/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan_38.jpg)
(57) ரஜினி எனும் மந்திரவாதி!
விஜயகாந்த் நடித்த படம் "காவியத் தலைவன்'. ஆபாவாணன் தயாரிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
படம் ஷூட்டிங் ஆரம்பித்து சில மாதங்கள் இடைவெளி விட்டுவிட்டார்கள். மீண்டும் ஆரம்பிக்கும்போது "ஏழை ஜாதி' படத்திற்கு விஜயகாந்த் கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை "காவியத் தலைவ'னுக்கு கொடுத்துவிட்டார் இப்ராகிம் ராவுத்தர்.
"ஏழை ஜாதி' படத்தின் தயாரிப்பாளரான கர்நாடக அரசின் அன்றைய அமைச்சர் ரமேஷ் கோபத்தால் கண் சிவந்துபோனார். "என் படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை எப்படி வேறு படத்திற்கு மாற்றிக் கொடுக்கலாம்' என்று கொந்தளித்துப் போனார். படத்தை சீக்கிரம் முடித்து வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு. "காவியத் தலைவன் உங்களுக்கு முன்பே ஆரம்பித்த படம். அதை முடித்துக் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்' என்று ரமேஷ் சாரை சமாதானப் படுத்தினார் இப்ராகிம் ராவுத்தர்.
அவரிடம் சமாதானம் ஆவது போல காட்டிக் கொண்டாலும் ரமேஷ் சார், உண் மையிலே சமா தானம் ஆகவில்லை. அவருடைய கோபத்தை என்னிடம் காட்டிக்கொண்டேயிருந்தார். "ஏழை ஜாதி' ஷூட்டிங், டப்பிங் மற்றும் படம் சம்பந்தமான வேலைகள் முடிந்து ரீரிகார்டிங் பண்ணுவதற்காக இளையராஜா அண்ண னைப் போய்ப் பார்த்தேன்.
"உன் படத்துக்கு முன்னாலேயே "கோயில் காளை' படத்துக்கு ரீரிகார்டிங் பண்றதா ஒத்துக் கிட்டேன்'' என்றார்.
"கோயில் காளை' படமும் விஜயகாந்த் நடித்ததுதான். அண்ணன் கங்கைஅமரன் இயக்கியிருந்தார்.
ரமேஷ் சாரிடம் போய் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னேன். "ஏழை ஜாதி' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலாம் என்று நினைத்திருந்த ரமேஷ் சார், முதலில் அதிர்ச்சியடைந்தார். பிறகு அது ஆத்திரமாக மாறியது. அதை என் மீது காட்டினார்.
"நம்ம படம்தான முதல்ல ஆரம்பிச்சது. அதை இளையராஜாகிட்ட சொல்ல வேண்டியதுதான?'' என்றார் கோபமாக.
"சொன்னேன் சார். அவரு "கோயில் காளை' படத்தை முதல்ல பண்றதா சொன்னாரு'' என்றேன்.
"அவரோட தம்பி கங்கைஅமரன் படம்கிறதால அப்படி முடிவெடுத்தாரா?'' என்றார்.
"இல்ல சார். ரீரிகார்டிங் பண்ணணும்னு சொல்லி நமக்கு முன்னால அவங்கதான் பேசியிருக்காங்க'' என்றேன்.
என்னிடம் எதுவும் பேசாமல் இப்ராகிம் ராவுத்தருக்கு போன் செய்தார்.
"ராவுத்தர் சார். காவியத் தலைவன் படம் முதல்ல ஆரம்பிச்சதுன்னு சொல்லி "ஏழை ஜாதி' கால்ஷீட்டை அவங்களுக்கு கொடுத்தீங்க. "கோயில் காளை'க்கு முன்னாலயே "ஏழை ஜாதி' படத்தை ஆரம்பிச்சுட்டோம். முதல்ல என் படத்துக்குத்தான் ரீரிகார்டிங் பண்ணணும். நீங்க ஏன் அதை இளையராஜாகிட்ட பேசலை'' என்றார்.
"அவர் முடிவு பண்ணதுக்கு அப்புறம் எப்படி சார் பேச முடியும்'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.
கோபத்தில் பட்டென்று போனை வைத்தார் ரமேஷ் சார். அரசியல்வாதி, அமைச்சர் வேறு.
விஜயகாந்த், இளையராஜா அண்ணனிடம் பேசத் தயங்கியதற்கு முக்கியக் காரணம் "கோயில் காளை' படமும் விஜயகாந்த் நடித்ததுதான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan1_38.jpg)
"இதுவும் உன் படம்தானே விஜி'' என்றார் இளையராஜா அண்ணன்.
விஜயகாந்த்தால் பதில் சொல்ல முடியவில்லை.
பொங்கலுக்கு "கோயில் காளை'தான் ரிலீசானது.
அந்தப் பொங்கல் ரமேஷ் சாருக்கு இனிக்கவில்லை.
என்னை அழைத்தார்.
"பிரஸ்காரங்களையெல்லாம் கூப்பிடப் போறேன். கர்நாடகாவுல இருந்து ஒரு தமிழ்ப்படம் எடுக்கலாம்னு வந்தேன். என் படத்தை லேட் பண்ணி பிரச்சினை பண்ணிட்டாங்கன்னு பேட்டி குடுக்கப் போறேன்'' என்றார் கோபமாக.
நான் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தினேன்.
"விஜயகாந்த்திடம் உங்களுக்கிருந்த நட்புனாலதான் சார் படம் எடுக்க வந்தீங்க. நீங்க பேட்டி குடுத்தா அவரைக் காயப்படுத்தற மாதிரி ஆயிரும். இளையராஜா அண்ணனையும் காயப்படுத்தின மாதிரி ஆயிரும் சார். வேணாம் சார்'' என்று கேட்டுக்கொண்டேன். அவரும் சமாதானம் ஆனார்.
ஆனால் பட ரிலீசுக்கு முதல்நாள் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு படப் பெட்டியை கொடுத்துவிட்டு பெங்களூரு போய்விட்டார். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் "ஏழை ஜாதி' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அவர் எந்த விளம்பரமும் செய்யவில்லை. செய்ய விரும்பவில்லை. அவர் கோபத்தில் எடுத்த முடிவு அது. அப்பொழுது விளம்பரம் என்பது செய்தித்தாள்கள், போஸ்டர்கள் தான். அந்த விளம்பரங்கள் இல்லாமல் "ஏழை ஜாதி' படம் ஓடியது. இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையிலும் படம் வெற்றி பெற்றது.
தமிழக மக்களுக்கு விஜய காந்த் மீது இருந்த ஈர்ப்பை அதிகப்படுத்தியது.
"ஏழை ஜாதி' வெளி யாகி ஒரு மாதத்திற்குப் பிறகு தற்செயலாக ஏ.வி.எம். ஸ்டுடியோ வில் விஜயகாந்த் தும் நானும் ஏ.வி.எம். சரவணன் சாரைப் பார்த்தோம்.
அப்பொழுது சரவணன் சார் சொன்னார்.
"நல்லா விளம்பரம் பண்ணியிருந்தா ஏழைஜாதி ஒரு ரெவல்யூசன் படமா ஆயிருக் கும்.''
அதைக் கேட்கும்போதே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
"ஏழை ஜாதி' படத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் போல பல இயக்குநர்களுக்கு விதவிதமான, இடையூறுகள், தடைகள், பிரச் சினைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும். அவையெல்லாம் ரசிகர்களுக்குத் தெரிவதில்லை. ஏன் சினிமாவில் இருப் பவர்களுக்கே தெரிந்து கொள்ள வாய்ப் பில்லை. இவையெல்லாம் தாண்டி ஒரு படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயம் இயக்குநர்களுக்கு. வெற்றி யடைந்தவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். பல பிரச்சினைகளால் நினைத்த வெற்றியை அடைய முடி யாத இயக்கு நர்கள் யாரிடம் போய் அழுவார்கள்?
நான் எழுதிய, இயக்கிய ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. என் படங்களில் மட்டும் அரசியல் இல்லை. நான் இயக்கிய ஒவ் வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருந்தது. எனது அனுபவத்தை சொல்வது, புதியவர்கள் எச்சரிக்கை உணர்வோடு இருப்பதற்காக பயன்பட லாம், அதற்காகத்தான் இதையெல்லாம் எழுதுகிறேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan2_24.jpg)
நட்புக்காக விட்டுக் கொடுப்பது, அன்புக்காக விட்டுக் கொடுப்பது. நமக்கு வாய்ப்புக் கொடுத்தார்களே என்ற நன்றிக் கடனுக்காக விட்டுக் கொடுப்பது.. விசுவாசமில்லாதவன் என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்ற நியாயமான அச்சத்தால் விட்டுக் கொடுப்பது...
-இப்படி சினிமாவில் பலர் விட்டுக் கொடுத்திருப்பார்கள். விட்டுக்கொடுத்ததினால் தன் சுயத்தையே இழந்திருப்பார்கள். சுயத்தை இழந்ததால் கிடைக்கவேண்டிய வெற்றியை இழந்திருப்பார்கள். அடைய வேண்டிய சிறப்பான எதிர்காலத்தையே இழந்திருப்பார்கள்.
அப்படி ஏற்படும்பொழுதெல்லாம் நம்முடைய பின்னடைவுக்கு அவர்தான் காரணம், இவர்தான் காரணம் என்று வேறு யாரையோ சொல்வோம். அவர்கள் மீது கோபப்படுவோம்.
ஆனால் பக்குவம் வந்த பிறகுதான் புரியும். அதற்கு காரணம் அவர்கள் அல்ல... நம்முடைய பின்னடைவுக்கு நாம்தான் காரணம் என்று. எனது திரைப்பயணத் திலும், அரசியல் பயணத்திலும் இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி சார்...
அவருடைய சாதனைகளை எப்படிப் பட்டிய லிடுவது. "எந்த வயதிலும் இமாலய வெற்றி கொடுக்க என்னால் முடியும்' என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர். அன்று கர்நாடகாவில் கண்டக்ட ராக விசிலடித்துக்கொண்டிருந்தார். இன்று அவர் திரையில் தோன்றியதுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் விசிலடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
"ஆறிலிருந்து அறுபது வரை' அவர் நடித்த படம். ஆனால் அவரை நேசிப்பவர்கள் அவருக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் ஆறிலிருந்து அறுபது வரை மட்டுமல்ல... மூன்று வயது குழந்தையும் அவர் முகம் பார்த்து மகிழ்கிறது. இருபது வயது இளைஞனுக்கு அவரைப் பார்த்தாலே நரம்பெல்லாம் முறுக்கேறுகிறது. எழுபது வயது முதியவர்களுக்கு அவரைப் பார்த்தால் இளமை திரும்பி விடுகிறது. அவருக்கு எத்தனை வயதானாலும் அவருடைய சுறுசுறுப்பு குறைவ தில்லை. அவரைப் பார்ப்பவர்களுக்கு எத்தனை வயதானாலும் அவர் மேல் உள்ள ஈர்ப்பும் குறையவில்லை.
ஒரே வரியில் சொல்வதென்றால் தமிழர்களை மயக்கிய மந்திரவாதி. ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தால் கட்டுப்பட்டு கிடப்பவர்கள் எத்தனையோ கோடி. அது அவருக்கு இறைவன் கொடுத்த வரம்.
அவர் நடித்த படங்களுக்கு எழுத வேண்டும். அவர் படத்தை இயக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் நினைத்திருப்பார்கள். ஆனால் எல்லோருக்குமே அந்த வாய்ப்பு கிடைத்து விடவில்லை.
எனக்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது... ஆனால்!
(வளரும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/alikhan-t_3.jpg)