஆகியோர் களத்தில் இறங்கினர். இதில் உஷா தரப்பினர், பா.ம.க., வி.சி.க., சுயேச்சைகள் உட்பட 16 உறுப்பினர்களைச் சரிக்கட்டி, பாண்டிச் சேரியிலுள்ள ஓட்டலில் பாதுகாப்பாகத் தங்க வைத்து, அதன்பின்னர் தேர்தலின்போது அவர்களை அழைத்துவந்தனர். பரபரப்பான போட்டியில், உஷா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அ.தி.மு.க.வின் ஜமுனாவுக்கு 10 பேர் மட்டுமே வாக்களித்தனர். அவரது கட்சியைச் சேர்ந்த 11 பேரில் யாரோ ஒருவர் தி.மு.க.வுக்கு வாக்களித்த கூத்தும் நடந்திருப்பதாக அ.தி.மு.க. தொண்டர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
-எஸ்.பி.எஸ்.
பா.ஜ.க.வுக்கு பதவி!
திண்டுக்கல் ஒன்றியத்திலுள்ள செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. துணைத்தலைவராக இருந்த அன்னகாமாட்சி இறந்துவிட்டதால் அந்த வார்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. ஆதரவாளரான கணேசன் வெற்றிபெற்றார். அதையடுத்து துணைத்தலைவருக்கான தேர்தலை, தேர்தல் அதிகாரி மலரவன் அறிவித்தார். ஊராட்சியில் அ.தி.மு.க. ஆதரவு உறுப்பினர்கள் 8, தி.மு.க. ஆதரவு உறுப்பினர்கள் 6 பேரும் பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் என 15 பேர் இருந்தனர்.
தற்போது வெற்றிபெற்ற கணேசன் துணைத்தலைவராக போட்டியிட உறுப் பினர்களிடம் ஆதரவு கோரியிருந்தார். அதுபோல் பா.ஜ.க. உறுப்பினரான அர்ஜுனன், அ.தி.மு.க. ஆதரவுடன் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இரு தரப்பு உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்ததில்... உறுப்பினர்கள் சிலர் கீழே விழுந்தனர். எஸ்.பி. சீனிவாசன் டீமுடன் ஸ்பாட்டுக்கு வந்தார்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், தேர்தலில் பங்கேற்கவில்லை என கூறி திடீரென தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தில் துணைத்தலைவருக் கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் எட்டுபேரும் பி.ஜே.பி. உறுப்பினரான அர்ஜுனனுக்கு ஆதரவு கொடுத்ததின் பேரில் துணைத்தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றுகளையும் தேர்தல் அதிகாரி மலரவன் வழங்கினார்.
-சக்தி
கஞ்சா கைதி வெற்றி!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி, 9-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்.
ஊராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்வுபெற்றிருந்த விஜயலட்சுமியை, கடந்த 20-ம் தேதி, கஞ்சா வழக்கில் கைதுசெய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறைச்சாலையில் அடைத்தனர். இந்நிலையில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவருக்கான தேர்தலில், சிறையிலிருந்தபடியே தனது வக்கீல் மூலம் வேட்புமனுத் தாக்கல் செய்தார் விஜயலட்சுமி. இதிலும், இவரை எதிர்த்து வேறெந்த கட்சியினரும் போட்டியிடாததால், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர், சிறையிலிருந்தபடியே ஊராட்சிமன்றத் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வை ஜெயிக்க வைத்த தி.மு.க. ஃபைட்!
தி.மு.க. ரெண்டுபட்டதால் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் வெற்றிபெற்ற சம்பவம், மதுராந் தகத்தில் நடந்தது. 22 ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கொண்ட மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், தி.மு.க. 10, அ.தி.மு.க. 7, பா.ஜ.க. 1, வி.சி. 1, சுயேட்சைகள் 3 இடங்களைப் பெற்றிருந்தனர். ஒன்றியக்குழுத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், தி.மு.க.வில், ஒப்பிலால், பத்மப்ரியா ஆகியோருக்கிடையே போட்டி எழுந்ததால், இருவருமே போட்டியிட்டனர். அ.தி.மு.க. சார்பாக கீதா போட்டியிட்டார். இந்நிலையில், தி.மு.க. வாக்குகள், பத்மப்ரியாவுக்கு 7, ஒப்பிலாலுக்கு 5 எனப் பிரிய, அ.தி.மு.க.வின் கீதா 10 வாக்குகளைப் பெற்றார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், குறைந்த வாக்குகளை பெற்ற ஒப்பிலால் விலகிக் கொண்டார். எனவே, 2-வது முறையாக கீதா, பத்மப்ரியாவுக்கு இடையே தேர்தல் நடைபெற்றது. அதில், தி.மு.க.வின் ஒப்பிலால் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. பக்கம் சாய... 15 வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க.வின் கீதா, ஒன்றியக்குழுத் தலைவராக வெற்றிபெற்று தி.மு.க. வினருக்கு அதிர்ச்சியளித்தார்.
-அரவிந்த்