விருதுநகர் மாவட்டத்தில் வெடித்தபடியே இருக்கும் அந்த ஊரில், பிரபல தொழிலதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ‘டான்ஸ் ஸ்கூல்’ நடத்தி வருகிறார். சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ‘பேட்ச்’ பிரித்து, ஜும்பா, ஏரோபிக்ஸ் போன்ற நடனங்களையும் கற்றுத் தந்தது, அந்த நடனப் பள்ளி. ‘

அந்த நடனப்பள்ளிக்கு தன் 8 வயது மகனை அழைத்து வந்த ஈஸ்வரியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவர், போதைப்பழக்கத்தின் காரணமாக இறந்துபோக, இல்லற வாழ்க்கையை முற்றிலும் தொலைத்து நின்றார். இதனையறிந்த அந்த நடனப்பள்ளியின் ‘சக்திமிகு’ மாஸ்டர் வலை வீச, வேகமாக சிக்கிக்கொண்டார் ஈஸ்வரி. இந்த விவகாரம், இளம் டான்ஸர்கள் சிலருக்கு உறுத்தலாகத் தெரிந்தது. ஈஸ்வரியிடம் அவர்களும் ஆர்வத்துடன் "விண்ணப்பிக்க'’ சம்மதம் கிடைத்தது. கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களுக்குச் சென்ற இந்த இளம் கூட்டணி, தங்களை வெப்பமாக்கிக் கொண்டது.

இந்த வில்லங்கமான செயல், அந்த நடனப்பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவர, மாஸ்டர் வெளியேற்றப்பட்டு, பக்கத்து ஊரில் கடை விரித்தார். ஆனாலும், ஈஸ்வரியுடனான ‘நட்பு’ நீடித்தது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தன்னுடன் பயணித்தபோதெல்லாம் இளம் டான்ஸர்களுக்கு கரன்ஸிகளை வாரியிறைத்தார் ஈஸ்வரி. பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்துப் பார்த்த கதையாக, இளம் டான்ஸர்கள் இருவரது மனதில், பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

அவர்களில் ஒருவன், ‘"அன்புடையீர்!’ என்று ஆரம்பித்து, ‘உன்னுடைய அந்தரங்கப் படங்கள்கூட என்னிடம் உள்ளன. என்னுடைய தேவை ரூ.80,000 மட்டுமே... தயவுசெய்து கொடுத்துவிடு'’ என்கிற ரீதியில் தமிழில் தப்பும் தவறுமாக கடிதம் ஒன்றை எழுதி, அந்த ஊரின் மூன்றெழுத்து இனிஷியல் கொண்ட தெருவில் உள்ள ஈஸ்வரியின் வீட்டு வாசலில் போய் போட்டுவிட, ஈஸ்வரி வீட்டு சி.சி.டி.வி. கேமரா, அந்தக் காட்சியைப் பதிவு செய்துகொண்டது.

Advertisment

மிரட்டல் கடிதம், ஈஸ்வரி குடும்ப உறுப்பினர் ஒருவரின் பார்வையில்பட... மொத்த குடும்பமும் ஈஸ்வரிக்கு எதிராக கொந்தளித்தது. வெளியில் தெரிந்தால் ஊருக்குள் தலைகாட்ட முடியாதே’என்று ஆலோசித்து, ‘பிளாக்மெயில் பேர்வழிக்கு பணம் தருவதைக் காட்டிலும், காக்கிகளிடம் பணம் கொடுத்து, இந்த விவகாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்தது. ‘மிரட்டும் இளைஞனால் இனி எங்கள் குடும்பத்துக்கு தொந்தரவு வரக்கூடாது. எங்கள் பெயரும் வரக்கூடாது. சாத்தான் குளத்தில் நடந்ததுபோல் எதுவும் ஆகிவிடக் கூடாது. அதனால், அவனை அடித்துமுடித்து விரட்டி, பிறகு நாங்களே எங்களது புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். இதுதான் டீல்’ என்று பேசி முடித்தது.

பேரம் நடத்தியது போலவே, செல்வன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)’என்ற அந்த இளைஞன், அந்த ஊரின் டவுன் காவல் நிலையத்துக்கு இழுத்துவரப்பட்டான். என்னிடம் ஈஸ்வரியின் போட்டோவோ, வீடியோவோ இல்லை. காலேஜ் அரியர்ஸ் முடிப்பதற்கு பணம் தேவைப்பட்டது. என் வீட்டில் கேட்க விருப்பம் இல்லை. சும்மா ஒரு கடிதம் எழுதி ஈஸ்வரி வீட்டு வாசலில் போட்டேன்.’ என்று காக்கிகள் கையை ஓங்குவதற்கு முன்பாகவே ஒத்துக்கொண்டான். ஆனாலும், ஈஸ்வரி குடும்பத்தின் கோபத்தை மனதில் நிறுத்தி, செல்வனின் சாதியைச் சொல்லி சைக்கிள் டியூப்பால் அடி பின்னியெடுத்தனர். அவனோ நட்பை மதித்து, கூட்டாளி யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. அடியாள்’ வேலை பார்த்த சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தின் சார்பு ஆய்வாளரைச் சந்தித்து, ‘"ஈஸ்வரி புகார் வாபஸ் வாங்கப்படும் எனச் சொல்கிறார் களே?''’என்று கேட்டோம். வேகமாக அவர் மறுத்தார். ஆனாலும், ஈஸ்வரி குடும்பத்தின் புகார் திரும்பப் பெறப்பட்டது.

ஈஸ்வரியைப் போலவே, ஆண் துணை இல்லாத வேறொரு பெண்ணிடமும், தொகை கேட்டு மிரட்டல் கடிதம் எழுதி, அந்தப் பெண்ணின் டூ வீலரில் வைத்துவிட்டான் செல்வன். துணிச்சல் மிகுந்த அந்தப் பெண்ணிடம் புகார் பெறப்பட்டு வழக்குப் பதிவாகி, கைது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

Advertisment

செல்வன் குடும்பத்தினர் நம்மிடம், "எங்கள் வீட்டில் வசதியா இல்லை? சொத்து, சுகம் என்று அத்தனையும் இருக்கிறது. எதற்காக அவன் பிளாக்மெயில் செய்யவேண்டும்? இளைஞர்களுக்கு வலைவீசி பணமும் கொடுக்கும் பெண்களால்தான் பிரச்சினையே'' என்று பிள்ளைப் பாசத்தில், தங்கள் தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

கள்ளத்தனமான பாலியல் தொடர்பு வைத்திருப்பவர்களைக் குறிவைத்து பிளாக்-மெயில் செய்வது கேடினும் கேடான குற்றச் செயலே!