மிழ்நாடு பா.ஜ.க.வில் பல விவகாரங்களின் பஞ்சாயத்துக்கள் நடந்தபடியிருக்க, ஒரு பஞ்சாயத்து சட்டப் பஞ்சாயத்தாகியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர பா.ஜ.க. தலைவராக இருப்பவர் புவனேஷ்குமார். "எனக்கு இந்திய ஒன்றி யத்தின் உள்துறை இணைஅமைச்சர் கிஷன்ரெட்டி மூலமாக சீட் வாங்கி தருவதாக கூறி 50 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டார்கள்' என புகார் தர... அதன்மீது காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

d

இதுபற்றி நம்மிடம் பேசிய புவனேஷ் குமார், "கட்சிப் பணியாக அடிக்கடி கமலாயம் போவேன். அங்கே எனக்கு அறிமுக மானவர்தான் விஜயராகவன். அவர் என்னிடம், உள்துறை இணையமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளருமான கிஷன்ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் எனக்கு நண்பர். அவர் மூலமாக அமைச்சரிடம் பேசி ஆரணி தொகுதி எம்.எல்.ஏ சீட் வாங்கித் தர்றேன்னு சொன்னார். இதற்காக ஐதராபாத் போய் நரோத்தமனை சந்தித்தோம். அவர் தன்னோட இருந்த ஒருவரை எனக்கு அறிமும் செய்தார். இவர் சிட்டிபாபு அமைச்சருக்கு ரொம்ப நெருக்கம்னு சொன்னார். ஒரு கோடி ரூபாய் தந்தால் நீங்க கேட்கும் தொகுதி வாங்கித் தர்றன்னு சொன்னாங்க. சென்னை வந்த பிறகு பணம் ரெடிசெய்து மார்ச் 12-ஆம் தேதி மதியம் சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் வச்சி 50 லட்சம் ரூபாய் தந்தேன், மீதிப்பணம் பட்டியலில் பெயர் வந்ததும் தந்துடனும் அப்படிங்கறது உடன்பாடு. நான் தந்த பணத்தை விஜயராகவன், அவரோட மகன் சிவபாலாஜி எண்ணி வாங்கினாங்க.

Advertisment

தேர்தல் அறிவிப்பு வந்து தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வந்ததும் ஆரணி பெயர் இல்லை. இதுபற்றி அமைச்சரின் உதவியாளரிடம் கேட்டப்ப, மனு தாக்கல் செய்யச் சொன்னார், முடியாதுன்னு சொன்னேன். பட்டியலில் திருவண்ணாமலை தொகுதி இருக்கு, அங்கே மனு தாக்கல் செய்யுங்கள், கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரா உங்களை அறிவிக்க செய்யறேன்னு சொன்னாங்க. அங்கே மாவட்ட துணை தலைவராகவுள்ள என் சகோதரி வசந்தியை மனுத்தாக்கல் செய்ய வைத்தேன். எங்களுக்கு கட்சியின் பி.பார்ம் தராததால் எங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு, நரோத்தமனை தொடர்பு கொண்டு பேசியபோது, முதல்ல தந்துடறேன்னு சொன்னவர், அதன்பிறகு கொலை செய்துடுவேன்னு மிரட்ட தொடங்கினார்.

இதுபற்றி அமைச்ச ரிடம் போய் சொன் னப்ப, அவர் அதிர்ச்சி யாகி நரோத்தமனும், சிட்டிபாபுவும் அப்பா மகன்னு சொன்னாரு. எங்க முன்னாடியே அவரே அவுங்ககிட்ட பேசினார். பணம் தந்துடறேன்னு சொன்னாங்க. இப்போவரைக்கும் பணம் தரல. அதேமாதிரி விஜயராமன், அ.தி.மு.க.வின் வடசென்னை மாவட்ட துணை செயலாளரா இருப்பது தெரிந்து அதிர்ச்சியாகிடுச்சி. எங்க கட்சி நிர்வாகிகளும், அ.தி.மு.க. நிர்வாகியும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க. இதுபற்றி இணை அமைச்சரிடம் சொல்லிட்டுத்தான் புகார் தந்திருக்கேன். இப்போ வழக்குப் பதிவு செய்திருக்காங்க'' என்றார்.

nn

Advertisment

பா.ஜ.க. மீதான வழக்கு என்பதால் கவனமாக சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து அதன் பிறகே, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது சென்னை காவல்துறை, இதுபற்றி விளக்கம் பெற... ஏமாற்றியதாக கூறப்படுபவர்களின் மொபைல் எண்ணை நாம் தொடர்புகொண்டபோது, மூன்று பேரின் செல் சுவிட்ச் ஆப் என்கிறது.

இவ்விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, "அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியானதும், எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டுமென தலைமையில் முக்கிய பதவியில் உள்ள சிலரிடம் பணம் தந்து பலரும் ஏமாந்துபோனார்கள். அதில் இந்த விவகாரம் வெளியே வந்து புகாராகிவிட்டது. சில பஞ்சாயத்துக்கள் நடந்தபடியேதான் இருக்கின்றன. இதுபற்றி கட்சியின் தேசிய தலைமை விசாரணை நடத்தினால், ரூம் போட்ட விவகாரங்களும் வெளியேவரும். நாமே நம் மீது சேறு வாரி பூசிக்கொள்வதா என சைலண்டாக கடந்துபோகிறது தலைமை'' என்றார்.