aa

(112) "மக்கள் விருப்பம்...' பகல் கனவாக்கிய விஜயகாந்த்!

விஜயகாந்த்தின் மண்டப இடிப்பு, மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. "தேவையான திட்டங்களுக்காக ஒரு அரசு நிலங்களையோ, இடங்களை யோ எடுத்துக் கொள்ளலாம். அதற்கான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற சட்டப்படிதானே விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடித்தது தி.மு.க. அரசு' என்று பலர் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன்.

"வேறு வடிவத்தில் பாலம் கட்டினால் மற்றவர்களின் பில்டிங், கடைகள் இடிபடுமே, ஆகமொத்தம் எதையாவது இடித்துத்தானே பாலம் கட்ட முடியும். இதுல எங்க தப்பு இருக்கு?' என்று பேசியதையும் கேட்டிருக்கிறேன்.

Advertisment

மீண்டும் சொல்கிறேன். சாதுரியமான சென்ட்டி மெண்ட் அணுகுமுறையால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

பலமானவர்களைக் கூட பலவீனப் படுத்திவிடலாம், பகைவர்களைக் கூட நண்பனாக்கி விடலாம். அரசியலில் இப்பொழுதும் அதுபோல நடந்துகொண்டு தான் இருக்கிறது.

எத்தனையோ மேடைகளில் விஜயகாந்த் "எனக்கு பணம் முக்கியமல்ல. மக்கள்தான் முக்கியம். மக்கள் கொடுத்ததை மக்களுக்காகக் கொடுக்கிறேன். ஒவ்வொரு தொண்டன் வீட்டிற்கும் வந்தால் ஒருவேளை சோறு போட மாட்டீங்களா?'' இப்படியெல்லாம் நிறைய பேசியிருக்கிறார்.

Advertisment

திருமண மண்டபம் இடிக்கப்பட்ட பிறகு அவருடைய தியாக உணர்வும், மக்களுக்காகவே வாழ்கிறேன் என்ற உண்மையும் கொஞ்சம் பின்னுக்குப் போய்விட்டது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சென்டிமெண்ட் வியூகத்தை அவர் கையில் எடுத்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். விஜயகாந்த்தின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்திருக்கும்.

அப்படி அமைத்துக் கொள்ளாததால் 2006ஆம் ஆண்டிலிருந்து 2011வரை அவரது அரசியல் பயணம் எழுச்சி பெற்றதா, இறங்கிப் போனதா என்பதை அவரால் கணிக்க முடியவில்லை.

அப்படி கணிக்கக்கூடிய வாய்ப்பு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது வந்தது. அந்தத் தேர்தலில் அ.தி. மு.க.வுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். அவர் கூட்டணி வைத்திருக்கக்கூடாது என்பது என் கருத்து.

2006-ல் அவர் மட்டும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 2011-ல் தனியாக நின்று அவரோடு சேர்ந்து எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெறுகிறார்கள் என்று சோதனை செய்து பார்த்திருக்க வேண்டும். 2006 தேர்தலைவிட வாக்கு சதவீதம் அதிகமா யிருக்கிறதா, இல்லை குறைந்திருக்கிறதா என்று தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அதை செய்யத் தவறி விட்டார் விஜய காந்த்.

அந்த நேரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு பல விதங்களில் கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது. குடும்ப ஆட்சி, மின்சாரத் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி, இலங்கைத் தமிழர் படுகொலை என்று தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தார்கள். அந்த நேரத்தில் தனியாக நின்றிருந்தால் தி.மு.க. எதிர்ப்பு ஓட்டு விஜயகாந்த்தின் கட்சிக்கு அதிகமாக வந்திருக்கலாம். அதை பரிசோதனை செய்து பார்க்க விஜயகாந்த் தவறிவிட்டார்.

aa

நாம் தமிழர் கட்சியை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் அன்புத் தம்பி சீமான் கூட கூட்டணி சேர்ந்து எம்.எல்.ஏ. ஆக வேண்டும், எம்.பி. ஆக வேண்டும் என்று ஆசைப்படாமல் தனித்து நின்றே தனது பலத்தை அதிகரித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய வளர்ச்சி மக்களுக்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் விஜயகாந்த் ஐந்து ஆண்டுகள்கூட பொறுத்துக்கொள்ளவில்லை. தன் பலத்தை அறிந்து கொள்ளாமல் கூட்டணியில் கரைந்துவிட்டார். அவர் முதலமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பும், கனவும் அத்தோடு முடிந்துவிட்டது.

அவர் ஏன் கூட்டணி முடிவை எடுத்தார்? அவர் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லையா? மக்கள் மேல் நம்பிக்கை இல்லையா?

தனியாக நின்று பல தொகுதிகளில் வெற்றி பெற கூட்டணியின் தயவு இல்லாமல் கூட எதிர்க்கட்சித் தலைவராக ஆகியிருக்கலாமே? அந்த நம்பிக்கைகூட விஜயகாந்த்துக்கு இல்லாமல் போனது ஏன்? தி.மு.க.வுக்கு இருந்த எதிர்மறை இமேஜை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டது ஏன்?

யாருடைய நிர்ப்பந்தத்தால், இல்லை எந்த அழுத்தத்தினால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தார். ஒருவேளை அ.தி.மு.க. வந்தாலும் பரவாயில்லை தி.மு.க. வரக்கூடாது என்று நினைத்துவிட்டாரா?

எதிரியை தோற்கடித்து வேறு ஒருவரை வெற்றியடைய வைப்பது அல்ல வெற்றி. எதிரியை வீழ்த்தி, தான் வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றி. அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. தி.மு.க. தோல்வி அடைவதே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி மட்டும் போதும் என்று நினைத்து விட்டாரோ விஜயகாந்த் என்றுதான் எனக்குத் தோன்றியது.

தி.மு.க. முதன்முதலாக சந்தித்த தேர்தலில் 15 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றார்கள். அதற்கு அடுத்து வந்த தேர்தலில் 50க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு கிடைத்தனர். அதற்கு அடுத்து 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்தான் ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. இது அனைவருக்கும் தெரிந்த அரசியல் வரலாறு.

அதே போன்ற முயற்சியை விஜயகாந்த் எடுத்துப் பார்த்திருக்க வேண்டும். அதைக்கூட விட்டுவிடலாம்... 2011ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தே.மு.தி.க. விஜயகாந்த்துடன் சேர்த்து 29 பேர் சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். பலமுறை ஆட்சியில் இருந்த தி.மு.க.வுக்கு கிடைக்காத வாய்ப்பு தே.மு.தி.க.வுக்கு கிடைத்தது.

மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு நல்ல, நேர்மையான துணிச்சலான தவறுகளைத் தட்டிக் கேட்கத் தயங்காத ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியிருக்கிறார். கறை படாத கரங்களுக்கு சொந்தக்காரர் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியிருக்கிறார். மக்களுக்காக உண்மையாக உழைக்கக்கூடிய ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியிருக்கிறார்.

தான் நடித்த திரைப்படங்களில் நல்ல நல்ல கருத்துகளை சொன்ன ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகியிருக்கிறார் என்றெல்லாம் விஜயகாந்த்தை பாராட்டினார்கள். ஒரு புதுவிதமான ஆரோக்கியமான அரசியல் சட்டமன்றத்தில் அரங்கேறப்போகிறது என்று மக்கள் நம்பினார்கள்... எதிர்பார்த்தார்கள்.

அ.தி.மு.க.வுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வார்கள். அதனால் நாட்டிற்கும் நல்லது நடக்கும், தே.மு.தி.க.விற்கும் ஒரு வலிமை ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள்.

தி.மு.க.வினர் கூட தாங்கள் எதிர்க்கட்சி ஆக முடியவில்லை... விஜயகாந்த் ஆகிவிட்டார். இனிமேல் தமிழ்நாட்டு அரசியல் வேறு திசையில் பயணிக்கப் போகிறது என்று நினைத்தார்கள்.

ஆனால் அத்தனையும் பகல்கனவாகிப் போனது.

அதற்குக் காரணம்...?

(வளரும்...)