"கலைஞர் வாழ்ந்த இந்த திருவாரூர் மண்ணிலிருந்து சொல்கிறேன், கடைசி தி.மு.க. தொண்டன் இருக்கும்வரை இந்தியை தமிழ் நாட்டுக்குள் புகுத்தமுடியாது. உங்க கனவும் பலிக்காது''’என்று கலைஞர் பாணியில் தொண் டர்களுக்கு மத்தியில் பேசி உசுப்பிவிட்டிருக் கிறார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் அரசுப் பயணமாகவும், தி.மு.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் வந்திருந்த துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் ஆயி ரக்கணக்கான தொண்டர்களும் பெண்களும் திரண்டுவந்து வரவேற்பு கொடுத்தனர். பழவனங்குடி ஊராட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 30 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களைச் சந்தித்து அவர்களின் அனு பவங்களைக் கேட்டறிந்தார். அப்போது ஒவ்வொரு மகளிர்குழு பெண்களும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் இன்றைய நிலை குறித்துக் கூறினர். பழவனங்குடி ஊராட்சியிலுள்ள மருதம்பட்டினம் அங்கன்வாடி மையத்தை ஆய்வுசெய்து அங்கிருந்த மழலைகளைக் கொஞ்சினார். அங்குவந்த அதே ஊராட்சியைச் சேர்ந்த சிலர், “"எங்களுக்கு பட்டா இல்லை. நீண்டகாலமாக மனு கொடுத்து ஓய்ந்து விட்டோம்''’என்று கூற, உதயநிதி ஸ்டாலின் அங் கேயே அவர் களுக்கு பட்டா கிடைக்கச் செய்ததோடு, அவர்களுக்கு கலைஞர் கனவு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஏற்பாடும் செய்துகொடுத்தது ஹைலைட்டாக அமைந்தது.
தொடர்ந்து மருதவாஞ்சேரியிலுள்ள மொழிப்போர் தியாகி சாரங்கபாணியின் வீட்டிற்குச் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு, அவரது உறவினர்களைச் சந்தித்தும் பேசினார். திருத் துறைப்பூண்டி பேருந்து நிலையத்திற்கு பின் புறம் கால் நூற்றாண்டுக்கு மேலாக, மழைநீர் தேங்கும் பகுதியில் தற்காலிகமாக குடியிருந்து வந்த நரிக்குறவர் மக்களின் நீண்ட நாள் கோரிக் கையை ஏற்று 77 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவும், அவர்கள் வீடு கட்ட ஏதுவாக குடும் பத்திற்கு ஐந்து லட்சம் என நான்கு கோடி களைக் கொடுத்தது ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் திரும்பிப்பார்க்க செய்தது.
பட்டா பெற்றது குறித்து அந்த மக்கள் கூறுகையில், “"எங்க வாழ்க்கையில் இனி என்ன வேணும், உழைப்பை மட்டுமே நம்பிவாழுற எங்களுக்கு குந்தி எந்திரிக்க ஒரு குடிசை கிடைக்குமா என்கிற ஏக்கம் இவ்வளவு காலம் மனசை துளைச்சது, குடிசைவீடு கிடைக்குமா என்று ஏங்கிய எங்களுக்கு மாடிவீடே கிடைச்சிருக்கு''’என்று மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று பேசினார்கள்.
இதற்கிடையில் சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம், புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் என அதிரடிகாட்டினார் துணைமுதல்வர். சார்பு அணி நிர்வாகிகளோடு பேசுகையில், “"பல தாய்மொழிகளை விழுங்கிய மொழி இந்தி. கலைஞர் வாழ்ந்த இந்த திருவாரூர் மண்ணிலிருந்து சொல்கிறேன், கடைசி தி.மு.க. தொண்டன் இருக்கும்வரை இந்தியை தமிழ்நாட்டுக்குள் புகுத்தமுடியாது. முன்பு மொழிக்கொள்கையை கிளப்பியவர்கள், தற்போது நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்போகிறோம் என்று வருகிறார்கள்.
ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை, மிகச்சிறப்பாக செய்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள்தான். குடும்பக் கட்டுப்பாட்டை மிகச்சிறப்பாக செய்து, ஒன்றிய அரசு சொன்னதை கேட்டு சரியான முன் னெடுப்புகளை செய்து சாதித்துக்காட்டியதற்கு நியாயமாக அவர்கள் நமக்குப் பரிசளிக்கவேண் டும். வடமாநிலங்கள் அதை முறையாகச் செய்யலை. உதாரணத்திற்கு உத்திரபிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடியைத் தாண்டிடுச்சு, பீகார் 13 கோடியைத் தாண்டிடுச்சு. தமிழ்நாட் டில் வெறும் ஏழு கோடிக்குள் வைத்துள்ளோம். மத்திய அரசின் உத்தரவை ஏற்று மக்கள் தொகையைக் குறைத்ததால், இப்போது தண்டனைக்கு உட்படுத்தப்படுறோம். தற்போது ஒன்றிய பாசிச அரசு, மக்கள்தொகை அடிப் படையில் எம்.பி. தொகுதிகளை வரையறை செய்யப்போகிறோம் என்கிறார்கள். அப்படிச் செய்தால் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 8 எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்து, 31 எம்.பி.க்களாக சுருங்க வாய்ப்பு இருக்கிறது.
இதனால் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, முப்பது வருடத்திற்கு தொகுதி மறுவரையறை செய்யக்கூடாதென தீர்மானம் போட்டிருக்கிறோம். நம்மைப் போலவே கர்நாடகம், தெலுங்கானா பஞ்சாப், கேரளா என இந்த பிரச்சினையை கையிலெடுத்திருக் காங்க. தமிழக முதல்வருக்கு ஆதரவு கொடுக்கு றாங்க. ஆகவே ஒன்றிய அரசு கொடுக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர்த்துநிற்கும்போது அவங்களுக்கு கோபம்வருது. தமிழக அரசு மேல் தொடர்ந்து நெருக்கடியைத் திணிச்சிக் கிட்டே இருக்கு. நம் முதல்வரும் இந்தியாவிலே பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக நின்று குரல்கொடுக்கிறார். இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, ஐ.டி.விங்க் என தி.மு.க.வில் இருக்கும் 23 அணிகளும் ஒரு வருடம் ஓயாமல் உழைக்க வேண்டும். நமது கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அப்படி செய்தால் வெற்றி நிச்சயம்'' என்றார்.
இரண்டு நாள் ஆய்வுகளை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "குழந்தைகளிடம் கையெழுத்தை வாங்கக்கூடாது, நாங்களும் நீட் தேர்வுக்கு சுமார் ஒரு கோடி கையெழுத்து வாங்கினோம், அப்போது பள்ளி மாணவர் களை தவிர்த்துவிட்டுதான் வாங்கினோம்'' ’என்றார்.