"கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எந்த ஆதாரமும் சிக்கவில்லை' என கொடநாடு வழக்கை விசாரிக்கும் போலீசார் கூறுவதாக இணையதளங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. போலீஸ் என்ன சொல்கிறது?

"கொடநாடு வழக்கு என்பது இரண்டு அடுக்கு களைக் கொண்டது. முதல் அடுக்கில் கொடநாட்டில் கொள்ளையடித்த கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி, சந்தோஷ்சுவாமி போன்ற சாதாரண கொள்ளைக்காரர்கள். ஓம்பகதூர் என்கிற காவலாளியைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்ற விஷயம் அடங்கியது.

இரண்டாவது அடுக்கு, இந்தக் கொள்ளையை யார் செய்யச் சொன்னார்கள்? இந்தக் கொள்ளையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இந்தக் கொள்ளைக்கான சதித் திட்டம் எப்படி திட்டமிடப்பட்டது? இதனால் பலனடைந்தவர்கள் யார், யார்? என்பதுதான். இந்த இரண்டாவது அடுக்கில்தான் சஜீவன், ஆறுகுட்டி, அனுபவ் ரவி, கொடநாடு மேனேஜர் நடராஜன் மற்றும் சேலம் இளங்கோவன், எடப்பாடி ஆகியோர் வருகிறார்கள். இது ஒரு பெரிய சதித்திட்டத்துடன் நடத்தப்பட்ட கொள்ளை.

Advertisment

dd

இதில் கனகராஜ், சயான், ஜம்ஸீர்அலி ஆகிய மூவர், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரது அறைகளை உடைத்து ஆவணங்களைக் கொள்ளையடித்து அதை இளங்கோவனிடம் ஒப்படைத்தார்கள் என்கிறது முக்கியமான சாட்சியம். இந்த சாட்சியம்தான் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கொடநாடு கொள்ளை வழக்கை மறுவிசாரணைக்கு அழைத்துச் சென்றது. மறு விசாரணையில் சசிகலாவை விசாரணை செய்தபோது, கொடநாட்டில் சி.சி.டி.வி. இல்லை என பதில் சொன்னார். ஆனால், கொடநாட்டில் மந்திரிகள், கொடநாட்டு கேட்டின் முன்பு விழுந்து கும்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதை ஜெயலலிதா, சி.சி.டி.வி.யில் பார்ப்பார். அதேபோல் ஜெயலலிதாவின் அறை உடைக்கப்பட்டதை, ஜெயலலிதா அறையின் முன் சி.சி.டி.வி. இருந்ததை சாட்சியம் அளித்திருந்தார் வேலைக்காரர் லட்சுமி. அங்கொன்றும் இங்கொன்றுமாக கொடநாட்டில் சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்தன என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சஜீவனின் தம்பி சுனில், முக்கிய குற்றவாளியான விஜின்குட்டியின் நெருங்கிய நண்பர். சமீபத்தில் விஜின் குட்டியையும் அவரது சகோதரர்களையும் கொடநாடு போலீசார் மறுவிசாரணைக்கு அழைத்தனர். அந்த விசாரணையில், ஏற்கனவே குற்றவாளிகளை போலீசாரிடமிருந்து தப்பிக்க வைத்த சஜீவனின் தம்பி சுனில், அதே குற்றவாளிகளை மறுபடியும் போலீசில் ஒப்படைத்தார். சுனில் நடத்தைகளின் பின்னணியில் மாஜி மந்திரி வேலுமணி இருப்பது மறுவிசாரணையில் தெரியவந்துள்ளது.

கொடநாட்டிலிருந்து. அமைச்சர்கள் பற்றி பல விபரங்களை ஒரு கம்ப்யூட்டரில் ஜெ. சேகரித்து வைத்திருந்தார். அவர்கள் ஜெ.வுக்கும் சசிக்கும் தெரியாமல் சேர்த்த சொத்துகள் பற்றிய பல உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத் திருக்கிறார்கள். அவற்றை அவர்களுக்கே தெரியாமல் ஒரு கேமராவில் பதிவு செய்து அதை தனது கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க்கில் சேகரித்து வைத்திருந்தார் ஜெ. கொடநாடு கொள்ளையின்போது கனகராஜ், இந்த கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க்கையும் எடுத்துச் சென்றார் என்பது மறுவிசாரணை யில் கிடைத்த தகவல்.

இந்த கொள்ளையில் ஜெயலலிதாவின் பி.ஏ.வாக இருந்த பூங்குன்றன் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவர்தான் கனகராஜை வேலைக்கு சேர சிபாரிசு செய்தவர். அதேபோல் சஜீவன் மர வேலை செய்ய ஜெ.விடம் அனுமதி பெற்றுத் தந்தவர். பூங்குன்றனுக்கு பல ரகசியத் தகவல்கள் தெரியும். அவரை தோண்டித் துருவி விசாரித்த போலீசார், விசாரணை பற்றி வெளியே சொல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். அவரும் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார்.

கொள்ளை நடந்தபோது சஜீவன் துபாயில் இருந்தபடியே தனது தம்பி சிபி மூலம் எல்லாவற்றையும் கையாண்டுள்ளார். சஜீவனையும், எஸ்டேட் மேனேஜர் நடராஜனையும் மறுபடியும் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள். இதற்குப் பிறகுதான் இரண்டாவது அடுக்கு குற்றவாளிகளை நெருங்கப் பார்க்கிறார்கள்.

இதில் முக்கிய இடம் பிடிப்பவர் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சத்தியமூர்த்தி. கொள்ளையின் போது லைவ்வாக போன்கால் பேசப்பட்டுள்ளதாம். கனகராஜை கொலை செய்யப் போகும் தகவல் குற்றவாளியான விஜின்குட்டிக்குத் தெரிந்திருகிறது என்கிற அதிர்ச்சித் தகவலும் இப்போது வெளிவந்திருக்கிறது.

குற்றவாளிகளுடன் சேலம் இளங்கேவானுக்கு இருந்த நெருக்கம், அது எடப்பாடி வரை இருந்த தொடர்பு என ஸ்டெப்பை ஸ்டெப்பாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் தமிழக போலீசார்.

Advertisment