(114) பழம் நழுவிப் பாழானது!
விஜயகாந்த்தின் உழைப்பால், அவருடைய மக்கள் செல்வாக்கால் சட்டமன்ற உறுப்பினர்களான எட்டுபேர் எட்டப்பர்களாக மாறினார்கள். தொகுதி வளர்ச்சிக்காக என்று கூறி ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வை. ஆதரித்தார்கள். இது விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கையில் அவரே எதிர்பாராத ஒன்று. ஆனால் நான் எதிர்பார்த்த ஒன்று. காரணம், அவர் விசுவாசிகளை நம்புவதை விட வியாபாரிகளை நம்பிவிட்டார். அதனால்தான் முதுகில் தட்டிக் கொடுத்து வளர்த்துவிட்ட அவரையே, முதுகில் குத்திவிட்டுப் போனார்கள். ஹீரோக்கள் தோற்பதும், வில்லன்கள் ஜெயிப்பதும் அரசியலில் சாதாரணம்.
சினிமாவில் வில்லன்களிடம் தோற்காத விஜய் காந்த், அரசியலில் வில்லன்களிடம் தோற்றது அவரது இதயத்தில் ஆறாத ரணமாகிவிட்டது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தே.மு.தி.க. வெற்றிபெற்றிருந்தால் அவரது ரணம் ஆறியிருக்கும். அப்படி ஒரு அதிசயம் நடக்காமலே போய்விட்டது.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. விஜயகாந்த்தை தேடி வெற்றியும் தோல்வியும் ஒரே நேரத்தில் வந்தபோது, தோல்வியைத் தேர்ந்தெடுத்தார் விஜயகாந்த். தேடி வந்த தி.மு.க. கூட்டணியை விட்டு விட்டு, மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்த அரசியல் அசம்பாவிதத்தைத்தான் சொல்கிறேன்.
கசப்பான அனுபவம் ஏற்பட்ட கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்வது பாவமான காரியம் அல்ல. இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் இன்றுவரை நடந்துகொண்டிருப்பதுதான். மிசா சட்டம் கொண்டு வந்து கொடுமைப்படுத்திய காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி வைத்தது.
எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தே.மு.தி.க.வை விட்டுப் பிரிந்து அ.தி.மு.க.வின் அரவணைப்பில் இருந்தார் கள். அதே அ.தி.மு.க.வுடன் இப்பொழுது பாராளு மன்றத் தேர்தலில் கூட்டு வைத்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது. ஒரு சில கட்சிகளைத் தவிர பல கட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மக்களும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அரசியலில் எவ்வளவு பொய் சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்பது மிகப் பெரிய சோகம்.
2016ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வோடு விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் நிச்சயமாக மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியிருப்பார். அவரின் அரசியல் பயணம் வெற்றிப்பயணமாக மாறியிருக்கும்.
பழம் நழுவி பாலில் விழுந்திருக்கிறது என்று விஜயகாந்த்துடன் கூட்டணி பற்றி கலைஞர் வெளிப்படையாகவே ஊடகங் களுக்கு பேட்டி கொடுக்குமளவுக்கு தி.மு.க. வுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருந்தார் விஜயகாந்த். பின்பு அந்த முடிவை ஏன் மாற்றிக்கொண்டார்? எனக்குத் தெரிந்து தே.மு.தி.க. தொண்டர்கள் தி.மு.க. கூட்டணி என்று செய்தி வந்ததும் மகிழ்ச்சியாக இருந் தார்கள். கலைஞரின் பேட்டி அவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. ஆனால்... மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து கீழே போய்விட்டது.
நான் எந்தக் கட்சியையும் தவறாகச் சொல்லவில்லை. திருமாவளவன் அவர்களின் விடுதலை சிறுத்தைகள், வைகோ அவர்களின் மறுமலர்ச்சி தி.மு.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இவற்றில் எது பெரிய கட்சி? எந்தக் கட்சிக்கு ஓட்டு வங்கி இருக்கிறது?
எனக்குத் தெரிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொண்டர்களை வைத்திருப்பது தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.
தே.மு.தி.க.வின் பலம் குறைந்து ஓட்டு வங்கியும் குறைந்துபோனது எல்லோருக்கும் தெரியும். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்துக்கும் தெரியும். பின் எதற் காக தி.மு.க. கூட்டணியை உதறிவிட்டு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார்? "தி.மு.க. ஓட்டுக்களை பிரிப்பதற்காகத் தான் மக்கள் நலக் கூட்டணியை ஜெயலலிதா உருவாக்கினார்' என்றுகூட செய்தி பரவியது. கூட்டணிக் கணக்கு என்பதே ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஓட்டு வங்கியை வைத்துதான்.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எல்லா கணக்கு களையும் சரியாகப் போட்ட... நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நஷ்டக் கணக்கையெல்லாம் லாபக்கணக்காக மாற்றிய விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து முதலமைச்ச ராகிவிடலாம் என்று எப்படி தப்புக் கணக்கு போட்டார்?
தி.மு.க.வுடன் கூட்டணி வேண் டாம் என்று விஜயகாந்த்தை முடி வெடுக்க வைத்தது யார்? கடுமையான வார்த்தைகளில் சொல்வதென்றால் அந்த முடிவு தற்கொலைக்குச் சமமான முடிவு.
அந்தத் தேர்தலில் அவர் உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வந்தது. மக்கள் நலக் கூட்டணியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த்தே தோற்றுப்போனார்.
சத்தியமாகச் சொல்கிறேன். அவரின் தோல்வியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கே அப்படியென்றால் அவருக்கு எப்படியிருந்திருக்கும்?
விருதுநகரில் காமராஜரையும், பர்கூரில் ஜெயலலிதாவையும் தோற்கடித்தது அரசியல். ஆனால் அவர்களெல்லாம் தோல்வியிலிருந்து மீண்டுவந்தார்கள். காமராஜர் தேசிய அரசியலில் கொடிகட்டிப் பறந்தார். பிரதமரையே முடிவு செய்யும் இடத்தில் இருந்தார். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக ஆனார். அவர்களைப் போல விஜயகாந்த்தும் மீண்டு வந்திருப்பார். ஆனால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கம் கூண்டுக்குள்ளேயே இருந்து விட்டது.
அது யாருக்கும் அஞ்சாத சிங்கம்! அநீதி களுக்கு அஞ்சாத சிங்கம்! தொட்டதையெல்லாம் துலங்க வைத்த சிங்கம்! ஏழை எளியவர்களுக்காக இரக்கப்பட்ட சிங்கம்! பலருடைய பசியைத் தீர்த்து வைத்த சிங்கம்! வசதியில்லாதவர்களை படிக்க வைத்த சிங்கம்! எவ்வளவு புகழ் வந்தபோதும் எளிமையாக இருந்த சிங்கம்! தமிழர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த சிங்கம்!
அவர் உடல்நலத்தோடு இருந்திருந்தால் தே.மு.தி.க. கொஞ்சம்கூட சோர்வடைந்திருக்காது. உயரத்தில் தூக்கி நிறுத்தியிருப்பார். அப்படி ஒரு வாய்ப்பை இறைவன் அவருக்குக் கொடுக்காமல் தன்னிடம் அழைத்துக்கொண்டான். இந்த மண்ணிலிருந்து மறைந்து மக்களின் மனங்களில் நிறைந்துவிட்டார் விஜயகாந்த்.
அவரது இறுதி ஊர்வலம் மறையாத வரலாறாக மாறிப்போனது. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆலயமாகிப் போனது. அவருடைய கனவுகளை, அவருடைய லட்சியங் களை நிறைவேற்றுகின்ற இடத்தில் தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளர் பிரேமலதா அண்ணியார் இருக்கிறார். தமிழ்நாட்டில் எங்கு சென்று விஜய காந்த் என்ற பெயரைச் சொன்னாலும் லியாகத்அலிகான் என்ற பெயரும் சேர்ந்தே வருவது நான் செய்த பாக்யம். சிலர் ஆலயத்திற்கு செல்லமாட் டார்கள். இறைவனை இதயத்திலே வைத்திருப் பார்கள். இந்த லியாகத் அலிகானும் அப்படித்தான். என்னை உடன்பிறந்த சகோதரன் போலவும், ஆருயிர் நண்பனாகவும் ஏற்றுக் கொண்ட அவரை, என்னை எழுத வைத்து அழகு பார்த்த அவரை, என் விஜி அண்ணனை இதயத்திலேயே வைத் திருக்கிறேன்.
இந்த இடத்தில்தான் நாம் தமிழர் கட்சியின் தலைர் பல லட்சம் இளைய சமுதாயத்தின் தலைவர் சீமான் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனியாகவே போட்டி யிட்டு தேர்தலுக்கு தேர்தல் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொண்டே போகிறார். அவர் சில சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் ஜெயிக்கிற கூட்டணியில் சேர்ந்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பதவிக்கு ஆசைப்படாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.
அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக் கிறதோ அந்த அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு, எதற்கும் அஞ்சாமல் அரசியலில் தன் பயணத்தை வெற்றிகர மாக தொடர்ந்துகொண்டிருக்கிறார். இளைஞர் களை ஈர்க்கின்ற தலைவராக இயங்கிக் கொண்டி ருக்கிறார். அவருடைய பேச்சாற்றலைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். அவர் பேசுவதைக் கேட்டு இளைஞர் படை எழுச்சி பெறுவதையும் பார்த்து வியந்திருக்கிறேன். இந்த சூழ்நிலையில்தான் தம்பி தளபதி விஜய் அவர்கள், தன் அரசியல் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்களுக்கு விஜயகாந்த்மேல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கையை உண்மையாக்காமல் மறைந்து விட்டார் விஜயகாந்த்.
விஜய் தனது அரசியல் பயணத்தில் எம்.ஜி.ஆர். போல சாதிப்பாரா? விஜயகாந்த் போல சறுக்குவாரா?
(வளரும்...)