உங்கள் செல்போன் எண், தொலைபேசி எண்ணுக்குக்கூட விரைவில் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது ட்ராய். அதற்கான பரிந்துரையையும் அரசுக்குச் செய்துள்ளது.
உண்மையில் இந்தக் கட்டணத்தை தொலைபேசி மற்றும் நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்குத்தான் விதிக்கும்படிதான் ட்ராய் யோசனை கூறியுள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி. வரியை, சாப்பிடுபவர்கள் தலையில் ஹோட்டல்காரர்கள் கட்டிவிடுவதுபோல, செல்போன் எண்ணுக்கான கட்டணத்தை நைசாக பயனாளர்கள் தலைக்கு மாற்றிவிட்டு நெட்வொர்க் நிறுவனங்கள் தப்பித்துவிடும்.
அதாவது, நீங்கள் வாங்கும் செல்போனுக்கு விலை தரவேண்டும். சிம் கார்டுக்கு குறைந்தபட்சம் நூறோ, ஐம்பதோ தரவேண்டும். நீங்கள் தேர்வுசெய்யும் திட்டத்துக்கேற்ப நெட்வொர்க் நிறுவனத்துக்கு மாதந்திரக் கட்டணம் செலுத்தவேண்டும். இதுதான் இப்போதைய நடைமுறை. இனி, நெட்வொர்க் நிறுவனம் உங்களுக்கு ஒரு எண் தருகிறதல்லவா, அதற்கும் நாம் விலை தந்தாகவேண்டுமாம்.
ட்ராயின் கருத்துப்படி நீங்கள் வைத்திருப்பது வெறுமனே செல்போன், தொலைபேசி எண் மட்டுமல்ல,…அது மதிப்புமிக்க பொதுவளமும்கூட. தகவல் தொழில்நுட்பங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் காரணமாக, தற்போதுள்ள எண்கள் ஒதுக்கப்படும் முறையில் விரிவான மறுமதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டிய அத்தியாவசியம் ஏற்பட்டுள்ளது என்கிறது ட்ராய்.
இந்தியாவில் தொலைபேசி, அலைபேசி பயன்பாட்டாளர்கள் மட்டும் 119 கோடி பேர் உள்ளனர். தொலைபேசி, செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு கட்டணம் வசூலிப்பது, இத்துறையில் வழங்கப்படும் எண்களை முறையாக ஒழுங்குபடுத்தும் நோக்கிலானதேயன்றி, சம்பாதிக்கும் நோக்கில் அல்ல என சமாளிக்கிறது ட்ராய். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், குவைத், ஸ்விட்சர்லாந்து, டென்மார்க் நாடுகளில் தொலைபேசி, மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருப்பதைச் சொல்லி நியாயப்படுத்துகிறது.
இந்தக் கட்டணத்தை இரு முறையில் வசூலிக்க ட்ராய் யோசித்துவருகிறது. ஒரு எண்ணுக்கு ஆண்டுக் கட்டணமாகவோ, அல்லது மொத்தமாக ஒரே தடவையில் கட்டணம் வசூலிப்பது. இன்னொரு முறையில் சிறப்பான பேன்சி, சென்டிமெண்டல் எண்களை, பிரீமியம் முறையில் ஏலத்தில்விட்டு கட்டணம் வசூலித்தல்.
சரி, நீங்கள் இரண்டு எண்களைப் பயன்படுத்துகிறீர்கள். அதில் ஒன்றில் மட்டும்தான் அடிக்கடி பேசுகிறீர்கள். மற்றதை ஒரு அடையாளத்துக்காக மட்டும் பயன்படுத்துகிறீர்கள். அவர்களையும் ட்ராய் விட்டுவிடப் போவதில்லையாம். இப்படி பயன்படுத்தாத உங்கள் எண்ணை செல்போன் நெட்வொர்க் நிறுவனம் நினைத்தால் துண்டித்துவிடலாம். ஆனால், பயன்படுத்தாதவர்களின் இணைப்பையெல்லாம் துண்டித்தால், அந்த நெட்வொர்க்கின் மொத்த பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் அதைச் செய்வதில்லை. இத்தகைய எண்களுக்கு அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கிறது ட்ராய்.
ட்ராய் தரவுகளின்படி, இந்தியா முழுவதுமுள்ள 219.14 மில்லியன் செல்போன் இணைப்புகள் (கிட்டத்தட்ட 19% இணைப்புகள்) இப்படி சரிவர பயன்படுத்தாமல் சேவைநிறுத்தம் செய்யவேண்டிய நிலையிலுள்ள இணைப்புகள் என்கிறது.
இந்தியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு வரும்போது, நாம் அழைத்தாலும் காசு. நமக்கு அழைப்பு வந்தாலும் காசு என்ற நிலையில்தான் இருந்தது. அதன்பின்புதான் அலைக்கற்றை ஏல முறை நடைமுறையில் வந்து அழைப்புகளின் விலை குறையத் தொடங்கின.
பாமரர்களும் செல்போன் பயன்படுத்தத் தொடங்கும் வரை செல்போன் நெட்வொர்க்குகள் பெரிய தொகை வசூலிக்கவில்லை. மிகக் குறைந்த தொகையான 39 ரூபாய்க்கே மாதம் முழுவதும் நமக்கு அழைப்புகள் வரும். அந்தக் கட்டணத்தில் பயன்பாட்டுத் தொகை எவ்வளவோ அதற்குப் பேசிக்கொள்ளலாம். முன்பு 3ஜி நெட்வொர்க் இருந்ததால், குறைந்தபட்ச டாப் அப் தொகை, கிராமத்தவர்கள், அடித்தட்டு மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது.
ஆனால் மெல்ல மெல்ல இந்தக் கட்டண முறையில் மாற்றம் வரத் தொடங்கியது. 39 ரூபாய் 49 ரூபாயாகியது. பின் 79, 99, 159 என சிறகு கட்டி பறக்கத் தொடங்கியது மாதாந்திரக் கட்டணம். தற்போது 28 நாள் பயன்பாட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.179 வரை வசூலிக்கிறார்கள். இதில் குறுஞ்செய்திகள், நாளொன்றுக்கு 1ஜி.பி. 4ஜி நெட்வொர்க் பயன்பாடு, அளவற்ற குரல் அழைப்புகள் ஆகியவை அடங்கும்.
எல்லாம் சரிதான், தங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு பேச மட்டும் பயன்படுத்தும் அடித்தட்டு மக்களும் இந்தத் தொகையைத்தான் கட்டியாகவேண்டும். ஸ்மார்ட் போனல்லாத, பழைய கையடக்க செல்போன் பயன்படுத்துபவர்களுக்கும் இதே கட்டணம்தான்.
இந்தியாவில் தேநீரை அறிமுகப்படுத்தும்போது, கோவில் திருவிழா நடக்கும் இடங்களில் ஒரு பாத்திரம் நிறைய தேநீரைக் கொண்டுவந்து கேட்பவர்களுக்கெல்லாம் இலவசமாகக் கொடுத்து சந்தையைப் பிடித்தார்கள். இன்றைக்கு இந்தியர்கள் ஆண்டுக்கு 120 கோடி கிலோ தேயிலையைப் பயன்படுத்துகிறார்கள்.
அதுபோல செல்போனை பழக்கிவிட்டு, இப்போது நெட்வொர்க்குக்கு ஒரு கட்டணம், காலர் டியூனுக்கு ஒரு கட்டணம் என நெட்வொர்க் நிறுவனங்கள் சுரண்ட, செல்போன் எண்ணுக்கு ஒரு கட்டணம், பேன்சி நம்பருக்கு ஒரு கட்டணம் என்று மக்களின் பொத்தல் சட்டைப் பைகளுக்குள் கைவிட்டு பைசா மிச்சமில்லாமல் சுரண்டித்தள்ளத் திட்டமிடுகிறது அரசு.
ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 3-வது முறையாக ஆட்சியமைக்க வாக்களித்த மக்களுக்கு அளிக்கப்போகும் வெற்றிப் பரிசு இதுதானோ என்னவோ!