ங்கும் ஈரம், எங்கும் பச்சை, இந்தியாவிற்கே இங்கிருந்துதான் ஆக்சிஜன் கிடைக்கிறதோ என்ற அளவிற்கு பசுமரங்கள் சூழ்ந்த மலைகள். தமிழகத்தில் இருக்கும் நம்மை, மேப்பில் மணிப்பூரைக் குறிக்கச் சொன்னால் குழம்புவோம். அது வடகிழக்கு என்ற அளவில் மட்டுமே நாம் அறிவோம். இன்று மணிப்பூர் கலவரம் குறித்து உலகமே பேச ஆரம்பித்திருக்கிறது.

இந்தக் கலவரம் எங்கிருந்து ஆரம்பித்தது?

மே மாதம் ஒரு நாள் டி.வி. நிகழ்வில் மணிப்பூர் பற்றி பேச முடியுமா? எனக் கேட்டார்கள். இங்கு என்.ஜி.ஓ. வழியாக மணிப்பூருக்கு உதவும் நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டேன். எனக்கு மணிப்பூர் சிக்கல்கள் பற்றிய தகவல்கள் வேண்டும் எனக் கேட்டேன். அவர் ஒருசில பக்கங்கள் இருக்கும் ரிப்போர்ட் அனுப்பினார்.

kk

Advertisment

அதைப் படிக்கும்பொழுது அதில் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல மீட்புப் பணிகளின், தேவைகளின் செய்திகளே இருந்தன. வழக்கம்போல் நாம் பார்க்கும் டி.வி. விஷயங்களும். அன்றைய தேதியில் வெளியுலகம் அறிந்திராத சில பக்கங்களும் அதில் இருந்தன.

அதற்குமுன்பே கர்நாடகத் தேர்தலின்பொழுது அமித்ஷா மணிப்பூர் செல்லவில்லை, பிரதமர் போகவில்லை, இங்கு தேர்தல் பணிபுரிகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். மே 3 ஒரு கருப்பு தினம் என்றுகூட நம்மில் பலர் உணராத தேர்தல் நாட்கள் அவை. ஒருமுறை மேரிகோம் "என் மாநிலம் பற்றி எரிகிறது, உதவுங்கள்' என்றார். அப்போதும் நாம் ஏதும் உணரவில்லை. ஆற அமர மே 31-ல் உள்துறை அமைச்சர் மணிப்பூர் சென்று, "15 நாட்களில் அமைதியைக் கொண்டுவருவோம்' என்றார். அவர் சென்ற இடத்தில், அவர் பேசிய இடத்தில் நானும் பேசுவேன் என்று அப்போது நான் கனவிலும் நினைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஊடகங்கள் விழிக்க ஆரம்பித்தன. அப்படி ஒரு டி.வி நிகழ்வில் பிரபல பத்திரிகையாளர் கிரிஷ்மா வந்திருந்தார். மணிப்பூர் பற்றி அவர் பேசிய விஷயங்கள் மிக ஆழமானவை. அப்பொழுதுகூட நான் அதை அத்தனை ஆழமாக வலியுடன் பார்க்கவில்லை. இன்றைக்கு யோசித்தால், மேலோட்ட மாகக் கவனித்திருந்தேன் என்பதே நிஜம். டி.வி.யில் பேசுவதற்காக பல நிகழ்ச்சிகள், கட்டுரைகள் படித்தேன், பேசினேன்... அவ்வளவுதான். ஆனால் உணர்வும், வலியும் இல்லை.

சரி... நான் எழுதியோ, பேசியோ உணரவைக்க முடியுமா? எனினும் முயற்சிக்கிறேன். ஏனெனில் என் புரிதலை மணிப்பூர் பயணத்துக்கு முன், பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.

இன்று அதே உள்துறை அமைச்சர் சென்ற வீடியோ பார்க்கிறேன். கண்ணில் நீர் கோர்க்கிறது. பதினைந்து நாளில் அமைதி வரும் என்று சொல்லியிருந்தார். பின் மணிப்பூர் வாலண்டியர் ஒரு வீடியோ அனுப்பி இருந்தார். அதிரடிப் படை, போலீஸ் சேர்ந்து குக்கிராமங்களை நோக்கிச் சுடும் நிகழ்வுகள் உள்ள வீடியோ. அவர்களிடம் நாம் என்ன சொல்வது? என்ன பதில் பேசுவது. ஓ மை காட்! எனச் சொன்னேன். மனதுக் குள் குற்ற உணர்வு குமையாமல் இல்லை.

dd

அங்கு கவுன்சிலிங்கில் ஒரு மலைவாசிப் பெண் சொன்னார், "தூங்கி நூறு நாள் ஆச்சு, தூங்காமல் தான் உடல் நலமில்லை என்று தெரியுது. எங்கள் கிராமம் பள்ளத்தாக்கு பகுதிகளின் எல்லைக்கு அருகில் இருக்கு. ஒவ்வொரு இரவிலும் அவர்கள் வந்து தாக்க வாய்ப்பு இருக்கு.. பின் நான் எப்படி தூங்கமுடியும்?''”இது ஜஸ்ட் சாம்பிள். வார்த்தை அளவில் நம்பிக்கை கொடுத்திருந்தேன். இந்த பயம் இன்னும் பலரின் தூக்கத்தைப் பறித்திருக்கும். நினைத்துப் பாருங்கள், நிச்சயமில்லா இரவுகளை குடும்பத்தோடு கடக்கவேண்டும். அப்படியெனில் அந்த நிச்சயமில்லா இடத்துக்கு நாங்கள் எப்படி சென்றோம்?

மே மாதம் தேர்தல் முடிந்தவுடன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றிக்காக வார் ரூம் பொறுப்பாளராகவும் பணியாற்றிய சசிகாந்த் சார் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். மணிப்பூர் மிக மோசமான நிலையில் இருக்கிறது. உடனடியாக அமைதி திரும்பவேண்டும் என இடைவிடாமல் பேசினார். ராகுல்காந்தியும் அதனை வலியுறுத்தினார்.

மே, ஜூன் போய் ஜூலை வரை இழுத்தடித்து மணிப்பூரை மக்கள் அநேகமாக மறந்திருந்த நேரம். ஜூலை 19. ஒரே ஒரு நாள் அங்கு இணையம் தரப்பட்டது. பொழுது விடிந்தது. எனக்கு ஒரு பெங்களூர் தோழி செய்தி அனுப்பியிருந்தார்.

"கீர்த்தி நான் அழுகிறேன்... நீ ஏதாவது செய்யேன்'' என் றார். இப்படியெல்லாம் செய்தி போடக்கூடிய பெண் அல்ல. மிகத்துணிவான பெண். தொழிலாகட்டும், மிகப்பெரிய பைக் ஓட்டுவது ஆகட்டும், எதிலும் துணிவாக ஈடுபடக்கூடியவர். அழுது பார்த்தது இல்லை. அவர் அப்படிச் சொல்வது அதிர்ச்சியாக இருந்தது. சரி என அவர் கொடுத்த இன்ஸ்டா லிங்க் போனால் யாரோ பேசிக்கொண்டு இருந்தார்கள். மிகக்கோபமாக. அடுத்து டிவிட்டர் பக்கம் போனால் அங்கு பல தலைவர்கள் காட்டமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பிரியங்கா காந்தி உள்பட. முதலில் என்ன செய்தி என்றே புரியவில்லை. நிர்வாண வீடியோ, ஏதோ நடந்திருக்கு என்பது மட்டும் புரிந்தது. மணிப்பூர் பெண்கள் என அறிந்தேன்.

உடனே இணையத்தில் தேடினாலும் ஏதும் புரிய வில்லை. ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தில் அந்த வீடியோ இருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி, கண்ணீர், உலகம் அறியவேண் டும் என்ற வேகம், கோபம். அதை உடனடியாக டவுன்லோடு செய்து செய்தியின் காட்டம் குறையாதவாறு ஓரம் மட்டும் ப்ளர் செய்து என் பக்கத்தில் பதிவிட்டேன். சில மணி நேரங்களில் தொண்ணுறு ஆயிரத்துக்கும் மேல் பார்த்திருந்தனர்,

பலர் கண்ணீர்விட்டு அழுதனர். அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்குமா? எனக் கேட்டனர். இத்தனை பெரிய சிக்கல், உடனடியாக நடவடிக்கை இருக்கும் என பேசிக்கொண்டிருந் தோம். நடவடிக்கை இருந்தது. அதுவும் உடனடியாக நடவடிக்கை இருந்தது. ஆம், காபி குடித்துவிட்டுத் திரும்புகிறேன். என்னால் எனது முகநூல், இன்ஸ்டா, வாட்ஸ் அப் எதனுள்ளும் செல்ல முடியவில்லை. அரசு என் கணக்கை மட்டுமல்ல, உலகமெங்கும் லட்சக்கணக்கான கணக்குகளை முடக்கம் செய்திருந்தது. உலகையே உலுக்கிய அந்த வீடியோ யாரும் பார்க்க முடியாமல் முடக்கப்பட்டிருந்தது.

என் இணையப் பக்கங்களை மீட்டெடுக்க இரு நாட்களுக்கு மேல் ஆனது. ஃபேஸ்புக் லைவ் முதல், குழுவரை ஏதும் செய்யமுடியாமல் முப்பது நாள் தடை. நூற்றுக்கணக்கில் லைக் வாங்கிக்கொண்டிருந்த எனக்கு இன்றுவரை பழைய ரீச் இல்லை. மணிப்பூர் என எழுதினாலே கெட்ட வார்த்தை என முகநூல் செயற்கை நுண்ணறிவு முடக்க ஆரம்பித்தது. அல்லது என் பதிவுகளை பலரின் பார்வைக்குப் போகாமல் செய்தது. நியுஸ்ஃபீடில் காட்டாமல் வைத்தது.

மணிப்பூரில் இணையம் சில மாதங்களாகத் தடை. அந்த ஒரே ஒரு நாள்தான் வந்தது, வந்தவுடன் அங்கு நடக்கும் அநியாயங்கள் பதிவேற ஆரம்பித்தன. உடனடியாக அரசு திரும் பவும் இணையத் தடையை செயல்படுத்திவிட்டது. இந்தியா முழுதும் மணிப்பூர் என்ற வார்த்தைகூட இணையத்தில் புழங் காமல் ஆனது. இதுபோல் ஒன்றை நாம் சந்தித்ததே இல்லை. ஒருமாதிரி எனக்கு மூச்சு முட்டியது. பேச்சு சுதந்திரம் இழந்தது போல. நல்லவேளை யூடியூபில் எந்தச் சிக்கலும் இல்லை. எனக்கு அழைப்பு இருந்தது. எல்லாவற்றிலும் கலந்துகொண் டேன். அதன்பின் பெங்களூரில் பல்வேறு அமைப்புகள் திரண்டு டவுன்ஹாலில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். கோஷங்கள், கோபங்கள். பெண்கள் கூடுதலாய் இருந்தனர். லைவ் போடத் தடை இருந்ததால் சின்னச் சின்ன வீடியோக்கள் போட்டேன். இளைஞர்களிடம் கோபம் கொந்தளித்தது. எல்லா இடங்களிலும் ஆற்றாமை தெறித்தது.

சேனல்கள் பேட்டி எடுத்தனர். மறுநாள் பல பத்திரிகை களில் போராட்ட செய்தி வந்தது. ஏதாவது செய்யவேண்டும். இந்த அநியாயத்தை தட்டி கேட்கவேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் இருந்தது.

உலகமே அந்த வீடியோவைப் பார்க்கும்வரை ஏன் நடவடிக்கை இல்லை? என்னதான் மணிப்பூரில் நடக்கிறது? ஏன் அந்த மண் பற்றி எரிகிறது?

(தொடரும்)