இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்படும் தங்க வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடத்தி வரப்படும் அந்த தங்கக் கட்டிகள், சென்னையிலிருந்து அண்டை மாநிலங்களுக்குப் பறக்கின்றன. அந்த வகையில் தங்கக் கடத்தலுக்கு வேடந்தாங்கலாக இருக்கும் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 170 கோடி மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றியதுடன் இதற்கு காரணமான 9 பேரை கைது செய்துள்ள சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ’’""சென்னை சர்வதேச விமானநிலையத்தினுள்ளே கிப்ட் ஷாப், டாய்ஸ் ஷாப், காஸ்மெட்டிக் ஷாப், லெதர் பேக்ஸ் ஷாப் என சிறியதும் பெரியதுமான நிறைய கடைகள் இருக்கின்றன.
இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கும் பாஸ்களை வைத்து தங்கம் கடத்துவது மிக ரகசியமாக நடந்துகொண்டிருக்கிறது என சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அலட்சியப்படுத்தாமல், தங்கக்கடத்தலைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்தனர். ரகசியத் தகவலின்படி, பொம்மைகளை விற்பனை செய்யும் ஏர் ஹப் எனும் கடையை மையப்படுத்தியே இந்த கடத்தல் நடப்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டனர்.
இதனையடுத்து, இந்த கடையின் உரிமையாளர் சபீர்அலியின் பின்னணிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். அப்போது, இந்த கடையை வைப்பதற்காக சுமார் 70 லட்ச ரூபாயை இலங்கையை சேர்ந்த சிலர் சபீருக்கு கொடுத்திருப்பதும், அந்த இலங்கை நபர்கள் தங்கக் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் என்பதும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தது. இதனையடுத்து ஏர்போர்ட்டில் இருக்கும் அனைத்து கடைகள் மீதும் தங்களின் சந்தேக வலையை விரித்து வைத்து காத்திருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து சென்னைக்கு வந்து இலங்கைக்கு செல்லும் கொழும்புவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சுமார் 1 கிலோ தங்கத்தை கடத்தி வருகிறார் என தகவலறிந்து உஷாரானார்கள். சென்னையில் லேண்டான அந்த இளைஞரை கண்கொத்திப்பாம்பாக கண்காணித்தனர். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்த அவர், நேராக ஏர்போர்ட்டின் பாதுகாப்பு பகுதியிலிருந்த டாய்லெட்டுக்கு சென்று வந்தார்.
அவரை மடக்கிய விமான நிலைய புலனாய்வுப்பிரிவினர், டாய்லெட்டில் சோதனையிட்டபோது 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்னரை கிலோ தங்கத்தை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இலங்கை இளைஞரிடம் புலனாய்வுத்துறையினர் நடத்திய விசாரணையில், சர்வதேச தங்கக் கடத்தலில் இலங்கையை சேர்ந்தவர்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒரு குரூப்பில் வேலை செய்கிறேன். கடத்தல் கும்பலுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல ஏர்போர்ட்டிலும் லிங்க் வைத்துள்ளனர். அதனால் அவர்களால் ஈசியாக இந்த கடத்தலை நடத்த முடிகிறது.
இலங்கையிலிருந்து என்னை துபாய்க்கு அனுப்பினார்கள். அங்கிருந்து சென்னைக்கு என்னை ஒன்னரை கிலோ தங்கத்துடன் அனுப்பி வைத்தனர். சென்னையில் இறங்கியதும் ஏர்போர்ட்டிலுள்ள இந்த டாய்லெட் பகுதிக்குச் சென்று தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு சபீர் அலி என்பவருக்கு தகவல் கொடுத்து விட வேண்டும். அதன்பிறகு சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்து விடவேண்டும். இதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. டிக்கெட் உட்பட எல்லா செலவுகளையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். கடத்தப்படும் தங்கத்தின் மதிப்பைப் பொறுத்து எனக்கான தொகையைக் கொடுப்பார்கள் என நிறைய விசயங்களை கக்கியிருக்கிறார் இலங்கை இளைஞர்.
இந்த இளைஞரையும், இவர் கொடுத்த தகவல்களின்படி சபீர்அலி மற்றும் ஏர் ஹப் ஊழியர்கள் 7 பேரையும் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். சபீர்அலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான், "மத்திய அமைச்சர்கள் பலருக்கும் நெருக்கமான தமிழக பா.ஜ.க. பிரமுகர் ப்ரித்வி என்பவரின் தொடர்புகளையறிந்து புலனாய்வு அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்'’ என்கிறது சுங்கத்துறை வட்டாரம்.
இது குறித்து மேலும் விசாரித்தபோது, "சென்னை ஏர்போர்ட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துவதற்கான குத்தகை உரிமத்தை (லீஸ் லைசன்ஸ்) வாஞ்சிநாதன் என்பவர் நடத்தும் ஒரு நிறுவனத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து பெற்றுத் தந்துள்ளார் ப்ரித்வி. அந்த நிறுவனத்தில் இவர் ஒரு ஊழியர் என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. அந்த லைசன்ûஸ வைத்து சபீர் அலி போன்ற பலருக்கும் கடைகளை சப்-லீஸ் கொடுக்க வைத்துள்ளார் ப்ரித்வி.
கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் விமானநிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் எந்த சோதனையுமின்றி சென்று வர அவர்களுக்கு பாஸ்களை வாங்கியும் கொடுத்துள்ளார்.
விமானத்தில் தங்கத்தைக் கடத்தி வருபவர்கள் ஏர்போர்ட்டில் பதுக்கி வைக்கச் சொன்ன இடத்தில் பதுக்கி வைத்துவிடுவர். அதனை சபீர்அலி போன்றவர்களுக்கு தகவல் கொடுப்பர். சம்பந்தப்பட்ட கடையின் ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாஸ்கள் மூலம் அந்த இடத்துக்கு சென்று தங்கத்தை தங்கள் ஆடைக்குள் பதுக்கிக்கொண்டுவந்து தங்கள் கடைகளில் வைத்துக்கொள்வார்கள். கடையின் உரிமையாளர் சொன்னதற்கு பிறகு தங்கத்தை எவ்வித சோதனை கெடுபிடிகளும் இல்லாமல் விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துச்சென்று கொடுக்க வேண்டிய நபர்களிடம் கொடுத்துவிடுவார்கள். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த தங்கம் எங்கு போக வேண்டுமோ அங்கு சென்றுவிடும். இப்படித்தான், ஏர்போர்ட்டிலிருந்து தங்கம் சென்னை சிட்டிக்குள் வருகிறது
.
இப்படி நடக்கும் தங்க வேட்டைக்கு ஏர்போர்ட் அத்தாரிட்டிகள் சிலரும் கடத்தல் கும்பல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இப்போது அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர உயரதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு முன்னதாக, கைது செய்யப்பட்ட சமீர் அலி உள்ளிட்ட அனைவரையும் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் வாக்குமூலம் வாங்கவும் முடிவு செய்துள்ளனர். சபீர்அலி வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏர்போர்ட் அத்தாரிட்டிகள் சிலரது வீடுகளில் சத்தமில்லாமல் ரெய்டு நடந்தததாகவும் செல்லப்படுகிறது. ஏற்கனவே பல விசயங்களை இவர்கள் சொல்லியிருந்தாலும் மேலதிக தகவல்களை பெற திட்டமிட்டப்பட்டே கஸ்டடியில் எடுக்க தீர்மானித்துள்ளனர் புலனாய்வு அதிகாரிகள்.
அதன்பிறகு, ஏர்போர்ட்டில் கடைகள் நடத்தும் லீஸ் லைசன்ஸ்சை பெற்ற தனியார் நிறுவன உரிமையாளர் வாஞ்சிநாதன், அவருக்கு பின்னணியில் இருக்கும் ப்ரித்வி ஆகியோரிடமும் விசாரித்து வழக்குப் பதிவு செய்யவும் ஆலோசனை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில், ப்ரித்வியை தாண்டி பா.ஜ.க. பிரமுகர்கள் யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது என்கிற கோணத்திலும் தீவிரமாகப் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தாலும் அவர்கள் மீது புலனாய்வு அமைப்புகள் ஆக்சன் எடுக்குமா என்பது கேள்வி குறிதான்''’’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் விபரமறிந்த ஏர்போர்ட் அலுவலர்கள்.
இந்த கடத்தல் விவகாரம் தமிழக பா.ஜ.க.வில் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், ப்ரித்வியின் பின்னணி குறித்து விசாரித்தபோது, ""தமிழக பா.ஜ.க. மாணவர் அணி பிரிவில் இருந்தவர் ப்ரித்வி. கவர்னராக தமிழிசை நியமிக்கப் பட்டபோது அவரிடம் பி.ஏ.வாக சேர முயற்சித்தார் ப்ரித்வி. ஆனால், அவரை பி.ஏ.வாக சேர்த்துக்கொள்ள தமிழிசை விரும்பவில்லை. அந்தச்சூழலில், தனக்கிருந்த டெல்லி தொடர்புகள் மூலம் மத்திய சட்ட அமைச்சராக இருந்த அர்ஜூன்ராம் மேக்வாலிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பிறகு மத்திய அமைச்சர்கள் பலரின் நெருக்கமும் அவருக்கு கிடைத்தது.
தமிழக பா.ஜ.க.வின் உச்சபட்ச தலைவர் மற்றும் அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் ஆகிய இருவரும் தரும் பேப்பர்களை மத்திய அமைச்சர்களிடம் கொடுத்து சக்சஸ் செய்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தவர் ப்ரித்வி. டெல்லியில் ஏக தொடர்புகளை வைத்திருக்கும் இவருக்கு, தங்க கடத்தலில் ஆதாரப்பூர்வமான தொடர்பு இருந்தால் அவருக்கு சிக்கல் ஏற்படுவது உறுதி''’என்கிறார்கள் அழுத்தமாக.
இது குறித்து கருத்தறிய பிரித்வியை தொடர்பு கொண்டபோது, தொடர்பு கிடைக்கவில்லை. ஆனால், நமது வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு அறிக்கை அனுப்பியிருந்தார். அதில், "வித்வேதா நிறுவனத்தில் ஒரு இயக்குநராக இருந்தேன். பிஸ்னெஸ் டெவலப்மெண்ட், டீம் ஒருங்கிணைத்தல், ஏர்போர்ட் அத்தாரியுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவைகள கவனித்தேன். கடந்த ஜூன் 12-ந்தேதி இந்த கம்பெனியிலிருந்து விலகிவிட்டேன். சபீர் என்பவரிடமிருந்து கடந்த டிசம்பர் 25-ந்தேதி எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. ஏர்போர்ட் அத்தாரிட்டி தான் எனது நெம்பரை கொடுத்ததாகச் சொன்னார். கடை வைப்பது குறித்து அந்த மெஜேஜில் சொல்லியிருந்தார். அதற்கு நான், கம்பெணியின் மார்க்கெட்டிங் டீமிடம் சொல்லிவிட்டேன். அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என பதிலனுப்பினேன். இந்த தேதி வரை சபீர் என்பவரை நான் பார்த்ததும் இல்லை; சந்தித்ததும் இல்லை. ஏர் ஹப் தொடர்பான எந்த அக்ரிமென்டிலும் நான் கையெழுத்திடவில்லை. அதனால் சென்னை ஏர்போர்ட் சம்பவம் தொடர்பில் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதரமற்றது. பொய்யானது. உண்மைகளை விசாரிக்காமல் பரப்பப்படுகிற பொய்ச்செய்தி. நான் அரசியல் கட்சியில் இருப்பதால் அதை டார்கெட் வைத்து இயற்கை நியதிக்கு மாறாக எனக்கு எதிரான ஆதரமற்ற பொய்ச் செய்திகளை பரப்புகின்றனர்"" என்று தெரிவிக்கிறார் ப்ரீத்வி.
இந்த நிலையில், ஏர்போர்ட்டிலுள்ள கடைகளை மையமாக வைத்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு 170 கோடி ரூபாய். கடத்தப்பட்ட அந்த தங்கத்தை மீட்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் சுங்கத்துறையினர்.
இப்படிப்பட்ட சூழலில், இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்படும் தங்க வேட்டையில் தமிழக பா.ஜ.க. பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பரவும் செய்திகள் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இதன் பின்னணிகள் முழுவதையும் டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறது விமான நிலைய புலனாய்வு அமைப்பு.