vv"விருதுநகர் தொகுதி நம்ம கூட்டணிக்கு ரொம்பவும் சாதகமான தொகுதின்னு சொல்லு றாங்க. என்ன செய்வீங்களோ தெரியாது பாலாஜி.. கேப்டனோட புள்ள விஜயபிரபாகரனை ஜெயிக்க வச்சிருங்க'' என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தம் தந்திருக்கிறார், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தான் போட்டி யிட்டபோதுகூட, இந்த அளவுக்கு இழுத்துப் போட்டு தேர்தல் வேலை பார்த்திருக்கமாட்டார் ராஜேந்திரபாலாஜி. "ஒரு நல்ல அரசியல்வாதியாக என்னைச் செதுக்கிவருகிறார் அண்ணன்..'' என்று விஜயபிரபாகரனே சிலிர்க்கும் அளவுக்கு, பரப்புரையில் வேகம்காட்டி வருகிறது அ.தி.மு.க. விஜயபிரபாகரனின் பிரச்சாரம் எப்படி யிருக்கிறது?

தேர்ந்த அரசியல்வாதியின் பிரச்சாரமாக இல்லாமல், எளிய நடையில் பேசுவதும், இயல்பான பணிவும், அவர் மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கை யை ஏற்படுத்துகிறது. மூன்று தெய்வங்கள் என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்தைக் குறிப்பிடுவதும், தே.மு.தி.க.வை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களின் வாழ்வாதாரத் துக்காகவே போட்டியிடுகிறேன் என்று விளக்கமளிப்பதும், "துளசி வாசம்கூட மாறும்;தவசி பிள்ளையின் வாக்கு மாறாது' என்று கேப்டன் பேசிய சினிமா டயலாக்கை எடுத்துவிடுவதும் வாக்காளர்களால் கவனிக்கப்படுகிறது.

இத்தொகுதியிலுள்ள நாயுடு சமுதாய மக்கள், குறிப்பிட்ட வேட்பாளரை மனதில் நிறுத்தி, ஒரே சிந்தனையுடன் வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். முன்பு வைகோவுக்கு முழுமூச்சாக ஆதரவளித்தார்கள். விஜயகாந்த் கட்சி தொடங் கியதும் அச்சமுதாய இளைஞர்கள் மாறினார்கள். அதனால், அந்தச் சமுதாய வாக்குகள் இரண்டாகப் பிரிந்தன. தற்போதுள்ள சூழ்நிலையில், நாயுடு சமுதாயத்தவராக ராதிகா இருந்தாலும், நடிகை என்பதால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், விஜயபிரபாகரனை அப்படி நினைத்து ஒதுக்கவில்லை. ‘கேப்டன் மகனுக்கு ஒரு தடவை வாய்ப்புக் கொடுத்தாலென்ன?’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

vv

Advertisment

விருதுநகர் மாவட்ட கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை உயர் ஜாதியினர் எனக் கருதுவோரும் எதிரும் புதிருமாக இருப்பதுபோல், ஜாதி ஒற்றுமை என்ற பெயரில் நாயுடு சமுதாயத்தவரது வாக்கு வங்கி ஒரு வேட்பாளர் பக்கம் ஒரேயடியாகச் சாய்ந்தால், அதற்கு நேர்மாறான முடிவை முக்குலத்தோர் தரப்பில் எடுப்பார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங் களில், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியையோ, கூட்டணிக் கட்சிகளையோ மறைமுகமாக உதறிவிட்டு, எதிரணி வேட்பாளர் முக்குலத் தோராக இருந்தால், சத்தமில்லாமல் அவருக்கே வாக்களிப்பார்கள். அந்தவகையில், அ.தி.மு.க., அ.ம.மு.க. போன்ற கட்சிகளின் முக்குலத்தோர் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தைக் கவர்பவராக இருக்கிறார், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர். "எங்களுக்கு மாணிக்கம் தாகூரைப் பிடிக் காது. ஆனா.. சாதிக்காரரா இருக்காரே. அ.தி.மு.க. வுல முக்குலத்தோர் ஒருவருக்கு சீட் தந்து நிறுத்தி யிருந்தால், நாங்கள் எதற்கு மாறப்போகிறோம்?'' எனப் பேசுபவர்கள் உண்டு.

தே.மு.தி.க. வட்டாரத்திலோ "கேப்டன் ஒருபோதும் சாதி, மத வட்டத்துக்குள் தன்னை அடைத்துக்கொண்டதில்லை. அவருடைய மகன் விஜயபிரபாகரனும் தந்தை காட்டிய வழியில்தான் பயணிக்கிறார். சொல்லப்போனால் முக்குலத்தோரில் பலரும் கேப்டனை ரசிப்பவர்கள். முக்குலத்தோர் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் விஜயபிரபாகர னைப் பார்த்ததும் பெண்கள் "மவராசா எங்க ஓட்டு உனக்குத்தான்' என்று கூறுவதோடு, கேப்டன் மறைந்தது குறித்த தங்களது கவலையை, ஆறுதல் வார்த்தைகளாகவும் வெளிப்படுத்துகின்றனர். கட்சிகளின் வாக்கு வங்கிக் கணக்கோ, சாதி வாக்கு களின் கணக்கோ, எந்தக் கணக்கு போட்டாலும் விஜயபிரபாகரனுக்கு சாதகமாகவே இத்தொகுதி இருக்கிறது. தொகுதியில் மூன்றாவது இடத்திலுள்ள தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள், பிற சமுதாய வாக்குகள், சிட்டிங் எம்.பி. மீதான அதிருப்தி வாக்குகள் எனப் பலவும் முரசு கொட்டத் தயா ராகிவிட்டன. விருதுநகர் தொகுதி முழுவதும் கேப்டன் அலை வீசு கிறது'' என்கிறார்கள்.

Advertisment

ராதிகா வெளிப் படையாகவே "நானும் சரத்குமாரும் நடிகர்கள். எங்களைப் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். கூட்டம் கூட்ட மாக வருவார்கள். அப்படி வரும் மக்களின் வாக்கு களை எப்படி தாமரை சின்னத்துக்கு விழ வைப் பீர்களோ?'' என்று பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கேட் கிறார். சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்த மக்க ளிடம் ராதிகா சரத்குமார் "சூர்யவம்சம் சின்ராசு நந்தினியைக் கலெக்டராக்கியதுபோல், என் கணவர் என்னை எம்.பி.யாக்கப் போகிறார்'' என்று முதற் கட்ட பிரச்சாரத்தில் சிலாகித்தபடியே இருந்தார்.

vv

ஒரு ஊரில் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு கேட்டு, டீக்கடைக்குள் புகுந்து தானே டீ போட்டுக் கொடுக்கிறார் ராஜேந்திரபாலாஜி. இன்னொரு ஊரில் புரோட்டா கடையில் புரோட்டா போட்டு, இருவரும் ஒரே இலையில் சாப்பிடுகின்றனர். ஒவ்வொரு முனையிலும் "நீங்கள் என்னைக் கேப்டனாகவே பார்ப்பதை என்னால் உணரமுடிகிறது. தே.மு.தி.க. எம்.பி. நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்ற கேப்டனின் ஆசையை நிறைவேற்றுங்கள்'' என்று தன் தந்தை விஜயகாந்தை முன்னிறுத்தியே பேசுகிறார் விஜயபிரபாகரன்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரோ நல்லவர் செய்த நானூறு நல்லவைகள்’ என, தான் ஆற்றிய பணிகளைப் பட்டியலிட்டு, 165 பக்கங்களில் அச்சிட்ட நூலை தொகுதி முழுவதும் வினியோகித்து வருகிறார். தனது பரப்புரையில் "எதிர்க்கட்சி எம்.பி.யாக இருந்தும் கடந்த 5 வருடங்களில் தொகுதி முழுவதும் பரவலாகப் பல பணிகளைச் செய்திருக்கிறேன்'' என்று குறிப்பிடும் அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வருடம்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை தருவோம்'' என்று பெண்களிடம் படிவங்களை நிரப்பச் சொல்லி, உத்தரவாதமே தருகிறார்.

மொத்தத்தில் மாணிக்கம் தாகூருக்கும் விஜயபிரபாகரனுக்கும் போட்டி பலமாகவே இருக்கிறது.