ரஷ்ய -உக்ரைன் போர் முடிவுக்கு வராவிட்டாலும், இஸ்ரேல்- பாலஸ்தீனியப் போர் முடிவுக்குவருவது உலகை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்திருக்கிறது.
2023, அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸின் திடீர்த் தாக்குதல் இஸ்ரேலை நிலைகுலைய வைத்தது. 1,200 பேர் இஸ்ரேல் தரப்பில் இழப்பு நேர்ந்தது. 250-க்கும் அதிகமானவர்கள் பணயக் கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர். இஸ்ரேலின் மூர்க்கமான அதிபராக அறியப்படும் நெதன்யாகு, ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழிக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகள், பெண்கள், சாதாரண மக்கள் என்ற கவலையின்றி தெருக்கள், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் வரை ஏவுகணைகளை வீசித் தாக்கினார்.
இதில் காஸா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 46,700 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும் பகுதியினர் பெண்களும் குழந்தைகளும்தான். தவிரவும், ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்தவர்கள், செய்தியாளர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டது அதன் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால், பின்னணியில் அமெரிக்கா இருக்கும் தைரியத்தில் இஸ்ரேல், போர் விதிகள் குறித்த கவலையின்றித் தாக்கியது. இந்த நிலையில் 15 மாத பேரழிவுக்குப் பின் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, போர்நிறுத்தத்தின் புகழில் பைடன் குளிர்காய்ந்தாலும், டரம்ப் ஆதரவுத் தூதரான விட் காஃப் இஸ்ரேலைச் சந்தித்து போர் நிறுத்தத்துக்கு இணங்கியாகவேண்டும் என வலியுறுத்தியதாக மேற்கத்திய ஊடகங்கள் அழுத்தம்திருத்தமாகச் சொல்கின்றன. அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லரும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குழுவினரின் பங்கு முக்கியமானதாக இருந்தது எனப் பாராட்டியுள்ளார்.
இந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் ஆயிரம் நிபந்தனைகள், உப நிபந்தனைகள் இருந்தாலும் பிரதான நிபந்தனை இதுதான். தாக்குதலின் ஆரம்பகட்டத்தில் பிடித்துப்போன 90 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். பதிலுக்கு பல ஆண்டுகளாக இஸ்ரேல் பிடித்து சிறையில் அடைத்து வைத்திருக்கும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கவேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஹமாஸ் பிடித்துச் சென்ற 94 பணயக் கைதிகளில் 34 பேர் இறந்திருக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது.
என்றாலும் இந்தப் போர் நிறுத்தம் 3 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் ஹமாஸ் பிடித்துச்சென்ற 33 பணயக் கைதிகளை விடுவிக்கவேண்டும். அதற்கு ஈடான பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். ஹமாஸுக்கு, இதற்கான அழுத்தத்தை கத்தார் பிரதமர் கொடுப்பார். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலிருந்து இஸ்ரேலை நோக்கித் திரும்பும். உணவு, உடை, மருந்துகளைக் கொண்டுவரும் லாரிகள் பாலஸ்தீனர் பகுதிக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்கும்.
இரண்டாம் கட்டப் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தை ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. இதில் மிச்சமுள்ள பணயக்கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்படவேண்டும். பணயக்கைதிகள் யாராவது இறந்திருந்தால் அவரது சடலத்தை ஒப்படைக்கவேண்டும். அதேசமயம் இஸ்ரேல் படைகள் முழுக்க காஸா பகுதியிலிருந்து விலகிக் கொள்ளும்.
மூன்றாம் கட்டப் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தையும் முடிவானதும் ஒப்பந்தம் வெளியாகும். ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படும்வரை வேறெந்தச் சிக்கலும் இருக்காது. அதேசமயம் இரண்டில் ஒரு தரப்பு ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் மீண்டும் மோதலோ, போரோ தொடங்கலாம்.
மிகுந்த சேதாரத்தில் இருக்கும் பாலஸ்தீனர்களின் ஹமாஸ் தரப்பு, தற்போதைய நிலையில் போர் நிறுத்தத்தை வரவேற்கவே செய்யும். அது மீண்டும் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் வரையில் போரை விரும்பாது. அதேசமயம், தற்போதைய வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, ஹமாஸை முற்றிலும் அழித்தொழிப்பதையே நெதன்யாகு விரும்புகிறார். எதிரியையும், நெருப்பையும் அரைகுறையாய் விட்டுவைப்பது என்றைக்குமே ஆபத்து என்பதே அவரது தரப்பு.
ஆனால், அமெரிக்கத் தரப்பிலிருந்து போர்நிறுத்தத்துக்கு நெருக்குதல் இருக்கும் நிலையில், அதை மறுப்பது என்பது இஸ்ரேலை இக்கட்டுக்கு இட்டுச் செல்லும். மேலும், தற்போது நிலவும் சர்வதேச ஆதரவுக்கும் நெருக்கடி வந்துவிடும் என்பதால் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைக்கு சம்மதித்திருக்கிறார்.
"இதுவே போரின் கடைசிப் பக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்'' என்கிறார் கத்தார் அதிபர் ஷேக் முகமது. இந்தப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நேரடியாக இல்லாவிட்டாலும், ஈரானின் பங்கும் மறைமுகமாக இருக்கும்.
ஹமாஸின் மூர்க்கமும், இஸ்ரேலின் ஈகோவும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தால் மட்டும் முடிவுக்கு வந்துவிடும் என நம்ப முடியாதுதான். ஆனால் மண்ணில் சிந்தியிருக் கும் பாலஸ்தீனிய குழந்தைகள், பெண்களின் ரத்தம் உலர்வதற்கும், அவர்கள் புண்கள் ஆறுவதற்குமாவது அவகாசம் அளிக்கவேண்டும். அதற்காவது இந்த போர் நிறுத்தம் மிகவும் அவசியம்!