ff

(23) கவலைகள் பலவிதம்!

ருநாள் இப்ராகிம் ராவுத்தரிட மிருந்து எனக்கு அவசர அழைப்பு. "உடனே கிளம்பி வாங்க'' என்றார். போனேன்.

அவர் முகம் மகிழ்ச்சியாக இல்லை. அது சோகமா, ஆத்திரமா என்று தெரியவில்லை.

Advertisment

"என்னண்ணே'' என்றேன்.

"மணி வேண்டாம்ணே. அவனை வேலையை விட்டு நிறுத்திருங்க'' என்றார்.

எனக்கு அதிர்ச்சி. "ஏண்ணே... என்னாச்சு''

Advertisment

"சொல்றதைச் செய்ங்க... போங்க'' என்றார். வந்துவிட்டேன்.

மணியிடம் சொன்னேன்... அவர் ஆடிப்போய்விட்டார்.

"ஏன் சார்... எதுக்கு சார்?'' என்றார்.

"தெரியல, அவர் சொல்லல. அவர மீறி என்னால எதுவும் செய்ய முடியாது மணி'' என்று கூறினேன்.

மறுநாள் மணியின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் என் வீட்டிற்கே வந்து அழுது தீர்த்துவிட்டார். "நாலஞ்சு மாசமா ரொம்ப சந்தோஷமா இருந்தோமே... நிம்மதியா நல்ல சாப்பாடு சாப்பிட்டோமே... நல்ல காலம் பொறந்திருச்சுன்னு நம்பினேனே... இப்படி அனுப்பி வச்சுட்டேங்களேய்யா? எதுக்குய்யா, என்னய்யா தப்பு பண்ணாரு?'' என்று அழுதார்.

மணியிடம் சொன்ன அதே பதிலைச் சொன்னேன். எனக்கே தெரியாது, இப்ராகிம் ராவுத்தர் ஏன் அப்படிச் சொன்னார் என்று. மணியும் அவர் மனைவியும் குழந்தைகளோடு சோகமாகச் சென்றார்கள்... என்னால் தாங்க முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மணியை அழைத்துவரச் சொன்னேன். வந்தார்.

"என்ன நடந்தது, இப்ராகிம் அண்ணன்கிட்ட ஏதாவது தப்பா நடந்துக்கிட்டீங்களா? தப்பா எதுவும் பேசினீங்களா'' என்று கேட்டேன்.

"இல்லியே சார்... நான் எதுக்கு சார் அவர்கிட்ட அப்படி நடந்துக்கப்போறேன்'' என்று கண்கலங்கினார். ரெண்டுநாளா தன் மனைவி தூங்கவே இல்லை என்றும் சொன்னார்.

"நல்லா யோசனை பண்ணிப் பாரு மணி. உன்னை வேண்டாம் என்று அவர் சொன்ன அன்று அவரைப் பாத்தியா?'' என்று கேட்டேன்..

யோசித்து.... சொன்னார். "ஆமா சார்...'' (விஜயகாந்த் நடித்து அன்று ரிலீசான படம்... படத்தின் பெயர் வேண்டாம். அந்தப் படத்தின் டைரக்டர் இப்பொழுது சொன்னாலும் கூட கோவித்துக்கொள்வார்.) முதல் ஷோ பாத்துட்டு இப்ராகிம் அண்ணனைப் பாக்கலாம்னு வந்தேன். குளிச் சிட்டு சாமி கும்பிட்டுட்டு வந்தார்.

"படம் எப்படியிருக்கு மணி?''ன்னு கேட்டார்.

"நீ என்ன சொன்ன...''

"நல்லா இல்ல''ன்னு சொன்னேன்.

"ஓடுமா?''ன்னு கேட்டார்.

"ஓடாதுன்னு சொன்னேன். உண்மையைத்தான சார் சொல்லணும்!''

"சரி மணி நீங்க போங்க, நான் கூப்புடுறேன்'' என்று அனுப்பிவைத் தேன்.

"... ...' படம் ரிலீஸ். அன்று மாலை குளித்துவிட்டு ஈரத்துணி யோடு எல்லா சாமியையும் கும்பிட்டுட்டு.. "படம் சக்ஸஸ் ஆகணும், நல்லா ஓட ணும்'னு வேண்டிக்கிட்டு, ரூமை விட்டு வெளி யே வந்ததும் மணியும் வந்து நின்றிருக்கிறார். மணியைப் படம் பார்க்க அனுப்பி வைத்ததே அவர்தான்.

ஆவலோடு... "படம் எப்படி...?'' என்று கேட்டிருக் கிறார்.

"படம் நல்லா இல்ல''ன்னு மணி சொன்னதும்... அவருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது... கேட்ட முதல் ஆளே இப்படிச் சொல்லிவிட்டாரே என்று. இந்த விஷயத்தில் இப்ராகிம் ராவுத்தரின் குணம் என்னவென்று மணிக்குத் தெரியாது.

முதலில் பார்த்தவனே அபசகுனமாகச் சொல்லிவிட்டானே என்ற கோபம். வேலையை விட்டே தூக்கச் சொல்லிவிட்டார்.

விஜயகாந்த் நடித்த ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பார். பிரார்த்தனை செய்துகொண்டேயிருப்பார். படம் நன்றாக இருக்கிறது என்று ரிசல்ட் வந்தால், அவர் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சிரித்த முகத்தோடவே இருப்பார்.

"அண்ணே... விஜி பெருசா வருவாண்ணே'' என்பார் என்னிடம்.

"யாருண்ணே இல்லேன்னு சொன்னது'' என்பேன் நான்.

"இப்ப இருக்கிறதை விட இன்னும் பெருசா வருவாண்ணே'' -அவர்.

"இப்பவே பெருசாத்தாண்ணே இருக்காரு'' -நான்

"எம்.ஜி.ஆர். மாதிரின்னு சொன்னேண்ணே...'' என்பார் அவர்.

அப்படியெல்லாம் விஜயகாந்த் வரவேண்டும், அரசியலில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்த அவர், விஜயகாந்த்தை விட்டுப் பிரிந்தார்.

dd

விஜயகாந்த்தைப் பற்றி, அவரது படங்களைக் குறை சொல்பவர்களைக்கூட வெளியேற்றும் அளவுக்கு அவரை நேசித்தவர், அவரது வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் அவரை விட்டுப் பிரிந்தார்.

பிரிந்தாரா... பிரிக்கப்பட்டாரா...?

அதற்கு முன் சில விஷயங்கள்...!

"தீர்ப்பு என் கையில்' படம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. "சாட்சி' படம் வேகமாக வளர்ந்துகொண்டி ருந்தது. அவர்களின் வளர்ச்சியைப் பற்றியே பேசிக் கொண்டிப்போம், திட்டமிட்டுக் கொண்டிருப்போம்.

இந்த காலகட்டங்களில் எல்லாம் இப்ராகிம் ராவுத்தர், விஜயகாந்த், நான்... எங்கள் மூவருக்கும் இடையே பல விஷயங்கள் உண்டு. அதையெல்லாம் நான் சொன்னால் "அப்படியா...?' என்று சிலர் ஆச்சரியப்படுவார்கள், சிலர் நம்பமாட்டார்கள். சிலர் "ஏன் இப்படி எழுதுறீங்க?' என்று கேட்பார்கள்.

இப்பொழுது கூட பல ஹ்ர்ன்ற்ன்க்ஷங் பேட்டிகளில் பல ஊடகங்களில் பத்திரிகைகளில் வரும் பேட்டிகள், பலருடைய பேட்டிகளைப் பார்க்கிறேன். நடந்தவைகளையும் சொல்கிறார்கள், நடக்காததையும் சொல்கிறார்கள். விஜயகாந்த் அவர்களைப் பெருமைபடுத்தும் விதமாகச் சொல்வதை நான் சொல்லவில்லை. அவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக சிலர் அப்படி சொல்லுகிறார்கள். (நான் எல்லோரைப் பற்றியும் சொல்ல வில்லை) பழகியவர்களே அவரைப்பற்றிச் சொல்லும்போது... விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோருடன் நான் வாழ்ந்தவன்... நான் சொல்லக்கூடாதா?

சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கப்போகும் அந்த விஷயங்களைச் சொல்வேன்.

அதற்கு முன்னால் "சாட்சி' படத்தின் வெற்றி குறுக்கே வந்துவிட்டது.

d

1983ஆம் ஆண்டு "சாட்சி' படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. "சட்டம் ஒரு இருட்டறை' மூலம் விஜயகாந்த் அவர்களை வெற்றிப்பட ஹீரோவாக்கிய எஸ்ஏ.சந்திரசேகர் சார் அவர்கள், "சாட்சி' படத்தின் மூலம் சரிந்திருந்த விஜயகாந்த் அவர்களின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார். "சாட்சி' படத்தை விஜயகாந்த் ரசிகர்கள் கொண்டாடினார்கள். தியேட்டர், தியேட்டராகப் போய் ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ச்சி யடைந்தேன். ரசிகர்கள் என்னை தோள்மீது தூக்கிவைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். விஜயகாந்த் அவர்களுடன் நான் இருப்பதால் அவருடைய நண்பன் என்பதால் எனக்கு கிடைத்த மரியாதை.

சாட்சி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஓய்வில்லாத நடிகராக மாறிப்போனார் விஜயகாந்த். விஜயகாந்த் எம்.ஜி.ஆர். ரசிகர். அவரைப்போல ஆக்ஷன் ஹீரோவாக ஆகிவிட்டார். அந்த மகிழ்ச்சியிலும் கூட அவருக்கு ஒரு கவலை. எந்த எம்.ஜி.ஆரை நேசித்தாரோ, அவரைப் பார்க்க முடியவில்லை. அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று.

அவர் எம்.ஜி.ஆரைப் பற்றி பேசும்பொழுதெல்லாம்... நான் கலைஞரைப் பற்றி பேசுவேன். அவருடைய படங்களைப் பற்றி பேசுவேன். அவருடைய அரசியல் பயணத்தைப் பற்றி பேசுவேன். அவருடைய எழுத்தாற்றல், பேச்சாற்ற லால் எப்படியெல்லாம் அவரை வளர்த்துக்கொண்டார் என்று பேசுவேன். விஜயகாந்த் அவர்களுடன் இருந்த ஆரம்ப காலங்களில் கூட கலைஞரின் பொதுக்கூட்டம் எங்கு நடந்தாலும் நானும், ரகுமத்துல்லாவும் போய்விடுவோம்.

மறுநாள் விஜயகாந்த்திடம் கலைஞர் பேசியதையும், தொண்டர்களின் உற்சாகத்தையும் சொல்வோம். சில வருடங்களுக்குப் பிறகு கலைஞர் அவர்களுடன் விஜயகாந்த் அவர்கள் நெருக்க மானதற்கும், கலைஞர், விஜயகாந்த் அவர்கள் மீது அதிக அன்பு வைத்ததற்கும் நானும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறேன்.

ஆனால் அதற்குமுன் விஜயகாந்த்துக்கு "எம்.ஜி.ஆருடன் பழகி நெருக்கமாக முடிய வில்லையே' என்ற கவலைதான் இருந்தது.

இந்தச் சமயத்தில் இப்ராகிம் ராவுத்தருக்கோ வேறொரு கவலை...? அந்தக் கவலைக்குக் காரணம்... நடிகர் முரளி!

(வளரும்...)