நக்கீரன் புத்தகத்தை எங்கெங்கோ இருந்து சீஸ்பண்ணி, எடுத்துட்டு வந்து, அவனவனும் நம்ம ஆபீஸ் வாசல்ல போட்டு எரிக்கிறான். இதுல என்ன கொடுமைன்னா, அப்ப வந்த நக்கீரன் அட்டைல ஜெயலலிதாவோட சூப்பர் படம் இருந்துச்சு. இவனுங்க என்னடான்னா, நக்கீரனை எரிக்கறதா நினைச்சி, அட்டைப் படத்துல கொழு கொழுன்னு இருக்குற ஜெயலிதாவையும் சேர்த்து அவய்ங்களே எரிக்கிறாய்ங்க.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல் றது இதத்தான். இது ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு. அப்ப, வெளில அந்த கும்பல்ல இருந்து கொஞ்சம் தள்ளிநின்ன தம்பி லெனின், எனக்கு போன் பண்றாரு.
வந்தவய்ங்கள்ல நாம பாத்த முகம் நிறைய இருக்குண்ணே, இந்தத் தெருவச் சேர்ந்த பலரும் அதுல இருக்காங்க. இந்த கும்பல்ல, அ.தி.மு.க.காரங்க இருக்காங்க. மகளிரணிக்காரங்க இருக்காங்க. ஆனா பேர பாத்தா, கட்சிக்காரங்க மாதிரியே தெரியல. வேற ஏதோ ஆளுங்க வந்து கலந்த மாதிரி இருக் குன்னு தம்பி ஒரு டவுட்ட சொல்றாரு. அதாவது பக்கா கிரிமினல்களா வந்துருக்கானுங்கன்னு சொல்ல வர்றாரு. அவனுங்க எங்க இருந்து வந்தானுங்க? எப்படி வந்தானுங்கன்னு என்னால யோசிக்கக்கூட முடியல. புற்றீசல் மாதிரி வந்துக்கிட்டே இருக்கா னுங்க. ’படீர் படீர்னு அடிச்சிக்கிட்டே இருக்கானுங்க.
மணி 11:00 இருக்கும்.
அப்ப, கிருஷ்ணமூர்த்தின்னு இன்னொரு அ.தி.மு.க. சண்டியராம். கைல மூணடி நீட்டு கொண்ட இரும்பு ராடை எடுத்துக்கிட்டு வர்றாரு. அவர் தலைமைல பொம்பளைக உட்பட நிறைய பேரு வர்றாங்க. எல்லா ஆளுக கைலயும் இரும்பு ராடு, தடிக்கம்பு, பட்டாக்கத்தின்னு விதவிதமான அயிட்டங்கள் இருந்திருக்கு. அவங்க ஏதோ போருக்குப் போற மாதிரி, வீர தீரமா ’லெப்ட் ரைட்’ போட்டபடி, பெருசா ஆரவார சத்தத்தை எழுப்பிக்கிட்டே வர்றாங்க.
அந்த கும்பல்ல இருந்தவனுங்க, லாங்ல இருந்தே கல்லை எறியறானுங்க. அந்த கல்லு நம்ம அலுவலகக் கதவுல தட்டி கீழ விழுந்தா, அதை எடுத்து இன்னொருத்தன் ஆபீசுக்குள்ள வீசுறான். அதுவும் உள்ளே விழலன்னா, அதை இன்னொருத் தன் எடுத்து எறியறான். இப்படி அவனவனும் மாறி மாறி ரிலேவா கல்லை எறிஞ்சானுங்க.
ஆபீசுக்குள்ள விழற கல்ல, நாம எடுத்து, அதைத் திருப்பி வெளில எறிய முடியாது. நாம திருப்பி அடிச்சா, அபென்ஸ்சுன்னு வேற மாதிரி கொண்டு போயிடுவாய்ங்க. அதனால, அதுல கவனமா இருந்து, திருப்பி அடிக்காதபடி நம்ம தம்பிகளப் பாத்துக்கிட்டேன்.
இப்பவும் சோடா பாட்டில் வருது. அது ’டம்மு டம்முன்னு உடைஞ்சி தெறிக்கிது. சும்மா சொல்லக்கூடாது, அடின்னா அப்படி ஒரு அடி... வெறித் தனமா அடிக்கிறானுங்க. அவனுங்க அடிச்சதை மட்டும் ஏன் இவ்வளவு தூரம் சொல்றேன்னா... அவ்வளவு ஃபோர்ஸா கொஞ்சம் கூட அசராம அடிக்கிறானுங்க. ஒவ்வொரு கல்லும், சோடா பாட்டிலும் விழ விழ... பகீர், பகீர்னு நெஞ்சை அடைக்குது. இவங்க வர்ற வேகத்த பாத்தா, இதோட கடைய மூடிட்டு ஊர்பக்கம் போறதா....? இல்ல எங்குட்டுப் போறது...?ன்னும், நம்மகூட இருக்கிற இவங்க கதி...? எல்லாம் முடிஞ்ச மாதிரி இருளடைஞ்சு இடிஞ்சு உட்காந்துட்டேன்.
ஜி.எம். சுரேஷ், கையில ஒரு பெரிய லிஸ்ட். பரபரப்பாய் வந்தார். அது வேற ஒண்ணுமில்ல. எந்தெந்த ஊர்ல அ.தி.மு.க.காரங்க நக்கீரனை கொத்துக் கொத்தா அபகரிச்சு எரிக்கிறது.... எந்த எந்த முகவர்கள் தாக்கப்பட்டாங்கன்னு இருந்துச்சு. லிஸ்ட் ரொம்ப நீளமா இருந்தது. என்கிட்ட காண் பிக்கும்போதே ஒரு போன்ல முகவர் பேசினார்.
அப்ப தெருமுனைல இருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட்ல இருந்து எனக்கு என்ன தகவல் வருதுன்னா... ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன்ல வளர்மதியும், கோகுலஇந்திராவும் உக்காந்துக்கிட்டு, அங்க இருந்து, "டேய் நீ போ... நீ இன்னும் போகலைல, நீ போடா... நீ ஓடுடா'ன்னு.. அவங்க ஆளுங்களையே, அவங்க கெட்டவார்த்தை சொல்லிக் கூப்பிட்டு, அட்டாக்குக்கு சாரி... சாரியா அனுப்பி வைக்கிறாங்களாம். இதுல அசிங்க அசிங்கமா, கெட்டவார்த்தை பேசறதில், வளர்மதிய அடிச்சிக்க ஆள் இல்லை. அவ்வளவு அன்பா அந்தம்மா கெட்டவார்த்தை பேசும். நம்ம நக்கீரன் அலுவலகத்தை அட்டாக் பண்றதுக்காக, அந்தப் படுபாவிக ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனையே தலைமையகமா மாத்திட்டாய்ங்க. அதுக்கு அப்ப இருந்த இன்ஸ். ராஜேந்திரனும் உடந்தை.
அவங்க அனுப்புன ஆளுங்கள, அப்ப நம்ம வாசல்ல இருந்த போலீஸ் ஏ.சி. செந்தில்குமார், "ஏம்பா நிக்கிற, நீதான் அடிச்சிட்டீல்ல நகரு... ஏய், நீ வா... வந்து அடிச்சிட்டு நகரு'ன்னு சொல்ற சவுண்ட் மட்டும் எனக்குக் கேக்குது. "அடப்பாவி களா... இப்படியா கூப்பிட்டுக் கூப்பிட்டு அடிக்க வைப்பீங்க?... நாசமா போவீய்ங்க'ன்னு நானே சொல்லிக்கிட்டேன்.
அதேநேரம் அ.தி.மு.க.வோட இன்னொரு முக்கிய அரசியல் தலைவர், ஒரு கும்பலை லீட் பண்ணிக்கிட்டு வர்றாரு. அவர் வேற யாருமில்ல, அண்மையில் மறைஞ்ச அ.தி.மு.க.வின் அவைத் தலைவரான மதுசூதனன். அவர் தலைமையில் வந்தவங்க நக்கீரனுக்கு எதிரா ஒரு தீர்மானத்தை எழுதி, அந்த தீர்மானத்துல "நக்கீரன் பத்திரிகையை தடை செய்து, நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்''னு வாசகத்தை வெறித்தனமா சத்தம் போட்டு படிச்சிட்டு, நக்கீரனை ஒரு பக்கம் எரிக்கிறாங்க. இதெப்படி... அவங்க நொம்மாவப் பத்தி செய்தி போட்டதுக்கு நாட்டை விட்டே நாங்க வெளியேறணுமா? நல்ல கதை... ஏய்யா...? ஊர கொள்ளையடிச்சி ஊருக்கு ஒரு அரண்மனையக் கட்டி வாழ்றவங்க நீங்க. நாட்ட விட்டு உங்கள அனுப்பணுமா? நாங்க போகணுமா?... யார் போகணும்னு மக்கள் சொல்லணும்.
இந்தப் பக்கம் பார்த்தீங்கன்னா, ஒரு பெரிய குரூப்பு. எனக்குப் பாடை கட்டி, என்னை மாதிரி மீசை எல்லாம் வச்சி, என்னோட கொடும்பாவிய செஞ்சி, தூக்கிட்டு வந்து, பொம்பள ஆளுக எல்லாம் வயித்துல வாயில அடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைக்கிறாங்க. அப்புறம் ’"டேய்... வாடா, வாடா'ன்னு என் பேரைச் சொல்லிக்கிட்டே செருப்பு, விளக்குமாறு வச்சி என் உருவ பொம்மையை அடிக்கிறாங்க. நல்லவேளையா அந்த நேரத்துல பிரஸ்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. எல்லாத்தை யும் படம் எடுத்தாங்க. அவங்கள நம்ம அலுவலகத் துக்குள்ள அனுமதிக்க முடியல. ஏன்னா, எந்த வடிவத்தில் எவன் வருவான்னு தெரியாது. அப்ப இன்னொரு காவல்துறை அதிகாரி வந்துட்டார்.
அவர் குரலும் கேட்குது. ’"ஏய் நீ அடிச்சிட் டீல்ல கிளம்பு... கிளம்பு... அடுத்து யாரு, "நீ வந்து அடிச்சிட்டுக் கிளம்பு'ன்னு’அவர் குடுக்குற சத்தமும் நமக்குக் கேக்குது. திருப்பதி வெங்கடாஜலபதிய பார்க்கப் போறவங்கள, ’ஜருகண்டி’ போட்டு விரட்டுவாங்கள்ல அது மாதிரி, "’நீ அடிச்சிட்டுக் கிளம்பு... வா, நீ அடிச்சிட்டுக் கிளம்பு'ன்னு அந்த ஏ.சி. அவங்கள ஸ்பீடு பண்ணிக்கிட்டே இருக்கார்.
அந்த நேரத்துல ஆவேசம் அடங்காத பொம்பள ஆளுக, என்னை திட்டிக்கிட்டே...’"ஏய் இங்கதான் நக்கீரன் வீடு இருக்கு. அந்த வீட்டுக்குள்ள பூந்துடுவோமா?'ன்னு ஒரு மாஃபை திரட்டறாங்க. இதையும் தம்பி லெனின் கவனிச்சிட்டு எனக்குச் சொன்னார்.
நம்ம வீடு, ஆபீசுக்கு பின்னாடி, மாடிலதான் இருக்கு. அதனால் வீட்டுக்கு வந்துபோகும், பக்கத்து சந்துக்குள்ள இருக்கும் கேட்டை எல்லாம் மூடி, அங்க ஒரு ஆறுபேரை பாதுகாப்புக்குப் போட்டோம். நாம அடி வாங்கினா பராவல்ல. நமக்காக நம்ம குடும்பத்தினர் அடிவாங்கறதை ஐயோ... நினைக்கவே பயங்கரமா இருக்கு. அதனால், அங்கயும் பாதுகாப்ப பலப்படுத்தியாச்சு.
இந்தச் சூழல்ல, ஏரியா மக்களோட நிலைமை எப்படி இருக்கும்னு நெனச்சிப் பாருங்க. ஏன்னா, அந்த ஏரியாவையே ஒரு போர்க்களம் மாதிரி ஆக்கிட்டானுங்க பரதேசிங்க. புதுசு புதுசா, வர்றான் அடிக்கிறான்... வர்றான் அடிக்கிறான்... இது தொடர்ந்துக்கிட்டே இருக்கு.
ஒருவழியா, மதுசூதனன் தன் கடமையை செவ்வனே பண்ணிட்டு கிளம்பிப் போயிட்டார். அடுத்து ஒரு காவிக் கூட்டம். அதாவது இந்துத்துவா குரூப்பு வருது. அவங்களும் அவங்க பாணியில் நக்கீரனுக்கு எதிரா “ஒழிக’கோஷம் போட்டாய்ங்க. அவிய்ங்கள பொறுத்தவரை ’"நாங்களும் வந்தோம்'னு’ ரிஜிஸ்டர்ல கையெழுத்து போடுற மாதிரி வந்திருக்காய்ங்க போல, அவிய்ங்கள மட்டும் போலீஸ் அங்கிருந்து அப்புறப்படுத்துச்சு. "இந்த ஃபோர்ஸான தாக்குதல் எப்ப நிக்கும்? இந்தக் கூட்டம் எப்ப கலைஞ்சி போகும்'னு தெரியலை.
நமக்கு திக்... திக்குன்னு ஹார்ட் பீட் எகுறுது...
(புழுதி பறக்கும்)