கடந்த வாரத்தில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரை திருவனந்தபுரம் போலீசார் கைது செய்த நிலையில், குண்டு வெடிப்பு, அரிசிக் கடத்தல், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் 'பிட்டிங் கலாச்சாரம்' குறித்து தெரியவந்ததும் போலீசார் அதிர்ந்தனர்.
பிட்டிங் கலாச்சாரம் என்றால் என்ன?
"வங்கித் தவணைத் திட்டத்தின் மூலம் வாகனங்களை வாங்கும் நபர்கள், தங்களுடைய அவசரத் தேவைக்காக அந்த வாகனங்களை வேறொரு நபருக்கு அடமானம் வைத்து விடுகின்றனர். அடமானம் வைத்த வாகனத்தை இந்த தேதிக்குள் மீட்டுக்கொள்ள வேண்டுமென ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு, வட்டியை நிர்ணயித்து தேவையான பணத்தைக் கொடுக்கின்றனர். இப்படி வாகனத்தை அடமானம் வைத்து வட்டிக்குப் பணம் வாங்குவதுதான் "பிட்டிங் கலாச்சாரம்'. அனைத்து வகை இரு சக்கர வாகனங்கள், மாருதி 800 முதல் ஆடி, ஜாக்குவார் வரையிலான நான்கு சக்கர வாகனங்கள் இப்படி அடமானம் வைக்கப்படுகின்றன. இப்படி அடமானம் வைக்கப்படும் வாகனங்களை, இதைவிட இரு மடங்கு, மும்மடங்குத் தொகைக்கு வாங்கிச்சென்று, சமூக விரோதச் செயல்களுக்காகப் பயன்படுத்தும் கும்பல்கள் உருவெடுத்திருப்பதுதான் இந்த பிட்டிங் கலாச்சாரத்தின் மோசமான பின்விளைவாக உள்ளது.
சமூக விரோதச் செயல்களின்போது இந்த வாகனங்கள் பிடிபட்டால், அதன் உண்மையான ஓனர் வேறொருவராக இருப்பார். எனவே சமூக விரோதிகளைப் பிடிக்க காவல்துறையே திணறும். சமீபத்தில் கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரும் இதுபோன்றது தான். இத்தகைய செயல்களுக்கு காவல்துறையினர் சிலரும் சப்போர்ட்டாக இருப்பதால் துணிந்து செயல்படுகிறார்கள். இப்படியாக, கோவையில் அடகுவைக்கப்பட்ட வாகனங்கள், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் இன்றுவரை ஓடிக் கொண்டிருக்கின்றன. அடகுவைக்கப்பட்ட வாகனங்களை வாங்குவதற்காக திருச்சி அருகில் ஒரு கிராமமே இருக்கின்றது என்றால் இதனுடைய நெட்வொர்க் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்ளலாம்'' என்கிறார் ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யான மாதவராஜ்.
அடமான வாகனங்களை வாங்குவதற்காகவே உக்கடம், ஆத்துப்பாலம், காந்திபுரம், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் முறையான அனுமதியின்றி கடை விரித்து வைத்துள்ளனர் பலர். திருடப்படும் புதிய வாகனங்களை உடைப்பதற்காக இடையர்பாளையம் பகுதியில் தனியாக சிறு தொழில் சான்றிதழ் பெற்று பல கடைகள் இயங்கி வருகின்றன. "கடந்த சில மாதங்களுக்கு முன்பாக என்னுடைய வண்டியை அவசரத் தேவைக்காக அடமானம் வைத்தேன். இப்பொழுது கேட்டால், இதோ தருகிறேன்... அதோ தருகின்றேன்... என இழுத்தடிக்கிறார். பைனான்ஸ்காரனும் விரட்டு றான்... வண்டியை வாங்கிக் கொடுங்கள்'' என செல்வபுரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை செய்ததில் சரவணம் பட்டி குடோனில் சட்ட விரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100 வாகனங்களை காவல்துறை மீட்டது குறிப்பிடத்தக்கது.
உளவுத்துறை அதிகாரி ஒருவரோ, "பிட்டிங் மூலம் எடுக்கப்படும் கார்கள் இங்கும், இங்குள்ள கார்கள் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவிலும் இயங்கி வருவது, மூக்குப்பொடி எனும் முகமது ரபீக்கின் கைது மூலமாகத்தான் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. திருவனந்தபுரத்தில் ஆன்லைன் மூலம் கார்களை வாடகைக்கு விடும் நிறு வனம் ஒன்றில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு கார்களை வாடகைக்கு எடுத்த கும்பல், அவற்றை திருப்பி ஒப்படைக்கவில்லை. தங்களுடைய காரை மீட்டுத் தரவேண்டுமென திருவனந்தபுரம் வஞ்சியூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட, அவர்களுடைய விசாரணையின் அடிப்படையில் திருச்சூர் வாடாபள்ளி யைச் சேர்ந்த இலியாஸ் கைது செய் யப்பட்டிருக்கின்றான். அவன் கோவை குனிய முத்தூரை சேர்ந்த முகமது ரபீக்கை கை காட்டவே முகமது ரபீக்கும் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் கோவையில் அல் உம்மா இயக்கத்தை சேர்ந் தவன் என்பதும், 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர் புடையவன் என்பதும், பிட்டிங் மூலமே வருடத்திற்கு சுமார் ரூ.6 கோடி அளவில் பணப் பரிவர்த்தனை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. பிட்டிங் கலாச்சாரத்திற்கென சட்டம் ஒழுங்கு போலீசார் தனிக்கவனம் செலுத்தினால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கின்றது'' என்கிறார் அவர்.
"அதிக வட்டிக்காக இந்தத் தொழிலைச் செய்தவர்கள், இப்பொழுது அடமானம் வைத்த பணத்தை விட பெரிதாக பணம் வருவதால், இப்படி சமூக விரோதச்செயல்களுக்கு வாகனங் களைத் தருகிறார்கள். வாங்குபவனுக்கு வண்டி யுடன் முகவரியும் வந்துவிடுவதால், சமூக விரோதச் செயலுக்கு இது எளிதாகிறது. என்னுடைய வண்டியைத் தர மறுக்கிறார் என்று புகார் வந்தவுடன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதும், கந்து வட்டி தடைச்சட்டத்தின் கீழ் அதிரடியும் காட்டினால் மட்டுமே இந்த பிட்டிங் கலாச்சாரத்தை குறைக்க முடியும்'' என்கிறார் வழக்கறிஞர் சிலம்பரசன்.
இந்த அசாதாரண சூழலில், கோவை மாநகர, மாவட்ட போலீசார் துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிட்டிங் கலாச்சாரத்தால் நடைபெறும் சமூக விரோதச் செயல்களைத் தடுக்க முடியும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.