ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது லாலாப் பேட்டை கிராமம். இந்த கிராம மக்கள் அருகிலுள்ள முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்து மறியல், ஆர்ப்பாட்டம், ஊர்க் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரச்சனை குறித்து நம்மிடம் பேசிய லாலாப் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோகுலன், “"எங்க பஞ்சாயத்து 254 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஐந்தாயிரம் பொதுமக்கள் வசிக்கிறோம். எங்கள் கிராமத்துக்கென சுடுகாடு, குளம், ஏரி கிடையாது. இதனால் அருகிலுள்ள முகுந்தராயபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டைப் பயன்படுத்தறோம். எங்க கிராம மக்களுக்குச் சொந்தமான 2000 ஏக்கர் விவசாய நிலம் முகுந்தராயபுரம் பஞ்சாயத்து பகுதியில் உள்ளது. இரண்டு கிராமங்களுக்கு உரிமையான பாலவில்வ நாதேஸ்வரர் கோவில் உட்பட எங்கள் பகுதி மக்களின் 5 குலதெய்வ கோவில்கள் முகுந்தராயபுரம் பஞ்சாயத்து எல்லைக்குள் வருகிறது. கடந்த காலங்களில் எங்கள் இரண்டு கிராமங்களும் ஒற்றுமையாக இருந்தன, ஆனால் இப்போது சிலர் தங்களது தனிப்பட்ட லாபத்துக்காக பகைமையை உருவாக்குகிறார்கள். மோதல்கள் வரவேண்டாம் என்றே எங்கள் கிராம எல்லையை சீரமைக்கச்சொல்லி கேட்கிறோம்''’என்றார்.

ranipettai

Advertisment

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராணிப்பேட்டை மாவட்ட தலைவரும், லாலாப்பேட்டையை சேர்ந்தவரு மான எல்.சி.மணி, "லாலாப்பேட்டை மக்களுக்குத் சொந்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் அருகிலுள்ள முகுந்தராயபுரம் பஞ்சாயத்து எல்லைக்குள் உள்ளன. இதனால் விவசாயிகள் சில சிரமங்களைச் சந்திக்கிறார்கள். அதேபோல் லாலாப்பேட்டை ஊராட்சி மக்கள் 100 நாள் வேலை திட்டப் பணிகளை முகுந்தராயபுரம் பஞ்சாயத்து எல்லையிலுள்ள ஏரி, குளம், நீர்வழிப்பாதையில் செய்கிறார்கள், இனி எங்கள் பஞ்சாயத்து எல்லையில் வேலை செய்யாதீர்கள் என தடுக்கிறது பஞ்சாயத்து நிர்வாகம். இந்த சிக்கல்களைத் தீர்க்கவே பஞ்சாயத்து எல்லை மறுவரையறை செய்யச் சொல்கிறோம்''’என்றார்.

இரண்டு கிராம மக்களிடையே பிரச்சனையை உருவாக்குபவர் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவராகவும், வாலாஜா ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும், தி.மு.க.வின் வாலாஜா மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகன், அவரது தம்பிகள் அ.தி.மு.க. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில நிர்வாகி பாஸ்கரன் ஆகியோரே என குற்றம் சாட்டுகிறார்கள்.

rr

Advertisment

காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவின் மாநில துணைத்தலைவர் கோட்டீஸ் வரன், "300 ஆண்டுகள் பழமையான பாலவில்வ நாதேஸ்வரர் கோவிலின் பெயரை 2009-ல் காஞ்ச னேஸ்வரர் என மாற்றிவிட் டார் முருகனின் தம்பியும் அ.தி.மு.க. பிரமுகருமான பாலகிருஷ்ணன். கோவில் தலவரலாற்றின்படி காஞ்ச னேஸ்வரர் என்பது அசுரனின் பெயர். அசுரனை அழித்த கடவுளின் பெயரில் அமைக்கப்பட்டதே பால வில்வநாதேஸ்வரர் கோவில். அந்த பெயரையே மாற்றிவிட்டார். இவர்கள், கோவில் தங்களுக்கு சொந்தமானது எனச்சொல்கிறார்கள். கோவிலைச் சுற்றி 750 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது, அதனை குறிவைத்து மண் திருட திட்டமிடு கிறார்கள். முகுந்தராயபுரம், லாலாப்பேட்டை ஊராட்சிகளின் எல்லைகளிலுள்ள மலைப்பகுதி, ஏரி, ஆற்றுப்பகுதிகளில் அனுமதியில்லாமல் மண்ணெடுத்து விற்கிறார்.

ராணிப்பேட்டை சிப்காட் 3 செக்டாரில் புதியதாகத் தொடங்கப்படும் கம்பெனிகளை மிரட்டி, நீங்கள் என்னிடம் மட்டுமே மண், மணல், செங்கல் எடுக்கவேண்டும். என்னுடைய ஜே.சி.பி., லாரிகளையே பயன்படுத்தவேண்டும் என மிரட்டுகிறார். சில கம்பெனிகள் புகார் தந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மண்ணெடுத்து விற்பனை செய்துள்ளார்கள்.

இதுபற்றி வனத்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, கலெக்டருக்கு புகார் தந்தும் நடவடிக்கையே எடுக்கமாட்டேன்கிறார்கள். சிப்காட்டில் ஆயிரக்கணக் கானவர்கள் தினக்கூலிக்கு வேலை செய்கிறார்கள். தொழில்வரி விதிகளை மீறி மாதம் 8 ஆயிரத் துக்குமேல் சம்பளம் வாங்கு பவர்களிடம் மாதம் 200 ரூபாய் தொழில்வரியை கம்பெனி நிர் வாகமே வசூல் செய்து, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கட்டச்சொல்லி வசூலிக்கிறார்.

குற்றச்சாட்டுகள் குறித்து வாலாஜா மேற்கு ஒ.செ.வும், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவருமான முருகனிடம் நாம் கேட்டபோது, "எங்கள் ஊராட்சிக்கு வந்த மருத்துவமனை, அரசுப் பள்ளி, கூட்டுறவு சொசைட்டியை அந்த கிரா மத்திலேயே அமைத்துவிட்டார்கள்.

rr

எங்கள் கிராமம் வளராமலே உள்ளது. வரி வசூலிக்கவில்லை, கம்பெனிகள் அனுமதி வாங்கிக் கட்ட வில்லை. அதையெல்லாம் நோட்டீஸ் தந்து சரிப்படுத்திவருகிறேன். எங்கள் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பிணத்தை புதைத்து கல்லறை கட்டுகிறேன் என சென்ட் கணக்கில் இடத்தை ஆக்ரமிக்கிறார்கள். அதை முறைப் படுத்தவே போர்டு வைத்தது. எங்கள் கிராமம் வளர நடவடிக்கை எடுக்கிறேன். மண் எடுக்கிறேன், கம்பெனிகளை மிரட்டுகிறேன் எனச் சொல்வது சுத்தப் பொய். அரசியல் காரணங் களுக்காக என்மீது வீண் பழி சுமத்துகிறார்கள்'' என்றார்.

வருவாய்த்துறை அதிகாரிகளோ, "சமாதான கூட்டம் நடத்தியிருக்கோம், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திவருகிறோம்'' என்றார்கள்.

இதுகுறித்து தி.மு.க.வினர், "லாலாபேட்டை, முகுந்தராயபுரம் பஞ்சாயத்துகள் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி தொகுதிக்குள் வருகின்றன. அமைச்சர் காந்தியும், அமைச்சர் துரைமுருகனும் தலையிட்டாலே இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு வரும்''’என்கிறார்கள்.