/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan_56.jpg)
(75) அஜித் இல்லன்னா... ஆள மாத்துங்க...!
விஜயகாந்த்துக்கு முதன்முதலாக நான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்து வாசகங்கள்!
முயற்சிகளை வேராக்கி
எதிர்ப்புகளை தூளாக்கி
திரையுலகில் ஆலமரம் ஆனாய்
எங்கள் இதயமெலாம் இனிக்கிறது தேனாய்!
இந்த வாசகங்கள் விஜயகாந்த் புகைப்படங்களுடன் போஸ்டராக அச்சடிக்கப்பட்டு சுவர்களில் ஒட்டப்பட்டன. ராஜாபாதர் அலுவலகத்திலும் ஒரு போஸ்டர் ஒட்டப் பட்டது. விஜயகாந்த் போஸ்டரை பார்த்தார்... பார்த்துக்கொண்டேயிருந்தார். பின், என்னைப் பார்த்தார். அவர் முகத்திலே ஒரு பூரிப்பு.
"நாலே வரிகள்ல என்னைப் பத்தி சொல்லிட் டீங்களேண்ணே'' என்றார்.
அச்சடிக்கப்பட்ட வேறு வாசகங்கள் அடங்கிய சில போஸ்டர்களை காண்பித்தோம்.. பார்த்தார்.
எளியோரின் கண்ணீரைத் துடைக்கும்போது கரும்பு மனம் உனக்கு
எதிரிகளின் சூழ்ச்சிகளை உடைக்கும்போது இரும்பு மனம் உனக்கு
பசியோடு வரும்போது அன்னை மனம் உனக்கு
தவிப்போருக்கு துணைபோகும் தங்க மனம் உனக்கு
இப்படி பலவிதமான வாசகங்களுடன், பலவிதமான போஸ்டர்கள். ஒவ்வொரு போஸ் டரையும் படித்துவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்த விஜயகாந்த்தின் கண்களில் ஒரு ஒளி. அந்தப் பார்வையில் கொட்டிக் கிடந்தது அளவில்லாத அன்பும், பாசமும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan1_56.jpg)
பிறந்தநாள் போஸ்டரில் நான் எழுதிய "சொக்கத் தங்கம்' என்ற பெயரிலே விஜயகாந்த் அவர்கள் நடித்த படமும் வந்தது. திரைநீதி செல்வம் லிடைமண்ட் பாபு -சிங்காரவேலு
இந்த மூன்றுபேரும் சினிமா பி.ஆர்.ஓ.க்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்லி கடந்து விட முடியாது.
திரைநீதி செல்வம் திராவிட சிந்தனையாளர். சுய மரியாதை அவர் உடன்பிறந்தது. டைமண்ட் பாபு சினிமா உலகின் கலைக்களஞ்சியம், பிலிம் நியூஸ் ஆனந்தனின் புதல்வர். பெரிய பெரிய தயாரிப்பாளர்களுக்கும், பெரிய பெரிய ஹீரோக்களுக்கும் மிகமிக வேண்டியவர்.
சிங்காரவேலு ஒரு பிரபலமான சினிமா பத்திரிகையில் பணியாற்றியபோது விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இவர்களுடனும் என்னுடனும் நெருக்கமானவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிப்போனவர்.
விஜயகாந்த்தின் வரலாற்றில் இந்த மூவருக்கும் முக்கியமான இடம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. விஜயகாந்த் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பையோ, அறிக்கைகளையோ, ஊடகத்திடம் விரைந்து சேர்ப்பதிலும், ஊடகத்தினரை ஒருங்கிணைப்பதிலும், அதன்மூலம் விஜயகாந்த்தின் ஒவ்வொரு மூவ்களையும் மக்கள் அறியச் செய்ததிலும் இவர்கள் மூவருக்கும் முக்கிய இடம் உண்டு.
1983ஆம் ஆண்டு விஜயகாந்த், இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய பேரணி, உண்ணாவிரதம் சிறப்பாக, மிக எழுச்சியாக நடைபெறுவதற்கு முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், உண்ணாவிரதம் முடிந்த பிறகு "நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.
விஜயகாந்த் அவர்கள் என்னை எழுதச் சொன்னார். அதில் ஒரு பகுதி...
"இலங்கையிலே நடந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி நான் இருந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் இன உணர்வு கொண்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென இரு தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தேன். இன்று அந்த அழைப்புக்கு எப்படி நன்றி சொல்வதென்று தவித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி சொல்ல வார்த்தைகளே கிடைக்கவில்லை என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் நான் நன்றி சொல்ல விரும்பவில்லை. காரணம் நீங்கள் வேறு, நான் வேறு என்று என்றுமே நினைத்ததில்லை. தமிழ் உணர்வு மங்கி மறைந்துவிட்டதோ என்று சில நேரங்களில் நான் நினைத்ததுண்டு. அந்த நினைப்பை பொய்யாக்கும் விதத்தில் உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்டீர்கள்.
இலங்கை தமிழர்களுக்காக நாம் எழுப்பிய குரலின் சுருதி குறைந்துவிட்டதோ என்றுகூட நான் யோசிப்பேன். உடலில் குருதி இருக்கும்வரை சுருதி இருக்கும் என்பதை உண்மையாக்கும் விதத்தில் கலந்துகொண்டீர்கள். கட்சி வேறுபாடுகளும், ஜாதிகளும், மதங்களும் தமிழர்களின் ஒற்றுமை உணர்வுக்கு குறுக்குச் சுவராக அமைந்துவிட்டதோ என்றுகூட எண்ணி யிருக்கிறேன். அந்த எண்ணம் தவறோ என்று நினைக்குமளவுக்கு கலந்துகொண்டீர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan2_35.jpg)
பசிக்கு உணவூட்டிய கைக்கு வயிறு நன்றி சொல்வதில்லை. இரண்டுமே உடலின் உறுப்புகள். அதேபோல்தான், உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட உங்களுக்கு நான் நன்றி சொல்லவில்லை. காரணம் நீங்களும் நானும் தமிழ்த்தாயின் பிறப்புகள். பத்து விரல்களும் சேர்ந்து இயங்கினால்தான் நாதஸ்வரத்தில் நல்ல இசை பிறக்கும். அதுபோல நமது மொத்தக் கரங்களும் சேர்ந்து உயர்ந்ததால்தான் உண்ணாவிரதத் திற்கு மாபெரும் ஆதரவு கிடைத்தது. அதனால் நமக்கு நாமே நன்றி சொல்லத் தேவையில்லை என்று கருதி, உங்களுடைய ஒத்துழைப்பை மட்டும் நினைத்துப் பார்க்கிறேன். ஒற்றுமை உணர்வு வளரவேண்டும் என்பதை விட, வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் அனைவருடைய மன உறுதியையும், என் மன்றத்தினரின் கடும் உழைப்பையும் நான் பெரிதும் மதிக்கிறேன்.
காவல்துறையைச் சேர்ந்தவர்கள் நமக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற நினைப்போடு மட்டுமல்லாமல், இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்ற உணர்வோடும் கலந்துகொண்டது போல்தான் எனக்குத் தோன்றியது.'
இந்த அறிக்கைக்குள்ளே எத்தனைவித உணர்வுகள், எத்தனை கோணங்களில் விஜயகாந்த்தின் பார்வை இருக்கிறது என்பதை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்த நட்பு என்னுடையது. அந்த உரிமையை உளப்பூர்வமாக எனக்குக் கொடுத்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-11/alikhan-t_4.jpg)