சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும், அவரது விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வான ராஜேந்திர பாலாஜிக்கும் கட்சியில் ஏழரைப் பொருத்தம். அமைச்சரின் அழுத்தம் காரணமாக ராஜவர்மனுக்கு கட்சியில் இம்முறை வாய்ப்புக் கிடைக்காமல் போகவே... கணநேர முடிவில் அ.ம.மு.க. பக்கம் தாவியவர் டி.டி.வி.யைச் சந்திக்க அடுத்த 2 மணி நேரத்தில் அவர் அ.ம.மு.க.வின் சாத்தூர் தொகுதி வேட்பாளராகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறார்.
"நான் வேட்பாளராகிவிட்டேன் பார் என்று அ.தி.மு.க.விற்கும் அமைச்சருக்கும் விடப்பட்ட சவாலைப் போன்றதுதான் இது' என்று இலைக்கட்சியின் நடுநிலைப் புள்ளிகளே வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூரின், விவசாயம் பெட்ரோல் பங்க்குகள், சென்னையில் பல மேன்சன்களின் அதிபர் என பன்முகத் தொழிலைக் கொண்டவர் அ.தி.மு.க.வின் சீனியர் புள்ளி யானவர் வடமலைப் பாண்டியன். “ஜெ.வின் அறிமுகம் கொண்டவர், அவரால் ஏரியாவின் பகுதி செ. மற்றும் திருச்செந்தூரின் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் போன்ற பொறுப்புகளைப் பெற்றவர் வடமலைப் பாண்டியன். தேர்தல்தோறும் சீட்டுக்காக விருப்ப மனுக் கொடுப்பதில் சளைப்பில்லாதவர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மா.செ.சண்முகநாதனால் கட்சியில் சேர்க்கப்பட்ட வேகத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலர் பதவியும் தரப்பட்டவர் ராதாகிருஷ்ணன். அடுத்த அதிரடியாக மா.செ.வின் சிபாரிசின்பேரில் திருச்செந்தூர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் அ.ம.மு.க.வின் டி.டி.வியைச் சந்தித்திருக்கிறார் வடமலைப் பாண்டியன். அடுத்த நாள் திருச்செந்தூர் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளர் வடமலைப் பாண்டியன் என்று வெளியான அறிவிப்பு அ.தி.மு.க. தலைமையைக் கூட அதிரவைத்த விஷயமாகிவிட்டது. இந்தக் கட்சித்தாவல் இன்ஸ்டன்ட் கலாச்சாரம் தி.மு.க.வையும் விட்டுவைக்கவில்லை. கடந்த வருடம் அ.தி.மு.க.வி லிருந்து தி.மு.க.வின் பக்கம் வந்தவர் தென்காசி மாவட்டத்தின் சங்கரன் கோவிலின் அய்யாத்துரைப் பாண்டியன். வந்த வேகத்தில் கட்சிப்பணி களில் வேகமாகச் செயல்பட்ட அவருக்கு அறிவாலயம் மாநில வர்த்தக அணித்தலைவர் பொறுப்பைத் தந்து கௌரவித்தது.
சூட்டோடு சூடாக எம்.எல்.ஏ.வாகிவிட வேண்டும் என்ற ஒரே திட்டத்தில் மேல் மட்டங்களில் காய்களை நகர்த்திய அய்யாத்துரைப் பாண்டியன், கொரோனா இடர்பாடு நேரத் தில் தனது நோக்கமான கடையநல்லூர், தென்காசி தொகுதி களில் ஏதாவது ஒன்றைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அத்தொகுதிகளில் பரவலாக மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அங்கும் அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் கடையநல்லூர் வழக்கமாக சிட்டிங் எம்.எல்.ஏ. கூட்டணியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும், தென்காசியைக் காங்கிரசுக்கும் ஒதுக்கிவிட்டது தி.மு.க.
சீட் கிடைக்காத அய்யாத்துரைப் பாண்டியன் அ.ம.மு.க.வின் டி..டி.வியைச் சந்திக்க அடுத்த கணம் கடையநல்லூரின் அ.ம.மு.க. வேட்பாளராகிவிட்டார். விரக்தியில் அ.ம.மு.க.விற்கு மாறி திருச்செந்தூர் வேட்பாளரான வடமலைப் பாண்டியனைத் தொடர்பு கொண்டதில், அவர்,
""நான் 2000-லிருந்தே அ.தி.மு.க.வின் உறுப்பினர். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளேன். அப்போதே கட்சிப் பதவிக்காக மா.செ. சண்முகநாதன் என்னிடம் பேரம் பேசியவர். ஆனா அம்மா எனக்குத் தொகுதிப் பொறுப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளைக் கொடுத்தவர். கட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களே ஆனவருக்கு வேட்பாளர் வாய்ப்பு மா.செ. சிபாரிசுப்படி தரப்பட்டிருக்கு'' என்ற வேதனையைக் கொட்டினார்.
நாம் மா.செ. சண்முகநாதனின் தரப்பை அறியும்பொருட்டு பலமுறை அவரது கைபேசி எண்ணில் தொடர்புகொண்டதில் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
தென்காசி மாவட்ட தி.மு.க.வின் தெற்கு மா.செ.வான சிவபத்மநாபன் சொல்வது, ""அய்யாத்துரைப் பாண்டியன் தொழிலதிபர். ஒரு கட்சிக்கு வந்தால் அதன் பற்றுதல் வேண்டும். ஒருசில நேரங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படலாம். கிடைக்கவும் கூடும். அதற்காக கட்சி மாறுவது நல்ல பாலிசியல்ல. மக்களிடமும் அது எடுபடாது, நானும் விருப்ப மனு கொடுத்தேன், இரண்டுமுறையும் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் வாய்ப்பு கிடைக்க வில்லை. அதற்காக கோபத்தில் கட்சி மாறிவிட்டேனா'' என்கிறார் பதிலடியாய்.