ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க பா.ஜ.க. முயற்சி எடுத்தது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், கல்யாண மண்டபம், தனியார் ஹால் என இரண்டாயிரத்துக்கும்
மேற்பட்ட இடங்களில் பஜனை, அன்னதானம் இவற்றுடன் ராமர்கோவில் திறப்புவிழாவை எல்.இ.டி. திரையில் நேரடியாக ஒளிபரப்புவது என பா.ஜ.க. ஏற்பாடு செய்தது. இவை எதற்கும் உரிய அனுமதி பெறப்படவில்லை.
"அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் நாங்கள் ராமர்கோவில் திறப்பு விழாவிற்காக பஜனை நடத்தப் போகிறோம்' என்று கடிதம் மட்டும் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த பெரியார் இயக்கங்கள் முடிவு செய்திருந்தன. இது பெரிய சட்டம்- ஒழுங்கு பிரச்னையாகக் கூடும் என்கிற சூழல் ஏற்பட்டது. இதுபற்றி தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யான அருண் ஐ.பி.எஸ். அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டி.சி.க்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித் தார். அவசரம் கருதி வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்ட அந்த உத்தர வை பா.ஜ.க.வின் தலைமைக்கே அனுப்பி வைத்தார் சென்னை மாநகர நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.
அந்த உத்தரவில், "ராமர் கோவிலுக்கு எதிராகவோ ஆதரவாகவோ நடக்கும் நிகழ்வுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் நடவடிக்கை எடுங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் தமிழக பா.ஜ.க. தலைவர். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காமாட்சி அம்மன் கோவிலுக்கே சென்று அங்கு எல்.இ.டி. திரை அமைத்து ராமர்கோவில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பாகக் காட்ட முயன்றார். அனுமதி இல்லை என அந்தத் திரை அகற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத் திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அதன்பிறகு திரையில் காட்ட அனுமதி தரப்பட்டது.
இந்நிலையில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று பா.ஜ.க. மாநிலத் தலைவர்களுக்கு எதிராக வந்தது. புகாரைக் கொடுத்தவர் சித்ராதேவி எனும் பெண். பிரதமரின் சென்னை விசிட்டுக்காக ஆட்களைத் திரட்டிக்கொண்டு வந்து கூட்டம் காண்பிக்க வேண்டுமென பா.ஜ.க. தலைவர் அமர்பிரசாத் ரெட்டியிடம் டிரைவராக இருக்கக்கூடிய ஸ்ரீதர் என்பவர் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தார். பா.ஜ.க. பெண் தொண்டர் ஆண்டாள், கோட்டூர்புரம் பகுதியிலிருந்து பெண்களை அழைத்துச்சென்று பிரதமரை வரவேற்றார். ஆனால், கூட்டம் சரியாக வரவில்லை என அமர்பிரசாத் ரெட்டி புகார் தெரிவித்தார். உடனே டிரைவர் ஸ்ரீதர் ஆண்டாளின் வீட்டுக்குச் சென்று அவரைத் தலையில் தாக்கி அசிங்கப்படுத்தி மானபங்கம் செய்துள்ளார்.
இது குறித்து ஆண்டாள், மாநிலத் தலைவரிடம் புகார் சொன்னார். தலையில் காய முற்ற ஆண் டாளை, பாரதி ராஜா மருத்துவமனையில் பணியாற்றும் பா.ஜ.க. மாநில நிர்வாகியான வி.பி.துரைசாமியின் டாக்டர் மகனிடம் அனுப்பி தலையில் ஏற்பட்ட காயத்துக்கு தையல் போட்டுள்ளனர். போலீசுக்குத் தெரிவிக்கக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஆண்டாளை அனுப்பி வைத்தார்கள். ராமர் கோவில் திறப்புவிழா முடிந்ததும் ஆண்டாளின் தங்கை சித்ராதேவி நடந்த சம்பவத்தை போலீசில் புகாராகப் பதிவு செய்தார்.
புகாரை விசாரித்த போலீஸ், அமர்பிரசாத் ரெட்டியின் டிரைவரான ஸ்ரீதரை கொத்தாகத் தூக்கிக்கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். "அமர் சொல்லித்தான் ஆண்டாளை நான் அடித்தேன். மானபங்கப்படுத்தினேன்'’என ஸ்ரீதர் வாக்குமூலம் கொடுத்தான். அதை வைத்து அமர் பிரசாத்ரெட்டியைத் தேடியபோது அமர் தலைமறைவானார். இதைக் கேள்விப்பட்ட மாநிலத் தலைவர் அவர் நடத்தும் ‘"என் மண்... என் மக்கள்'’ யாத்திரையில் அமர் கலந்து கொள்ளக் கூடாது என தடை விதித்தார். ஏற்கெனவே பா.ஜ.க. கொடிக்கம்பத்தை மாநிலத் தலைவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் வைத்து அத்துமீறிய வழக்கில் போலீசுடன் மோதி அமர் கைதானார். அமர் மேல் நான்கு வழக்குகள் பதிவு செயயப்பட்டன. எல்லாவற்றுக்கும் மொத்தமாக பதிமூன்று நாட்கள் சிறையிலிருந்து ‘ஜாமீன்’ வாங்கி வந்தார் அமர்.
“"என்னைத் தொட்டுப் பார்... என்னை சீண்டிப் பார்' என தமிழகப் போலீசுக்கு சவால் விடுவது அமரின் வழக் கம். இப்போது அந்த அமரே ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் சிக்கியுள்ளதால் அவரை போலீஸ் துரத்த ஆரம்பிக்க அமர் தலைமறைவாக ஓடிக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.
தமிழகத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலர் பா.ஜ.க.வுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக ஏ.டி.ஜி.பி. அருண் போன்றவர்கள் அவர்களது கடமையை உணர்ந்து செயல்படுகிறார்கள். ஆவடி கமிஷனராக இருக்கும்போது மிளகாய்ப்பொடி வெங்கடேசன் என்ற பா.ஜ.க. மாநில நிர்வாகியை மோசடி வழக்கில் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஏ.டி.ஜி.பி. அருண். அதனால் அவரைக் குறிவைத்து சமூக வலைத்தளங்களில் பல டுபாக்கூர் செய்திகளை பா.ஜ.க.வினர் உலாவவிடுகிறார்கள்.
இதற்கிடையே, வைரமுத்து கலைஞரை திட்டுவதுபோல ஒரு போலி வீடியோவை செந்தில்நாதன் என்பவர் தயாரித்து வெளியிட, அவரை பெங்களூருவில் வைத்து கைது செய் திருக்கிறது தமிழக போலீஸ். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவு சமூக வலைத்தள செயல் பாட்டாளரான செந்தில்நாதனின் கைது பா.ஜ.க.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இப்படி ஒன்றன்பின் ஒன்றாக பா.ஜ.க. எதிர்ப்பு நடவடிக்கைகளில் தமிழக காவல்துறை ஈடுபட, அதற்குப் போட்டியாக காவல்துறை அதிகாரிகள் சிலரின் உதவியோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.வைக் குறைசொல்லும் டேப்புகளை தமிழக பா.ஜ.க. தலைமை வெளியிட்டு வருகிறது என்கிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள்.
-தாமோதரன் பிரகாஷ்
சுந்தர் சிவலிங்கம்