எய்ம்ஸுக்கும் பா.ஜ.க. அரசுக்கும் என்ன பொருத்தமோ,…எய்ம்ஸ் சர்ச்சை எப்போதும் பா.ஜ.க.வைச் சுழற்றியடிக்கிறது. பீகார் மாநிலம் தர்பங்காவில் மிதிலா மாணவர் ஒன்றியம் எய்ம்ஸ் மருத்துமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மக்களிடமிருந்து செங்கலை தானம் பெறும் நிகழ்வினை ஒருங்கிணைத்து தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமென பா.ஜ.க. உறுதிமொழி அளித்து மூன்றாண்டுகள் ஆனபின்னும் அடிக்கல் நாட்டியதைத் தவிர எந்த வேலையும் நடக்கவில்லை. அதைச் சுட்டிக்காட்ட, தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மதுரையில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், ஒற்றைச் செங்கலைக் காட்டி, "அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தந்தாங்களே, அதைக் கையோட எடுத்து வந்திருக்கேன்''’என நையாண்டி செய்தார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எய்ம்ஸ் விவகாரத்தில், பா.ஜ.க. அரசின் மீதான விமர்சனங்கள் தொடர்வதையே இந்த எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரங்கள் காட்டுகின்றன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நந்தகிஷோர் யாதவ், "நேரு கட்டிய ஒற்றை எய்ம்ஸைத் தவிர மற்றதனைத்தும் பா.ஜ.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டவை' என்றார். அவர் சொன்னது உண்மையா?
இந்தியாவின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை நேருவின் ஆட்சிக் காலத்தில் 1956-ல் டெல்லியில் கட்டப்பட்டது. அதன்பின்பு வந்த காலகட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் எதுவும் கட்டப்பட்ட வில்லை. 2003-ல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய், அப்போதைய சுதந்திர தின உரையில், "எய்ம்ஸ் போன்ற வசதிகளுடன் அடுத்த மூன்று வருடங்களில் போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப் பூர், ரிஷிகேஷ் போன்ற நகரங்களில் கட்டிமுடிக்கப் படும்' என்றார்.
ஆனால் சொன்னபடி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அவை கட்டி முடிக்கப் படவில்லை. மாறாக, அதன்பின்பு வந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் அந்த ஆறு மருத்துவமனைகளும் கட்டி முடிக்கப்பட்டன. திட்டம் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டியதாலேயே முழுக்க முழுக்க இந்தத் திட்டத்துக் கான பெருமையை, தன் கணக்கில் வரவுவைக்கப் பார்க்கிறது பா.ஜ.க.
இந்நிலையில் 2014-ல் பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தது. மோடி ஆட்சிக்கு வந்த கையோடு, மூன்று வருடங்களில் 4, 7, 4 என புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
இவையெல்லாம் அறிவிக்கப்பட்ட நிலையிலும், அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலும், மருத்துவமனை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்துதல் நிலையிலும் என பல்வேறு நிலைகளில் இருக்கின்றன. இவற்றைக் கட்டிமுடிக்க 2022 முதல் 2025 வரை பல்வேறு காலவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டி ருக்கின்றன.
நிதிச்சிக்கலோ, திட்டமிட்டபடி பணிகள் நடப்பதில் இடையூறோ வருமெனில் கூடுதல் வருடங்கள் ஆகலாம். மோடி அறிவித்த இந்த பதினைந்து மருத்துவமனைகளில் ஒன்றுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. அடிக்கல் நாட்டியதைத் தவிர வேறெந்தக் கட்டத்துக்கும் நகரவில்லை.
அதேபோல பீகாரில் 2015-ல் அப் போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை அறிவிப்பு செய்தார். அடுத்து நான்காண்டுகளுக்கு இந்த திட்டத்தைப் பற்றிய பேச்சே இல்லை. 2019 பாராளுமன்றத் தேர்தலின்போது தர்பங்கா வில் எய்ம்ஸ் என்றொரு அறிவிப்பு வந்தது. அதற்குப் பின் 2020-ல் சட்டமன்றத் தேர் தலின்போது இந்தத் திட்டத்துக்கு முறையான அனுமதி வழங்கப்பட் டது.
தேர்தல் முடிந்த தும் எய்ம்ஸ் பற்றிய பேச்சே எழவில்லை. தர்பங்கா எய்ம்ஸோடு சேர்த்து அறிவிக்கப் பட்ட ராஜ்கோட், டியோகர் எய்ம்ஸ் எல்லாம் வேகமாக கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.
பார்த்தது மிதிலா மாணவர்கள் அமைப்பு. மாநிலத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை வந்தே ஆகவேண்டுமென்று களத்தில் இறங்கியது. கிராமம் கிராமமாக, வீடு வீடாக "ஒற்றைச் செங்கல் கொடுங்கள்' என கேட்டு வாங்கி, தர்பங்கா ஆரம்பகட்ட பணிகளுக்காக மூன்று லட்சம் செங்கற்களைச் சேகரித்துவிட்டார்கள். செப்டம்பர் 8-ஆம் தேதி அடையாள அடிக்கல் நாட்டு விழாவுக்கும் தீர்மானித் திருக்கிறார்கள்.
பீஹாரின் தர்பங்காக்காரர்கள் செங்கல் யுக்தியைக் கையிலெடுத்திருக்கிறார்கள், மதுரை எய்ம்ஸ் பணிகளைத் துரிதப்படுத்த தமிழர்கள் இன்னும் என்னென்ன யுக்தியைக் கையிலெடுக்க வேண்டுமோ?