காலத்திற்கு ஏற்றவாறு நீங்களும் உங்கள் செல்போன் செயலிகளும் மட்டும்தான் அப்டேட் ஆவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். குற்றங்களும் அதைச் செய்பவர்களும் அப்டேட் ஆகிறார்கள். புதிதாக கார் வாங்கும் நபர்களைக் குறிவைத்து வெளிநாட்டு டூர் என ஆசையைத் தூண்டி பல கோடிகளில் கொள்ளையடித்துள்ளது ஒரு கும்பல்.
இந்தக் கும்பலிடம் தமிழகம், பெங்களூர் தொடங்கி இந்தியா முழுவதும் பணத்தைப் பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகம். சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, ஈரோடு, சேலம், ஓசூர் என ஒட்டுமொத்தமாக 200-க்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளார்கள். காவல்துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகளின் மகன்களும் இதில் அடக்கம்.
புதிதாக கார் வாங்கும் நபர்களாகப் பார்த்து அவர்களின் தொடர்பு எண்களை எடுத்துவிடுகிறார்கள். தனி டீம் ஒன்றை செட் செய்து அதன் மூலமாக பணியைத் தொடங்குகிறார்கள். அப்படி எடுக்கப் பட்ட எண்களைத் தொடர்புகொண்டு, “"நீங்கள் புதுக் கார் ஒன்று வாங்கியுள்ளீர்கள் அல்லவா, அதற்கு உங்களுக்கு ஒரு ரிசார்ட் பேக்கேஜ் கிடைத்துள்ளது' என ஆரம்பிப்பார்கள். மிக முக்கியமான ஸ்டார் ஓட்டல்களான தாஜ், ஹயாத், ரேடிசன் புளு என வரவழைத்து நல்ல உணவு வழங்கி, நைசாக இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கான டூர் மற்றும் ரிசார்ட் பேக்கேஜ் மிகக்குறைந்த செலவில், நிறைய ஆஃபர் உள்ளது என வலையைப் பின்னுவார்கள்.
செலவு அதிகம்பிடிக்கும் பிரபலமான வெளிநாட்டு சுற்றுலாத் தலங்களுக்கு மிகக் குறைந்த செலவில் அழைத்துச் செல்வதாக விவரிக்கத் தொடங்கி, வெளிநாடுகளுக்கான ஆல்பத்தையும், வீடியோக்களையும் காட்டி, 10 நாள் பேக்கேஜ், 1 வருட பேக்கேஜ், 5 வருட பேக்கேஜ் என விவரித்து, அவரவர் பேக்கேஜுக்குத் தக்க பணம் வசூல் செய்துள்ளனர். பணம் உள்ளவர்களிடம் உடனே வசூல் செய்வதும், பணமில்லாத வெளிநாடு டூர் போகும் ஆசை இருப்பவர்களுக்கு இ.எம்.ஐ. மூல மாகவும் அல்லது கிரெடிட் கார்ட் மூலமாகவும் கொடுத்தால் போதும். நீங்கள் முழுப் பணத்தைக் கட்டிய பிறகு இந்த சலுகை உங்களுக்குக் கிட்டும் எனவும் அவர்களிடம் பணத்தை வசூல்செய்துள்ளனர்.
இப்படி பணம் கட்டியவர்கள் ஆசையோடு தங்களுக்குப் பிடித்த இடத்தைத் தேர்வுசெய்து டூருக்கு பதிவுசெய்துள்ளனர். தங்களின் குடும்பத்தோடு டூர் போகலாம் என பதிவுசெய்தவர்களை, திட்டத்தின் நிறைவுப் பகுதியில் அவர்களது வலைத்தளத்தில் டூருக்காக பதிவுசெய்தவர்களாகக் காட்டவில்லை. திடுக்கிட்டுப் போன அவர்கள் உடனடியாக தாங்கள் பணம் கட்டிய நிறுவனமான வலோரா கர்மா நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த நிறுவனம், நீங்கள் ஆன்லைனில் வலோரா டாட்காம் ஈமெயிலில் பதிவு செய்ய வேண்டும் என சமாளித்துள்ளது. அப்படி செய்த போதும் பதிவு ஆகவில்லை. அதன் பிறகுதான் இந்த நிறுவனம் போலியானது என்பதை மெல்ல மெல்ல அறிந்துகொண்டுள்ளனர். இப்படி ஏமாந்து போன நபர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சென்னை கமிஷனர் அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இவர்களின் தலைமை அலுவலகம் குஜராத்தில் உள்ளது. மாநிலம் மாநிலமாக சென்று முதலில் செலவுசெய்து, இலவச உணவளித்து ஆசையைத் தூண்டி கடைசியில் அம்போவென விட்டுவிட்டு மற்ற மாநிலம் செல்வார்களாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பெயரில் திட்டத்துக்கு பெயர்வைத்துள்ளார்கள்.
சென்னையில் வலோரா என்ற பெயரில் கீழ்ப்பாக்கத்தில் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் மூன்று உரிமையாளர்களான, அல்பேஸ்ராவ், ஹரிதாய் சோலங்கி, அனிருத்சிங் மூவரும் தமிழகம் முழுவதும் தங்களுக்கான கட்டமைப்பை உருவாக்கி பிரபு மகாராஜன், அண்ணாதுரை, ரெபினேசர் பால் என மூன்று பேரை மேனேஜர் களாக நியமித்து காரியத்தை மேற் கொண்டுள்ளனர். தற்போது கோவாவில் “டிட்டோ” என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி புதிய வலையை விரித்துக் காத்திருக்கிறார்களாம்.
இது ஒருபுறமிருக்க விஷயம் காவல்துறை புகார் வரை போனநிலையிலும், இதை அறியாதவர்களிடம் தொடர்புகொண்டு மீதமுள்ள இ.எம்.ஐ பணத்தைச் செலுத்தச் சொல்லி பெற்றுவருகிறார்கள் பிரபு மகாராஜன் டீமினர்.
இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் பிரகாஷ், “"விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு குற்றங்களும் வளர்ந்துவருகிறது. உங்களின் விலைமதிப்பற்ற டேட்டாவை, நீங்கள் உஷாராகக் கையாளவேண்டும். அத்தியாவசியமான இடங்களைத் தவிர்த்து வேறெங்கும் உங்களின் தொடர்பு எண்ணைக் கொடுப்பதைத் தவிர்த்தாலே, பாதிச் சிக்கலைத் தவிர்த்துவிட முடியும். அரசும் இத்தகைய பிரச்சினைகளை மனதில்கொண்டு கடுமையான புதிய சட்ட விதிமுறைகளைக் கொண்டுவரவேண்டும்'' என்றார்.
சென்னை கமிஷனர் சங்கர் ஜிவா-டம் கேட்டபோது, "தனி டீம் அமைத்து விசாரணை செய்துவருகிறோம். பொது மக்கள் இலவசங்களை நாடிச் செல்லாமலும், புதிதாக கூப்பன் விழுந்துள்ளது என்பது போன்ற வேறுவகையான தூண்டில் போடும் எந்த அழைப்பு வந்தாலும் அதனை விழிப் புணர்வோடு அணுகவேண்டும். அது சந்தேகத்திற்கு உரிய தாக இருந்தால் உட னடியாக 1930 எண்ணுக்கு அழைத்தால் போதும். உடனடி நடவடிக்கை இருக்கும்''’என்றார்.