"ஆடு திருடு போகல திருடு... போனமாதிரி கனவு கண்டேன்' என்ற டயலாக் போல ஆகிவிட்டது அந்த நடிகை தந்த புகார்.
"சுந்தரா டிராவல்ஸ்' படம் முலமாக அறிமுகமாகி மேலும் சில படங்களில் நடித்தவர் நடிகை ராதா. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாவிட்டாலும்... காதல் விவகாரம், மிரட்டல் என அவர் பெயர் ஊடகங்களில் அடிபட்டு வந்த வண்ணமே இருந்தது. அந்தவகையில் தொழில் அதிபர் பைசூல், அ.தி.மு.க. பிரமுகரான முனிவேல் என அவர்களைத் தொடர்ந்து அடுத்தபடியாக உதவி ஆய்வாளர் சிக்கியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் லோகையா தெருவில் வசித்து வரும் நடிகை ராதா, விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதன்படி, திருமணமாகி கணவரை பிரிந்து மகனுடன் சாலிகிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பில் வசித்துவரும் உதவி ஆய்வாளர் வசந்த்ராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, அந்த நட்பு காதலாக மாறியுள்ளது.
உதவி ஆய்வாளர், ராதாவை யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டார். அதற்குப்பிறகு இருவரும் கணவன்- மனைவி போல் ராதா வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். உதவி ஆய்வாளர் வசந்த்ராஜ் இரவுப் பணிக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு நடிகை ராதாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த சம்பவம் உதவி ஆய்வாளரின் மனைவிக்குத் தெரியவரவே, திருவான்மியூர் காவல்நிலையில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ், பேச்சு வார்த்தை மூலமாக சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு வடபழனிக்கு மாறிய வசந்த்ராஜ், மீண்டும் நடிகை ராதாவுடன் தொடர்பில் இருந்த நிலையில்... ராதாவுக்கான கார், வீடு என சகல வசதியும் செய்து தந்துள்ளார்.
தனது சொகுசு வாழ்க்கைக்கு துணைநின்ற காரணத்தால் இவரை விட்டுவிடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில், நடிகை ராதாவும் வசந்துடன் தனியாக வீட்டில் திருமணம் செய்ததை வைத்து, வசந்த்துக்கு தெரியாமலே ஆதார் கார்டில் தன்னுடைய கணவர் என பதிவு செய்துவிட்டார்.
இதனை அறிந்த வசந்த், நடிகை ராதாவிடம் கேட்கவே... இருவருக்கும் பிரச்சினை முற்றி யுள்ளது. அதற்கு அவர், ""எனக்கு நீங்கள் தாலி கட்டிய கணவர்தானே, அதனால்தான் நான் அனைத்து ஆவணங்களிலும் எனது கணவர் நீங்கள்தான் என்று மாற்றினேன்'' என்று கூறியுள்ளார். ""படவாய்ப்பு தருவதாக பல பேர் தினமும் வீட்டிற்கு வந்துபோகிறார்களே அவர்களின் பெயர்களை போட வேண்டி யதுதானே'' என்று இவர் கேட்கவே, இருவருக்கும் பிரச்சினை முற்றியுள்ளது. எப்படியாவது நடிகை ராதாவிடமிருந்து பிரிந்து விடவேண்டும் என வடபழனியில் இருந்து எண்ணூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் மாறியுள்ளார்.
இந்த நிலையில்தான் விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனில் "என்னுடைய இரண்டாவது கணவர் தினமும் சந்தேகப்பட்டு அடிப்பதாக' ராதா புகார் கொடுத்தார். இந்த புகாரை வடபழனி உதவி கமிஷனரிடம் கொண்டு செல்லவே, இருவரையும் நேரில் ஆஜராக சொல்லியிருந்தார்.
உதவி ஆய்வாளர் வசந்த்ராஜ் ஆஜரான நிலையில்... நடிகை ராதா ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அடுத்தநாளே நடிகை ராதா, ""என்னை சந்தேகப்பட்டு அடித்தது தவறு என்று வசந்த் மன்னிப்பு கேட்டதால், அந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்பாராத க்ளைமாக்ஸுக்குக் காரணம்... ""ஏற்கனவே தொழிலதிபர், அ.தி.மு.க. பிரமுகர் ஏமாற்றிவிட்டார் என்று நீங்கள் கொடுத்த வழக்கு உள்ளது. உங்களைத் தொடர்ந்து இப்படி ஏமாற்றுகிறார்கள் என்றால், எதற்காக மீண்டும் இதுபோன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள்?'' என்ற கேள்வியை உதவி கமிஷனர் முன்வைத்துள்ளார். ""இதன்படி பார்த்தால், அவர்கள் உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள் அவர்களை ஏமாற்றுவதாகத் தெரிகிறது. அவர்கள் உங்கள் மேல் வழக்கு தொடுத்தால் நீங்கள்தான் சிக்கிக்கொள்வீர்கள்'' என்று எச்சரித்ததால்தான் வழக்கு வாபஸாகியுள்ளது
இது தொடர்பாக பேசிய நடிகை ராதா, ""இந்த வழக்கின் மூலமாக அவருக்குப் பதவி உயர்வில் சிக்கல் ஏற்படும் என்ற காரணத்தாலே என்னுடைய வழக்கை வாபஸ் பெற்றேன். தவிர, போலீஸ் அழுத்தத்தால் இல்லை'' என்றார். ""அவர் எனக்கு எந்தக் காரும் வாங்கி தரவில்லை, அவருக்குத்தான் நான் கார் வாங்கித் தந்துள்ளேன். என்னுடைய வங்கிக் கணக்கிலும் அவருடைய பெயரைத்தான் கணவராகச் சேர்த்துள்ளேனே தவிர அவருடைய பணத்திற்காக இல்லை'' என்றார்.
இது தொடர்பாக பேசிய உதவி ஆய்வாளர் வசந்தராஜ், ""அவர் சொல்லுவது எல்லாமே தவறாகவே உள்ளது. போலீஸ் விசாரணை செய்த நிலையிலும், நான் பேசினால் அது சரியாக இருக்காது. ஏற்கனவே என்னுடைய குடும்பமே நொந்துபோயுள்ள நிலையில்... இதைப்பற்றிப் பேசினால் அது தவறாக இருக்கும். இதைப்பற்றிப் பேச விரும்பவில்லை'' என்றார்.