திராவிடர் கழக இளைஞரணியின் மாநில மாநாடு, கடந்த ஜூலை 30-ஆம் தேதி, அரியலூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதோடு, பட்டிமன்றம், பல்வேறு தலைப்புகளில் உரை வீச்சு ஆகியவற்றுடன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில், இளைஞரணியின் கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. பேரணியை திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் தொடங்கிவைத்தார். மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரையாற்றினார். தமிழ்நாடு போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், அரியலூர் எம்.எல்.ஏ. வழக்குரைஞர் கு.சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கிய வாழ்த்துரையில், "பள்ளிப் பருவத்திலே என்னுடைய தந்தையாரோடு திருச்சியில் பெரியார் பங்கேற்ற ஊர்வலத்தைப் பார்த்தபொழுது ஏற்பட்ட அந்த உணர்வு இன்றைக்கு எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. என்னுடைய தந்தையார் மறைந்த எஸ்.சிவசுப்பிர மணியம், வழக்குரைஞராக அரியலூரில் பணியாற்றிய நேரத்தில், பெரியாரை அழைத்து வந்து ஒரு மிகச்சிறப்பான மாநாட்டினை நடத்தினார்கள்.
2011ஆம் ஆண்டு தொடக்கக் காலகட்டத் தில், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் பொழுது. சட்டப்பேரவையில் இவ்வளவு பேர் தமிழர்கள் உள்ளே வருவதற்குக் காரண மாக இருந்தவர் தந்தை பெரியார் என்று சொன்ன தைக் கூட நீக்கிய ஒரு காலகட்டமும் இருந்தது. ஆனால், இன்றைக்கு ஒன்றிய அரசின் பிரதம அமைச்சர் வந்திருக்கின்ற மேடையில், இது திராவிட நாடு, இது ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்லுகின்ற முதலமைச்சர் தலைமையில் நாம் இருக்கின்றோம். மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, எங்கே வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கே எல்லாம் ‘திராவிட மாடல்’, ‘திராவிட மாடல்’ என்று உச்சரித்து, இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. கொள்கை ரீதியாக, இந்துத்வாக் கொள்கைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என்று துணிந்து அறிவித்து, செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தலைவராக நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார்'' என்று பேசினார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தனது உரையில், "இந்த மேடை சிறப்புக்குரிய மேடை. அடையாளம் தெரியாமல் இருந்தவர்களை, அடையாளப்படுத்திய மேடை. எனது அப்பா, சித்தப்பா இடுப்பில் இருந்த துண்டை, தோளில் போட வைத்த மேடை. கணேசனையும் மேடையில் பேச வைத்த இயக்கம் திராவிடர் இயக்கம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வியில், சாலையில் நடக்க என்று அனைத்து உரிமைக்கும் அடித்தளமிட்ட தலைவர் பெரியார். அதைத் தொடர்ந்து நடத்திக்காட்டியவர் கலைஞர்'' என்றார்.
அம்பேத்கர் பிறந்த மண்ணில், அம்பேத்கர் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடியாதபோது, தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரை பல்கலைக்கழகத்திற்கு வைத்தது தலைவர் கலைஞர் என்பதை விவரித்து, ஜாதிப் பெயர் கொண்ட தெருக்கள் இருந்த மண்ணில், சமத்துவ புரங்கள் கண்ட கலைஞர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் கலைஞர். அதற்கு காரணம், பெரியாரின் இலட்சியங்களை நிறைவேற்றுவதே அவரின் குறிக்கோள். இன்றும் பெரியா ரின் லட்சியங்களை நிறைவேற்ற, முதல்வர் கிடைத் திருக்கிறார் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றுவதற்கு முன், அதே மேடையில் ஒரு சுயமரியாதைத் திருமணம், ஒரு தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்திவைத்தார். பின்னர் தனது உரையில், "வருகின்றபோது 89 ஆக இருந்த எனது வயது, மாநாட்டில் இருந்து திரும்பும் நேரத்தில் 29 ஆகக் குறைந்து இருக்கும்'' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து தனது பேச்சில், "பெரியார் என்பவர் மருந்து, தீர்வு. அவர் கட்டாயம் தேவைப்படு வார். அவரின் தத்துவத்தை, அதிகாரப்படுத்த முதல்வருக் கெல்லாம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி அமைந்திருக்கிறது. எல்லோரும் படிக்கவேண்டும் என்பது திராவிடம்; எல்லோரும் படிக்கக்கூடாது என்பது ஆரியம். இன்று ஆளுநர் பஜனை மடம் நடத்துவதுபோல் நடத்தி வருகிறார். அவர் தொடர்ந்து சனாதனமா? திராவிடமா? என்று விவாதத்தை கிளப்புகிறார்.
சமஸ்கிருதம் படித்தால்தான் ஒரு காலத்தில் மருத்துவம் என்றவர் கள், இன்று நீட் என்கிறார்கள். குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த மகிழ்ச்சியில் இருந்தால், இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை என்கிறார்கள். இந்த சூழ்ச்சியை தமிழ்நாடு மட்டும்தான் கண்டறிய முடியும். காரணம், நாம் அணிந்திருப்பது பெரியாரின் கண்ணாடி, நுண்ணாடி. இந்த இயக்கம் பகுத்தறிவு இயக்கம்'' எனக் குறிப்பிட்டவர், இந்த திராவிடர் இயக்கம் எதையெல்லாம் சாதித்து இருக்கிறது என்பதை விரி வாக எடுத்துரைத்து, புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னதைப் போல இளைஞர்களுக்கு தாங்கள் ஏற்றுக் கொண்ட இயக்கத்தின் லட்சியம் மாத்திரம் தெரிந்தால் போதாது, அதை அடைவதற்கான நடைமுறை களைத் தெரிந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அரியலூரில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணி யும், ஒலித்த சமூக நீதிக்குரல்களும், இந்துத்வ சக்திகளுக்கு சவுக்கடியாக இருந்திருக்கும்.