இந்திய மாநிலங்களில், மக்க ளின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. மாநில வளர்ச்சிக்கு மிக முக்கிய மானது கல்வி. அந்த வகையில், பள்ளிக்கு வரும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பசிப்பிணி போக்கும் வகையில், சத்துணவுத் திட்டத்தின் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு முழு வதும் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
இத்திட்டத்திற்கு தமிழகமெங் கும் வரவேற்பு குவிந்துள்ளது. இந்த காலை உணவுத் திட்டத்தை தமிழ் நாடு அரசு அமலாக்குவதற்கு முன்பே, இதனை வெற்றிகரமாகச் செயல்படுத் திய சமூக ஆர்வலர் ஒருவரைப் பற் றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
சென்னை -கொடுங்கையூர் மாநகராட்சி பள்ளியில் தமிழாசிரிய ராகப் பணிபுரிந்தவர் பி.கே.இள மாறன். அதேபோல, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவ ராகவும் பொறுப்பு வகித்துவந்தார். அவர் பணிபுரிந்த கொடுங்கையூர் மாநகராட்சி பள்ளியில், பள்ளிக் குழந்தைகள் காலையிலேயே அவ் வப்போது மயங்கி விழுந்துள்ளனர். அதிர்ச்சியடைந்தவர், காரணத்தை விசாரித்தபோது, அம்மாணவர்கள் காலையில் சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருவது தெரியவந்தது. உணவு சாப்பிடாததால் ஏற்பட்ட மயக்கம் என்பதை அறிந்த இளமாற னால் அதைக் கடந்துபோக முடிய வில்லை. எந்தெந்த மாணவர்கள் மயங்கி விழுந்தார்களோ, அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்றார். அதுவும் மாணவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலேயே சென்றார்.
தெருவோரத்தில் வசிப்பது, தாய், தந்தை இல்லாமல் பாட்டியின் வளர்ப்பில் வாழ்வது, தந்தை இல்லாமல் தாய் மட்டுமே பார்த் துக்கொள்வது எனப் பல்வேறு சிக்கலான குடும்பச்சூழல்களில் வாழும் மாணவர்கள் பலர். அதேபோல் காலையிலேயே சமையல் செய்ய முடியாமல் வேலைக்குச் செல்லும் அம்மாக் களைக் கொண்ட மாணவர்களும் பலர். வறுமை காரணமாக காலை உணவென்பதே ஆடம்பர மாகிப்போன குழந்தைகளென ஒவ்வொன்றையும் கண்டு நொந்து போன ஆசிரியர், தன்னுடைய மாதச் சம்பளத்தில் பாதியை அந்தக் குழந்தைகளின் காலை உணவுக்காக ஒதுக்கி, அந்த மாண வர்களுக்கு காலை உணவினை வழங்கி வந்தார். இது போன்று தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி களிலும் மாணவர்கள் இருக்கி றார்களே, எனவே தன்னைப் போல் தமிழ்நாடு அரசானது, தமிழகம் முழுக்க இத்திட்டத் தைக் கொண்டுவரலாமே என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அவர் வலியுறுத்திவந்தும் செவி சாய்க்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தும் தனது கோரிக்கையை வலியுறுத்தி னார். "பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலான குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவதால் சோர் வாகவே காணப்படுகிறார்கள். இதனால் கல்வியில் கவனம் செலுத்தமுடியாமல் வருந்து கிறார்கள். உடலும் உள்ளமும் ஒருசேர அமைந்தால்தான் கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். ஆகையால் மாநிலம் முழுதும் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கவேண்டும்' என கோரிக்கை வைக்கவே, அதனை நக்கீரன் செய்தியாக வெளியிட் டது.
இச்சூழலில், தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறை வின்போது, 2022ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரச் சிற்றுண்டித் திட் டத்துக்கான அறிவிப்பை வெளி யிட்டு, முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தினார்கள். இதனை ஆசிரியர் சங்கம் சார்பில் பாரட்டியதோடு, காலை சிற் றுண்டித் திட்டத்திற்கு டாக்டர் கலைஞர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர்சூட்டக் கோரிக்கைவைத்தார். இந்நிலை யில் திடீரென ஆசிரியர் இளமாறன் மாரடைப்பால் மரண மடைந்தார். அவர் மறைந்த போதும், அவர் எதிர்பார்த்த கனவுத் திட்டமான காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுக்க தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி, திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த பள்ளியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத் தார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாநிலம் முழுவதுமுள்ள 31,008 அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டு, சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடை கிறார்கள்.
திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "உண்டி கொடுத் தோரே உயிர் கொடுத்தோர்' என மணிமேகலை காப்பியம் சொல்கிறது. அதற்கு நிகராக உயிர் கொடுக்கிற அரசாக திராவிட மாடல் அரசு செயல் பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பல திட்டங்களைக் கொண்டுவந்தாலும் இந்தத் திட்டம் தான் எனக்கு மன நிறைவைக் கொடுக்கிறது. எளிய பின்புலத்தைச் சேர்ந்த குழந்தை களின் கல்வி, எந்தக் காரணத் தினாலும் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பெரியார் சுயமரியாதை இயக்கத் தைத் தொடங்கினார். கல்வி பெற சாதிய வேறுபாடுகள் இருக்கக் கூடாது எனப் பெரியார், அண்ணா, கலைஞர் நினைத் ததை, அவர்களின் வழியில் நடக்கும் நானும் செயல்படுத்து வேன்'' என்றார்.
ஓர் ஆசிரியரின் கனவுத் திட்டத்தை ஓர் அரசாங்கமே முன்னெடுத்திருப்பது அந்த ஆசிரியருக்கான மரியாதை யாகும்.